குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையும் அதற்கான பதில்களும். updated 07-12-2013

குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் சார்பில் நிரூபன் அவர்கள் 7 பக்க கடிதத்தை அனுப்பியுள்ளார். அதனை இங்கு பிரசுரிக்கின்றோம் அதனோடு எனது பதிலையும் பிரசுரிக்கின்றேன். எல்லோருக்கும் தமது நியாயபூர்வமான கருத்துக்களை தெரிவிப்பதற்கு உரிமையிருக்கின்றது. நான் எனது கருத்தை மட்டும் திணிக்க விரும்பவில்லை. ஆனால் எது சரி பிழை என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடம் விட்டு விடுகின்றேன்.ஆரம்பத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள் எமது ஊடகம் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கு முழு ஆதரவையும் வழங்கி பல பரப்புரைகளையும் செய்திருந்தோம். இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே ஊர் மக்களை ஒன்றிணைப்பதும் ஊரின் வளர்ச்சியில் எல்லோரும் பங்கு பற்றுவதற்கான உந்து தலை கொடுப்பதும் ஆகும். அதே சமயம் செய்யும் நல்ல வேலைகளை ஆதரித்தும் பிழைகளை சுட்டிக்காட்டுவதும் ஆகும். நீங்கள் செய்பவற்றை எல்லாம் கண்மூடிக்கொண்டு ஆதரித்தால் எனக்கு மாலை மரியாதை செய்வீர்கள் என்றும் எதிர்த்து நின்றால் கல்லால் எறிவீர்கள் என்றும் தெரியும் ஆனாலும் எனது ஊடக தர்மம் மற்றும் மனச்சாட்சியை அடகு வைக்க முடியாது.

நான் கடந்த ஆகஸ்ட் மாதம் விடுமுறையில் ஊருக்கு சென்றேன். அங்கு சென்று சகல விடயங்களையும் அவதானித்தேன். பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்தேன். ஊரில் உள்ள சில அமைப்புக்கள் தங்களிடையே முரண்பட்ட நிலையில் இருந்ததை அவதானித்தேன். இது ஊரின் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் பாதிக்கும் விடயமாக எல்லோராலும் நோக்கப்பட்டது. ஊரின் கல்வி, விளையாட்டு,எமது மதம் என்ற ரீதியில் இருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கட்ட முனைந்தேன்.

அந்த வகையில் குறிஞ்சிக்குமரன், விக்கினேஸ்வரா என்ற இரண்டு கழகங்கள் இயங்கி வருவதை நீங்கள் அறிவீர்கள். அவர்களை ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளை கழைய முடியும் என்று நம்பினேன். அதே சமயம் ஊரின் ஒற்றுமை பாதுகாக்கப்படும், எமது விளையாட்டுத்துறையும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்த்தேன். கடந்த காலங்களில் எமது ஊரின் விளையாட்டுத்துறைக்கு கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதை யாவரும் அறிவீர்கள் ஆனால் நமக்குள் ஒற்றுமை இல்லை என்றால் எவ்வளவு கோடியை கொட்டினாலும் எந்த பலனும் கிடைக்க போவதில்லை.

