குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி பற்றிய செய்தி தொகுப்பு. updated 04-06-2012


வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லைக் கிராமமான எமது குப்பிழான் கிராமானது கடந்த இரு தாசப்தங்களாக போரின காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. எமது கிராமத்தின் பெரும்பாலான மக்கள் வெவ்வேறு பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார்கள். அதுவும் குறிப்பாக எமது விளையாட்டு மைதானத்தின் வடக்கு பகுதி முற்று முழுதாக மக்கள் வசிக்காத வெறும் சூனிய பிரதேசமாக விளங்குகின்றது. பெரும்பாலான நேரங்களில் அந்தப் பகுதி மக்கள் நடமாட்டமின்றி காணப்படும். அந்த சூனிய பிரதேசத்திலேயே எமது விளையாட்டு மைதானமும் அமைந்துள்ளது. சாதாரணமாகவே அந்தப் பகுதிக்கு போவதற்கே பல தடவைகள் சிந்திக்க வேண்டிய நேரத்தில், யாழ் மாவட்ட ரீதியில் ஒரு உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியை நடாத்த எடுக்கப்பட்ட அந்த முடிவானது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும்.

எமது கிராமமோ எங்கோ ஒரு மூலையில் எந்த வித பிரபல்யம் இல்லாமல் இருக்கிறது. வாழ்ந்த மக்களும் இடம்பெயர்ந்து விட்டார்கள். இவ்வளவு அணிகளை கொண்டு வர வேண்டும், பார்வையாளர்கள் வர வேண்டும், ஒருவித பிரச்சினைகள் இல்லாமல் நடாத்த வேண்டும் இது சாத்தியமா. கடந்த மாதம் 2ம் திகதி வரை இது சாத்தியம் இல்லை என்று தான் நாம் எல்லோரும் நினைத்தோம். கடந்த 35 ஆண்டுகளாக இப்படியான யாழ் மாவட்ட ரீதியான விளையாட்டுக்கள் நடைபெறவில்லை. எமது கிராமத்திற்குள்ளேயே பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. அதுவும் 83ம் ஆண்டு வரை தான். அதன் பிறகு சிறிய நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆனால் அந்த நினைப்பையெல்லாம் பொய் என்று நிரூபித்து இருக்கிறார்கள் திரு நீருபன் தலைமையிலான புதிய விளையாட்டுக் கழக நிர்வாகம்.02-02-2012 புதன்கிழமை ஆரம்பமாகிய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி 27-05-2012 ஞாயிற்றுக்கிழமை இனிதே நிறைவு பெற்றது. டாக்டர் மகாலிங்கம் அவர்களின் குடும்பத்தினர் இந்த நிகழ்வுக்கு அனுசரணை வளங்கினர். யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 28 பிரபல்யமான விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன. இறதிப் போட்டியானது யாழ் பல்கலைகழக அணிக்கும், றோயல்(வெள்ளை) அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இதில் யாழ் பல்கலைக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கி கொண்டது. இந்நிகழ்வுக்கு யாழ் மாவட்ட மத்திஸ்தர் சங்கம் முழு ஆதரவை வழங்கியிருந்தனர். அதை விட கனடா மக்கள் மன்றம் இறுதி 3 நிகழ்வுகளை ஒளிப்பதிவுகளை செய்வதற்கு அனுசரணை வழங்கினர். ஒரு மாதகாலமாக நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வை எமது கிராம மக்கள் மட்டுமன்றி பெருமளவு வெளியூர் மக்களும் கலந்து கொண்டனர். பிரபல்யமான கழகங்கள் பங்குபற்றியபடியால் அதன் ஆதரவாளர்கள் யாழ் மாவட்டம் முழுவதிலும் இருந்தும் வருகை தந்து நல்லாதரவை வழங்கினர். விளையாட்டின் ஆரம்பம் முதல் இறுதி வரை 13,000 க்கு மேற்பட்ட ரிக்கற்றுக்கள் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிப் போட்டிகள் மிகவும் சிறப்பாகவும் மிகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டன. இந்த இறுதி நிகழ்வுக்கு மட்டும் 5000க்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கு பற்றியிருந்தனர்.இந்த நிகழ்வுகளை பார்வையிட்ட பலர் விளையாட்டுக் கழகத்தினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர். அதற்கு மேல் பாராட்டுதல்களோடு திரு சபேசன் அவர்கள் 10,000 ரூபாவும், வை.குமாரசுவாமி அவர்கள் 5,000 ரூபாவும் வழங்கினார்கள். அதை விட உலகெல்லாம் வாழ்ந்து வரும் வெளிநாட்டு ரசிகர்கள் தொலைபேசி மூலம் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வுகளை நடாத்தி முடிப்பது இலகுவான விடயம் அல்ல அதற்கு நேரம், தமது கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். அதைவிட பொறாமை காரணமாகவும், குடும்ப பகை காரணமாகவும் இந்த நிகழ்வுகளை குழப்புவதற்கு முயற்சி செய்துள்ளார்கள். குறுகிய எண்ணங்கள் கொண்ட அந்த மனிதர்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்த நிகழ்வை திறமையாக நடாத்தி எமது கிராமத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.

செய்தியாக்கம் - திரு ந. மோகனதாஸ்
தகவல்கள் - திரு தி.சசிதரன்