குப்பிழான் யுவதியை கோரமாக கொலை செய்த அவரின் கணவன் 5 வருடங்களின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.


எம்மால் பிரசுரிக்கப்பட்ட முன்னைய செய்தி

 

கனடாவில் கணவனால் குத்திக் கொல்லப்பட்ட குப்பிளான் பெண்ணின் உண்மை நிலவரம்! updated 18-08-2012குப்பிளானில் பிறந்து கனடாவில் வசித்து வந்த பாஸ்கரனின் இரண்டாவது மகளான அனுஜா அவர்கள் மது போதையில் இருந்த கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குப்பிளானைச் சேர்ந்த அப்புத்துரை அவர்களின் மூத்த மகனான பாஸ்கரன் அவர்களின் இரண்டாவது மகளான அனுஜாவே இவ்வாறு கொடூரமான முறையில் கொல்லப்பட்டவராவார். 

கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு வயது 21 என்பது தான் கொடுமையின் உச்சம். கடந்த வருடம் ஐப்பசி மாதம் இவர்களுக்கு திருமணப் பதிவு இடம்பெற்றுள்ளது. இன்னமும் திருமணம் இடம்பெறவில்லை. ஆனால் இருவரும் கனடாவில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

ஏற்கனவே குடித்துவிட்டு பிரச்சினை பண்ணி இந்த பெண்ணை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் இந்த வீரக் கணவர். கணவனின் கொடுமை தாங்காத குறித்த பெண் தனிமையில் அடிக்கடி அழுது வந்துள்ளார்.. 

கணவனின் கொடுமை தாங்காத நிலையில் கனேடியப் பொலிஸாருக்கு குறித்த பெண் அறிவித்த காரணத்தினால் இரண்டொரு முறை சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். பிறகு ஒற்றுமையாக இருக்க முயற்சித்தபோது பெண்ணை கணவன் கத்தியால் குத்தி சாகடித்துள்ளார். 

குறித்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட தாத்தா அப்புத்துரை அவர்களும் பெண் பிள்ளையை வளர்த்த இராஜதுரை அவர்களின் மனைவியான தவேஸ்வரி மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்து இன்னமும் அதிர்ச்சி விலகாமல் உள்ளனர். கத்தியால் குத்தப்பட்ட குறித்த பெண் படிப்பில் மிகுந்த கெட்டிக்காரியாகவும் இருந்துள்ளார்.. 

கனடாவில் ஒருவனைக் காதலித்து கைப்பிடித்த அப்பாவிப் பெண்ணுக்கு கிடைத்த காதல் பரிசு கத்தியால் குத்தப்பட்ட அவலச் சாவு...

நல்ல பெடியன் என்று விசாரித்து செய்து வைத்த உறவே விபரீதத்தில் முடிந்துள்ளது... 

வருகிற திங்கள்கிழமை தான் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.. 

அப்பாவிப் பெண்ணைக் கொன்ற தறுதலைக் கணவனுக்கு எதிராக கனேடியப் பொலிஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

 

 

தற்போதைய செய்தி

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. updated 07-07-2017

 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கியூபெக்கில் தனது மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையரே நாடு கடத்தப்பட்டுள்ளார்.

அவரது வழக்கில் ஏற்பட்ட நியாயமற்ற தாமதங்களின் பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கனடாவில் நிரந்தர குடியுரிமையை பெற்ற சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற இலங்கையரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கனேடிய உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகிய சிவலோகநாதனின் தடுப்புக்காவல் மறு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. எனினும் அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு குடியேற்ற மற்றும் அகதி வாரிய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

21 வயது மனைவி அனுஜா பாஸ்கரனை கொலை செய்த குற்றச்சாட்டிற்காக 31 வயதான இலங்கை அகதி தனபாலசிங்கம் கடந்த 2012ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

Montreal குடியிருப்பு பகுதியில் இருந்து அவரது மனைவியின் சடலம் மீட்கப்பட்டது. அவரது மனைவியின் கழுத்தில் 20 முறை குத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொலை குற்றச்சாட்டு வழக்கு விசாரணையின் கால எல்லை கனடா உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியதாகக் கருதப்பட்டது. இதனால், விசாரணைகள் ஏறக்குறைய ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி Alexandre Boucher இந்த வழக்கினை விசாரணை செய்ய நீண்ட காலம் எடுத்துக் கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் அவரது வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்து அவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறும், தானாகவே நாடு கடத்தலை எதிர்கொள்ள விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் தனபாலசிங்கம் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

மற்றொரு செய்தி

கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டுக்காக நாடு கடத்தப்பட்ட இலங்கையரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று மாலை வந்தடைந்துள்ளார்.

இவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விமான நிலையத்தில் வைத்தே கடுமையான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கனடாவில் நிரந்தர குடியுரிமையை பெற்ற, கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற இலங்கையரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து

இலங்கை திரும்பிய கொலையாளி மீண்டும் திருமண பந்தத்தில் இணைந்து புதிய வாழ்கைக்குள் நுளைந்து சந்தோசமாக வாழ கூடும். கலியாண சந்தையில் பல பெண்கள் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் பெண்ணை இழந்த குடும்பத்தின் வலியும் வேதனையும் ஆயுள் வரை இருக்கும். வெளிநாடுகளில் உள்ள ஆண்கள் விவாகரத்து செய்தவுடன் இலங்கை சென்று திருமணமாகாத இளம் பெண்களை திருமணம் செய்து கொண்டு செல்கின்றார்கள். ஆண்கள் பிழை செய்திருந்தாலும் கலியாண சந்தையில் மவுசு குறைவதில்லை.