அந்த வகையில் குறிஞ்சிக்குமரன் நிர்வாகிகளை சந்தித்து ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டோம். இந்த கலந்துரையாடலின் போது அவர்கள் செய்த தவறுகளை தெரியப்படுத்தினோம் குறிப்பாக பிரதேசவாத கருத்துக்களை உத்தியோகபூர்வ சமூக தளத்தில் பிரசுரித்தமை போன்ற பல விடயங்களை தெரியப்படுத்தினோம். அவர்கள் கடந்த காலங்களில் செய்த தவறுகளை ஒத்துக்கொண்டு இனி அந்த பிழைகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம் என்ற உறுதிமொழியை தந்தார்கள். அதே சமயம் தாம் ஏன் பிரிந்து வந்து புதிதாக ஒரு மைதானம் உருவாக்கினோம் என்ற காரணத்தையும் தெளிவு படுத்தினார்கள். நாங்கள் கூறினோம் இப்போது 2 கழகங்கள் உள்ளன அவர்களுக்கு இரண்டு மைதானங்கள் உள்ளன. உங்கள் தனித்துவங்கள் உங்கள் கட்டமைப்பை இனி விட்டு வந்து ஒன்றாக ஒரு கழகமாக எதிர்காலத்தில் இருப்பது சாத்தியமல்ல. ஆனால் ஊருக்கு வெளியில் சென்று விளையாடும் பொழுது ஒன்றாக சேர்ந்து ஒரு அணியாக செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.அதற்கு அவர்கள் ஒரு லீக்கில் சேர்ந்து விளையாட சம்மதித்தார்கள். காலம் காலமாக விக்கினேஸ்வரா என்ற பெயரில் தான் வெளியில் சென்று விளையாடுவார்கள் நீங்கள் அந்த பெயரில் விளையாட சம்மதமோ என்று கேட்டோம்.அதற்கு அவர்கள் தங்களால் இப்போது முடிவு எடுக்க முடியாதுள்ளதாகவும் ஆனால் உங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்வோம் என்றார்கள். அவர்கள் ஒரு கருத்தை தெரிவித்தார்கள் விக்கினேஸ்வராவில் உள்ளவர்கள் இதற்கு சம்மதம் தெரிவிப்பர்களா என்றும் எங்களோடு கதைத்த மாதிரி அவர்களோடு கதைக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்கள். இரு பகுதியிலும் வயது போனவர்களை கொண்ட ஆலோசனை சபை உருவாகுவதற்கும் சம்மதித்தார்கள்.

அதன் பிறகு விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கும் எமக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதில் விக்கினேஸ்வரா மன்ற பிரித்தானியா பிரதிநிதிகளும் பங்கு பற்றியிருந்தனர். இந்த சந்திப்புக்கு செயலாளர் பொருளார் போன்ற முக்கிய உறுப்பினர்கள் பங்கு பற்றவில்லை தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் தான் பங்கு பற்றியிருந்தனர். தலைவர் மட்டும் தான் கதைத்தார் மற்றவர்கள் ஒன்றும் பேசாமல் இருந்தனர். இதன் போது விக்கினேஸ்வரா விட்ட பல தவறுகளை சுட்டிக் காட்டியிருந்தோம் ஆனால் தலைவர் அவர்கள் எந்த தவறுகளையும் ஒப்புக்கொள்ளவில்லை. சில சமயங்களில் ஆத்திரப்பட்டார். நாங்கள் பல விடயங்களை பற்றி தான் கதைக்க வந்தோம். உதாரணமாக கோயில் நிர்வாகத்திற்கும் விளையாட்டுக்காகத்திற்கம் இடையான பிரச்சினை உட்பட பல விடயங்கள் இருந்தன. அவர் ஒவ்வொரு கதையும் சொல்லும் போது மிகவும் கோவப்பட்டார். தாங்கள் செய்த தவறை ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் அவரிடம் இருக்கவில்லை. அதனால் மற்ற விடயங்களை கதைக்க முடியவில்லை. சில நண்பர்கள் அவசரமாக செல்ல வேண்டி இருந்ததாலும் மிகுதி பேர்கள் தொடர்ந்து இருந்து கதைத்திருக்கலாம் ஆனால் இவரோடு கதைத்து பிரயோசனம் இல்லை என்ற ரீதியில் நாங்களும் வெளியேறினோம். சேர்ந்து விளையாடுவது சம்பந்தமாக அவர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. தங்கள் கொமிற்றியில் உள்ள எல்லோரும் சம்மதித்தால் தான் அதற்கு உடன்படுவோம் என்று கூறி சமாளித்தார். ஆனால் அவர் உளபூர்வமாக விரும்பவில்லை என்பதை அவரின் உரையாடலில் அறிந்து கொண்டோம். ஆனாலும் அன்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன காரணத்திற்காகவோ தெரியவில்லை சேர்ந்து விளையாட சம்மதித்தார். அதோடு சரி அதற்கு பிறகு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
இது தான் நடந்த சம்பவம். இதை விட பல சம்பவங்கள் இருக்கு எல்லாவற்றையும் குறிப்பிட்டால் பல பக்கங்கள் வேண்டும்.

