குப்பிளானில் களைகட்டிய தைப்பொங்கல் விழா: ஒரு சிறப்புப் பார்வை (Photos)


 

யாழ்.உடுவில் பிரதேச கலாசார அதிகாரசபையின் ஆதரவுடன் குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையம் நடாத்திய தைப்பொங்கல் விழா நேற்றுச் சனிக்கிழமை(14) பிற்பகல்-03 மணி முதல் குப்பிளான் வடக்கு விக்கினேஸ்வரா சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. 

 


 

இந்த விழாவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.கிருஷ்ணகுமார் பிரதம விருந்தினராகவும், வலி.தெற்குச் சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ம.தயாபரன், குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் க. காராளசிங்கம் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கனடா குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றப் பிரதிநிதி இ.மதியழகன், குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய முன்னாள் தலைவர் என்.சிவலிங்கம், குப்பிளான் வடக்குக் கிராம அலுவலர் நா.நவசாந்தன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். 

 


 

விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து குப்பிளான் கனடா விக்கினேஸ்வரா மன்றத்தின் நிதிப்பங்களிப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சனசமூக நிலைய மண்டபத்தில் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத் தலைவர் பொன். சந்திரவேல் தலைமையில் தைப்பொங்கல் விழா ஆரம்பமாகியது. குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் பொருளாளரும், ஆசிரியருமான செ.மகேஸ்வரராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.  


 

அதனைத் தொடர்ந்து தலைமையுரை, விருந்தினர்கள் உரை என்பனவும் நடைபெற்றன. விருந்தினர்கள் தமதுரைகளில் தைப்பொங்கல் பண்டிகை போன்ற பண்டிகைகளில் கொண்டாடப்படுவதன் அவசியம் தொடர்பிலும் இன்றைய சமூகச் சீரழிவிலிருந்து இளைய சமூதாயத்தைக் காப்பதற்கு எமது கலைகளின்  பங்களிப்புத் தொடர்பிலும் விளக்கமளித்தனர்.


இதன் போது குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய மாணவிகள், உடுவில் பிரதேச கலாசார அதிகார சபைக்குட்பட்ட மாணவிகளின் தனி நடனம்,குழு நடனம், பேச்சு,கவிதை போன்ற பல்வேறு கலைநிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன. 

 


 

விழாவில் விசேட அம்சமாக இடம்பெற்ற உடுவிலூர் சங்கரின் பாடும் நிலா இசைக்குழுவினரின் பக்திப்பாடல் இசை நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. குறித்த இசைக்குழுவில் மூத்த பாடகர்களான எஸ்.திவாகர், எஸ்.வாமதேவன்(வேலய்யா), பெண் பாடகர் திருமதி- மனோகரி சற்குணநாதன், இளம் பாடகர்களான எம்.ரவிசங்கர், எஸ்.அஜந்தன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 


பாடகர் எம்.ரவிசங்கரின் பிள்ளையார் சுழிபோட்டு நல்லதெல்லாம் தொடங்கும் என்ற நல்லதொரு ஆரம்பத்துடன் ஆரம்பமாகிய குறித்த இசை நிகழ்வில் எனை ஆறுமுகம்....எனை ஆளும் முகம்... போன்ற பல்வேறு பக்திப் பாடல்களையும் பின்னணி இசையுடன் பாடி பாடகர்கள் அங்கு கூடியிருந்த அனைவரையும் மெய்மறக்க வைத்தனர்.  

 


குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் செயலாளர் இ. நிரூபன் நன்றியுரை நிகழ்த்தினார். 

வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய முன்னாள் தலைவர்  பேராசிரியர் க. பாலசுப்பிரமணியம், தற்போதைய தலைவர், மாணவ,மாணவிகள், கிராமத்து மக்கள்,ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

உடுவில் பிரதேச கலாசார அதிகாரசபையின் ஆதரவுடன் குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையம் இணைந்து தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு முதன்முறையாக இவ்வாறான தைப்பொங்கல் விழாவை ஏற்பாடு செய்து நடாத்தியிருப்பது வரவேற்புக்குரியது. அதற்காக முன்னின்று உழைத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். 

 


 

ஆனாலும், தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகைகளில் முதன்மையானதாகப் போற்றப்படும் இத் திருநாளில் தமிழர்களின் பாரம்பரியக் கலை வடிவங்களான கும்மி, கோலாட்டம் போன்ற கலைநிகழ்வுகளையும் மேடையேற்றியிருந்தால் நன்று. 


அத்துடன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களையும் இவ்வாறான விழாக்களையொட்டி நடத்துவதன் மூலம் எமது இளைய சந்ததிக்கு எமது பாரம்பரியங்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியும். இந்த விடயத்தில் விழா ஏற்பாட்டுக் குழுவினர் கவனம் செலுத்தி எதிர்வரும் காலங்களில் செயற்படுவதுடன் இவ்வாறான விழாக்களை வருடம் தோறும் ஏற்பாடு செய்து நடாத்துவதும் எம்மனைவருக்கும் நன்மை பயக்கும். 

 

எழுத்துருவாக்கம் :- குப்பிளானிலிருந்து செ.ரவிசாந்-