அவரின் அறிக்கையை பார்ப்போமானால் பெரிய சாதனைகளை செய்து முடித்துவிட்டதாகவும் அதன் காரணமாக எல்லோரும் தம்மீது பொறாமை கொண்டுள்ளதாகவும் அதன் வெளிப்பாடே இந்த விமர்சனங்கள் என்கிறார். அவர் ஆரம்பத்தில் ஒரு விளையாட்டு நிகழ்வை திறமையாக நடாத்தி முடித்தார் அதை விட சில சமூக வேலைகளும் செய்தார். அதனால் திருப்தி அடைந்த ஊர் பெரியவர்கள் மற்றும் புலம் பெயர் அமைப்புக்கள் அவருக்கான ஒரு அங்கிகாரத்தை வழங்கினோம். மைதானம் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கோடு புலம்பெயர் மண்ணிலிருந்து வருகை தந்த முக்கிய கொடையாளி திரு சசிதரன் மற்றும் திரு கணேசலிங்கத்தினூடு இந்த வேலைத்திட்டத்தை மேற்கொள்ள விரும்பினார். ஆனால் அவர்கள் திரு நீருபன் தலைவராக இருக்கிறார் தமிழ்ச்செல்வன் பொருளாளராக இருக்கிறார். அவர்களை நம்பி பணத்தைக் கொடுக்கலாம் என்றனர். அவரும் ஆரம்ப தொகையை கொடுத்து விட்டு நாடு திரும்பினார். அந்த பணம் விளையாட்டுக் கழக கணக்கில் இடப்பட்டது. அதன் பிறகு என்ன காரணத்தாலோ தெரியவில்லை பணம் முழுவதும் தலைவரின் வங்கி கணக்குக்கு அனுப்பபட்டது. இதனால் மனமுடைந்த தமிழ்செல்வன் இராஜினாமா செய்தார். அதே நேரம் செயலாளராக இருந்தவர் சிறுநீரக நோயால் பாதிப்படைய அவரின் பதவியும் அயலூரை சேர்ந்த அயனுக்கு வழங்கப்பட்டது. பொருளாளராக சங்கர் நியமிக்கப்பட்டாலும் அவரிடம் கணக்கு விபரங்கள் ஒப்படைக்கப்படவில்லை அல்லது அவரை பொம்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். கொடையாளி தனி நபருக்கு பணத்தை அனுப்பும் போது நிர்வாகம் என்பது தானாகவே செயலிழக்கும். இதனால் சகலதும் ஒரு தனி நபரின் ஆதிக்கத்தில் வந்தது. நிர்வாகம் என்பது தேவை இல்லாத ஒன்றாகியது.

நான் ஊரில் இருந்த போது இதில் நிதி ரீதியான முறைகேடுகள் நடந்திருப்பதாக பேசிகொண்டார்கள். அதனால் தலைவரிடம் சொன்னேன் எவ்வளவு விரைவாக உங்கள் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகிறீர்களோ அது தான் உங்களுக்கும் நல்லது எமது கிராமத்திற்கும் நல்லது என்றேன். அதற்கு தலைவர் சம்மதித்தார். வேலை முடிந்து 6 மாதங்கள் ஆகின்றன கணக்கறிக்கை வெளியிடப்படவில்லை. முக்கிய கொடையாளியும் தனக்கும் இந்த வரவு செலவு அறிக்கையை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லிவிட்டார். அவர்களுக்கு வேண்டாம் என்றால் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. ஆனால் மற்ற பொதுமக்கள் இதை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளனர். ஒவ்வொரு பொது அமைப்புக்களும் வெளிப்படைத்தன்மையுடன் இயங்க வேண்டும். அந்த நிறுவனங்களை கேள்வி கேட்கும் தகவல் அறியும் உரிமை எல்லோருக்கும் உள்ளது. சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க முடியும். சில கொடையாளிகள் சொல்லும் கருத்து இது தான் நாங்கள் எங்கள் காசைக் கொடுக்கின்றோம் அதற்கு கணக்கு காட்ட தேவையில்லை எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறோம் என்கிறார்கள். இதனால் அந்த அமைப்புகளுக்கிடையே பெரும் பிளவுகள் ஏற்பட்டு குப்பிழான் விளையாட்டுத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் எல்லா வசதியும் இருக்கின்றது. விளையாடுவதற்கு தான் ஆட்கள் இல்லை. பல லட்சங்களை கொட்டுவதால் மட்டும் எமது ஊரை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. ஒழுக்கமான, நேர்மையான, ஒற்றுமையான சமூகமாக வளர உங்கள் ஒத்துளைப்பு தேவை. அவர்களை மன்றாட்டமாக கேட்பது இது தான் உங்கள் சொந்த பணம் தான் அனால் கணக்கு காட்ட தேவையில்லை என்று சொல்வதும் மற்றும் பணத்தை தனிநபர்களுக்கு அனுப்பி வைப்பதும் எல்லா அமைப்புக்களுக்கும் பிழையான வழிகாட்டல்களையும் செய்தியையும் கொடுப்பதாக அமையும்

அவரின் கேள்விக்கு சுருக்கமான பதில்

- நீங்கள் மைதானத்தை புனரமைப்பு செய்து சாதனை புரிந்துவிட்டதாக கூறுகின்றீர்கள். ஆனால் இந்த மைதான புனரமைப்பு என்பது கட்டிட ஒப்பந்த காரர் மூலம் செய்து முடிக்கப்பட்டது. பணம் இருந்தால் யாரும் இந்த வேலையை செய்விக்கலாம் நீங்கள் தான் செய்யணும் என்றில்லை , ஆனால் ஊரை ஒற்றுமைப்படுத்தி நல்ல ஒரு ரீமை உருவாக்கியிருந்தால் அது ஒரு சாதனையாக இருக்க முடியும்.

- வாசிகசாலை வேலை தாமதத்திற்கு காரணம் என்வென்று வாசிகசாலை நிர்வாகத்தை கேட்ட பொழுது தங்களை சுதந்திரமாக இயங்க விட்டிருந்தால் எப்பவோ வேலையை முடித்திருக்க முடியும் என்று குறிப்பிடுகின்றார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை திரு சிவலிங்கம் அவர்கள் நேர்மையான மனிசன் அவர் வரவு செலவு கணக்கை வெளியிடுவார்.

- மயூரன் தலைமையில் ஒரு சிறந்த நிர்வாகம் இருந்தது. நீங்கள் திட்டமிட்டரீதியில் அவர்களுக்கு பல பிரச்சினைகளை கொடுத்து நிர்வாகத்தை கைப்பற்றினீர்கள். சரி நீங்களும் இருந்து கொண்டு அவர்களுக்கும் நிர்வாகத்தில் ஒரு பங்கை கொடுத்திருக்கலாம் தானே. குறிஞ்சிக்குமரன் தனி மைதானம் வாங்குவதற்கு நீங்கள் தான் காரணம்.அதை விட்டுவிட்டு ஊரை பிரித்து விட்டார்கள் என்று இப்போது புலம்புகிறீர்கள்.

- வீரவாகு குகன் அவர்களுக்கு காணிக்கு காணி கொடுத்துள்ளீர்கள் அது உண்மை தான் ஆனால் அவர் காணி தர மறுத்திருந்தால் இந்த மைதான அபிவிருத்தியை செய்திருக்க முடியாது. அவர்களுக்கு மாலை போட்டிருக்க தேவையில்லை கடைசி அவமானபடுத்தாமல் விட்டிருக்கலாம்.

- முழுக் காணியையும் 20 லட்சம் செலவில் வாங்கினீர்கள் றோட்டுக் கரையோரமாக உள்ள காணியை குகனுக்கும். பின்புறமுள்ள காணியை சசிக்கு விற்றுள்ளீர்கள். அவர் 4 பரப்பு காணியையும் 9 லட்சத்துக்கு வாங்கினார் உங்களுக்கு ஒரு லட்சம் நட்டம் என்று பெரிய அறிக்கைகள் எல்லாம் விட்டீர்கள். முன் காணியும் பின் காணியும் ஒரே பெறுமதியா? அவர் இப்பவும் பணத்தை திருப்பி கொடுத்தால் காணியை மீளளிப்பதாக குப்பிட்டுள்ளார்.

- உங்கள் புத்தகம் தொடக்கம் மைதானம் எல்லாம் ஒரு தனி நபர் தான் செய்தார் என்று போடப்பட்டிருக்கின்றது. மற்றவர்கள் ஒன்றுமே செய்யவில்லையா?

- புத்தகம் என்பது ஒரு அழியா சொத்து அதில் தேவையில்லா பிரச்சினைகளையும் மற்றும் பிரபாவுக்கும் உங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினைகளை போட வேண்டுமா. அந்த பிரச்சினை முடிந்து திறப்பு விழாவும் முடிந்து விட்டது. அவர் உங்களோடு கருத்து மோதல்களில் மட்டும் தான் ஈடுபட்டார், மைதானத்திற்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை. அவர் சட்ட ரீதியாக பல வேலைகளை செய்திருக்கலாம் அவர் அது ஒன்றும் செய்யவில்லை. அவருக்கும் ஊர் பற்று இருக்கு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் மட்டும் ஊர் விசுவாசிகள் போலவும் மற்றவர்கள் துரோகிகள் போலவும் புத்தகம் முழுவதும் எழுதியுள்ளீர்கள்.

- விக்கினேஸ்வரா பெயரை மாற்றினால் உயிரை விடுகிறமாதிரி சொல்லுகிறீர்கள் ஆனால் பெரும்பாலனவர்கள் தலைவர் உட்பட குறிஞ்சிக் குமரனில் இருந்து வந்தவர்கள் தான் அப்போது விக்கினேஸ்வரா என்ற பெயரே ஞாபகத்தில் வரவில்லையா.

- நீங்கள் மாடு என்ற பெயரில் கூட ஒற்றுமையாக விளையாடச் சென்று தோற்று வந்தாலும் எங்களுக்கு பெருமை தான். ஒற்றுமையை காணோம் பெயர் என்ன வேண்டி இருக்கு. இப்போது காசு கொடுத்து வெளியூரிலிருந்து விளையாட்டு வீரரை விலைக்கு வாங்க முயற்சிக்கின்றீர்கள்.

இன்னும் பல விடயங்கள் இருந்தாலும் இத்துடன் முடிக்கின்றேன். அதே சமயம் உங்களுக்கும் எனக்கும் எந்த விதமான தனிப்பட்ட முரண்பாடுகளும் இல்லை இது ஒரு நட்பு ரீதியான பதில் தான். நீங்கள் செய்த பிழைகளை உணர்ந்து எமது ஊரின் வளர்ச்சிக்கு உதவீர்களாயின் பழைய விடயங்களை மறப்போம் மன்னிப்போம்.


உங்கள் கருத்துக்களையும் தாருங்கள் பிரசுரிப்போம். அனுப்ப வேண்டிய முகவரி kuppilan@hotmail.com. உங்கள் கருத்துக்கள் உண்மையாகவும் தலைப்புக்கு வெளியில் செல்லாமலும் இருக்க வேண்டும். அதில் உங்கள் சொந்த பெயர் இடம்பெறவேண்டும். மேலும் இது சம்மந்தமாக யாரும் தயவு செய்து தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டாம். உங்கள் எழுத்து மூலமான பதில்களை எதிர்பார்கின்றேன்.

நன்றி
குப்பிழான் வெப் இயக்குனர்.

 

 

ஒன்றரை இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட வலைபந்தாட்டு மைதானத்தின் தற்போதைய நிலை.விக்கினேஸ்வராவால் பாவிக்கப்பட்ட பழைய கோல் போஸ்ட். இதனை குறிஞ்சிக்குமரன் ஒரு விலைக்கு கேட்ட பொழுதும் அதை கொடுக்காமல் விணாக பொது அமைப்பின் பணம் விரையமாக்கப்படும் காட்சி.

 

பொதுமக்களின் கருத்துக்கள்.

வணக்கம் . குப்பிழான் வெப் இணையத்தில் வெளியான  விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக உங்கள் இனையத்தின் வாயிலாக சில கருத்துக்களை  பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
அவர்களின் அறிக்கையிலே சில இடங்களில் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் தொடர்பாகவும் அக்கழகத்தின் மைதானம் உருவானது தொடர்பிலும் சில தவறான கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆகவே
குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகத்தின் ஆரம்பகால உதைபந்தாட்ட  அணியை உருவாக்கியவர்களில்  நானும் ஒருவன் என்ற வகையிலும் மற்றும்  புதிய மைதானம் அமைவதற்கு  இணைந்து  செயற்பட்டவர்களில் ஒருவன் என்ற வகையிலும் சில தகவல்களை  அறியத்தர விரும்புகிறேன். 
விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழகம் என்பது புதிதாக தொடங்கப்பட்ட கழகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால்  அந்தக் கருத்து உன்மையான ஒன்றல்ல காரணம்  எமது விளையாட்டுக்கழகமானது ஆரம்பகாலத்தில்(1980)
எமக்கு  மூத்தவர்களால் கரப்பந்தட்டம் மட்டுமே விளையாடப்பட்டது ஆனால் வருடா வருடம் கன்னிமார் ஆலயத்திற்கு சொந்தமான காணியிலே இல்ல விளையாட்டுப்போட்டிகள்  நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது : அந்தக் காலத்திலிருந்தே எமக்கான ஒரு மைதானம் இல்லை என்ற ஏக்கம் எமக்கெல்லாம் இருந்ததை இன்றையவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.   அதன் பின்பு வந்த நாட்டு நிலமை காரணமாக  ஊர் இளைஞர்கள் புலம்பெயரத் தொடங்கியதும்  எமது கழகத்தின்  செயற்பாடுகளும்  மந்தமடையத்தொடங்கியது . ஆனால் எமது சனசமூக நிலையம் இயங்கியவண்ணமே இருந்தது; அதன் பின் 10 வருடங்களின் பின் (1990_1991)களில் நானும் எனது நண்பன் கந்தையா.காந்தரூபனும் இணைந்து எமது கிராமத்தில் உள்ள இளைஞர்களையும் இணைத்து  முதன்முறையாக  குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட அணியை உருவாக்கினோம்.அப்போதும் எமக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது  எமக்கான மைதானம் ஒன்று இல்லாமையே.அந்த காலகட்டத்தில் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம்  இயங்காமல் இருந்தது.எமக்கான மைதானம் இல்லாத காரணத்தால் நாம்  வேறு உரிமையாளர்களின் காணிகளிலே தற்காலிகமாக விளையாடிவந்தோம். அதனால் நாங்கள் பல இன்னல்களை அனுபவித்தோம் .அந்த காலத்தில் ஒரு தடவை எமது விளையாட்டுக் கழகம் இல்லவிளையாட்டுப் போட்டிகளையும் நடத்தியது .இறுதியாக  (1992) எமது கழக உறுப்பினர்கள் இனைந்து  தயிலங்கடவை வைரவர்ஆலயத்திற்கு அருகில் இருந்த பற்றைக் காணியை துப்பரவு செய்து  அதிலே எமது கழகம் விளையாடிக்கொண்டிருந்தது.அந்த மைதானத்திலே நாம்  எமது ஊரின் மாவீரர் ஒருவரின் ஞாபகார்த்தமாக ஒரு உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியையும்  நடத்தியிருந்தோம். அந்த போட்டியின் இறுதிச்சுற்றில் மயிலன்காடு ஞானகலா விளையாட்டுக்கழகம் வெற்றிக்கோப்பையை தட்டிச்சென்றது.அதன்பிற்பாடு சில அனர்த்தங்களால் நாம் புலம்பெயர நேரிட்டதும் சிறிது காலம் எமது கழகம் இயங்கமுடியாமல் போனது. அதன் பிற்பாடு வளர்ந்து வந்த தலைமுறையினர் மீன்டும் எமது கழகத்தை சட்டப்படி பதிவு செய்து  புத்தியிர் ஊட்டி வளர்தெடுத்தார்கள். அப்போதும் அவர்களின் பிரச்சனை மைதானம் ஒன்று இல்லாமையே.அவர்கள் விளையாடிய காணி உரிமையாளர் அந்த இடம் தனது பாவனைக்கு வேண்டும் என்றதன் பிறகே எமது கழகத்தினர் தங்களுக்கு மைதானம் ஒன்று வேண்டும் என்ற கோரிக்கையை எமக்கு விடுத்தார்கள். முன்னைய காலத்தில் எமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமும். இன்றைய காலத்தில் எமது அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்தையும் கவனத்தில் கொண்டே நாம் மைதானம் அமைக்கும் பணிக்காக புலம்பெயர் உறவுகளிடம் நிதிஉதவிகளை நாடினோம். அப்போதுதான் நாங்களே எதிர்பாராத பிரிவினைவாதம் செய்கின்றோம் என்றார்கள் . அப்படி பிரிவினைவாதம் செய்கிறோம் என்றால் நாம்  எதற்காக முதலிலே விக்கினேஸ்வரா  மன்றம் கனடா  விடம் எங்களுக்கான மைதானத்தின் நிதி உதவியை கோரியிருந்தோம். அவர்களும் அதற்கு பல நிபந்தனைகள் வைத்தார்கள்.அதனாலே எங்கள் ஊர் உறவுகளின் உதவியுடன் எமது கழகத்திற்கான மைதானத்தை அமைத்தோம்;
எங்கள் 30 வருட கனவு இதை பிரிவினைவாதத்திற்குள் அடக்க நினைப்பது சரியா?
எங்கள் நோக்கம் எமது ஊரன குப்பிளானின் வளர்ச்சி யும் எமது இளந்தலைமுறையினரின் நல்ஒழுக்கமுமே.
அதை விட ஒரு அமைப்பின் நிர்வாகம் என்பது நம்பிக்கைத் தன்மையும் உயிரோட்டமும் உள்ளதாக  அமைந்திருத்தல் மிகவும் அவசியமானது .இல்லையேல் அதன் வளர்ச்சி என்பது கேள்விக்குறியானதே.
ஒவ்வொருவரும் தமது  கசப்புணர்வுகளை மறந்து பெருந்தன்மையுடன் எமது கிராமத்தின் வளர்ச்சிக்கு ஒற்றுமையுடன் பாடுபடவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.எங்கள் சமய கலாச்சார விளுமியங்களை யும் கட்டிக்காப்பது அவசியமானது.

நன்றி
தங்கராசா.மோகன்
சுவிஸ்