திரு கந்தையா கிருஷ்ணர் அவர்களின் 100வது பிறந்த தினமும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வும் பற்றிய தொகுப்பு.


திரு கந்தையா கிருஷ்ணர் அவர்களின் 100வது பிறந்த தினமும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வும் கடந்த 17-10-2017 செவ்வாய்கிழமை குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் கிருஷ்ணர் மண்டபத்தில் நடைபெற்றது.

திரு ஜோதிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு மாலை 2 மணிக்கு ஆரம்பமாகியது. கல்வி, இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தார். திரு நா.பஞ்சலிங்கம் சிறப்பு விருந்தினராகவும், சோ.பரமநாதன், ந.நவசாந்தன், பே.மயூரன் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.குப்பிழான் சொக்கர்வளவு ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை நிகழ்வில் விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் விழாக் குழுவினரால் விருந்தினர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பான்ட் வாத்திய குழுவினரின் அணிவகுப்புடன் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மங்கல விளக்கேற்றப்பட்டு வரவேற்பு நடனம் இடம்பெற்றது. திரு ரவீந்திரன் அவர்களால் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. பிரதம விருந்தினர் கலாநிதி சர்வேஸ்வரன் தனதுரையில் அண்மையில் நாட்டை விட்டு வெளியேறிய பலர் தமது ஊருடன் தொடர்பை துண்டித்து வாழ்கின்றனர். பல வசதி வாய்ப்புகளோடு இருந்த போதும் தமது கிராமத்துக்கு எந்த வித பங்களிப்பும் செய்வதில்லை. ஆனால் எவ்வளவோ காலங்களுக்கு முன் வெளியேறிய 100 வயது நல்ல உள்ளம் தான் பிறந்து வாழ்ந்த மண்ணுக்கு சேவையாற்றி வருகின்றமை பாராட்டபட வேண்டிய விடயமாகும்.தொடர்ந்து சிறப்பு விருந்தினர் திரு பஞ்சலிங்கம் தனதுரையில் குப்பிழான் கிராமத்திலேயே கடந்த 5 வருடங்களாக இந்த செயல்பாடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தீபாவளி வருடப் பிறப்பு போன்ற காலங்களில் ஆடைகள் மற்றும் உணவுப் பொதிகள் வாங்குகின்ற நிகழ்வு குப்பிழான் கிராமத்தவன் என்ற நிலையில் தொடர்ந்து அவதானித்து வந்திருக்கின்றேன். இதை நெறிப்படுத்துபவர்களுக்கு பராட்டுக்களை தெரிவிப்பதாக கூறினார்.

தொடர்ந்து உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகியது. இதனை கிராம சேவையாளர் திரு நவசாந்தன் அவர்கள் நெறிப்படுத்தினார். முதலில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குப்பிழான் பாடசாலையில் 1ம் தரம் தொடக்கம் 13ம தரம் உள்ள மாணவர்களில் 1ம் 2ம் 3ம் பிள்ளைகளை பெறுகின்ற மாணவர்கள் 30 பேருக்கு 2000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து குப்பிழான் வடக்கு கிராம சேவையாளர் பிரிவிலிருந்து 35 பேருக்கும், தெற்கு கிராம சேவையாளர் பிரிவிலிருந்து 35 பேருக்கும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்த உணவுப் பொதிகளை பிரதம விருந்தினரும் சிறப்பு விருந்தினர்களும், கிராமம் சர்ந்தவர்களும் வழங்கினர்.குப்பிழான் ஜ சண்முகன் அவர்கள் தனது பாரியாருடன் இணைந்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார். மேலும் திரு நா.கணேசலிங்கம், விவசாய சம்மேளனத் தலைவர் திரு நவரத்தினராஜா, பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் கமலநாதன் மற்றும் குப்பிழான் வாழ் மக்கள் பெருமளவிலே பங்கு பற்றியிருந்தார்கள்.

இறுதியாக நன்றியுரை இடம்பெற்றது. திரு சசிதரன் ஆசிரியர் நன்றியுரையை வழங்கினார். அவர் தனது உரையில் சிறுவயதில் ஊரை விட்டு வெளியேறி நீண்ட காலமாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் திரு கிருஷ்ணர் அவர்கள் தம்மை நேசித்த மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காக தான் உழைக்கும் போதே சிறு தொகையை சேர்த்து அதனை மூலதனமாக்கி தனது கிராமத்துக்கும் மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றார். இதே போல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கிராம பற்றுள்ளவர்களாக வளருங்கள். எதிர் காலத்தில் நல்லவர்களாக வாழ்வதற்கு ஒழுக்கம் கல்வி என்பவற்றை வழங்குங்கள். ஒரு காலத்தில் ஒழுக்கம் நிறைந்த நல்ல மனிதனாக வாழும் போது இதே போல் ஏனையவர்களுக்கும் உதவி செய்வார்கள்.

கலை நிகழ்வுகளுடன் மாலை 6 மணிக்கு நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது. மற்றைய நாள் தீபாவளி பெருநாள் என்பதால் உணவுப் பொருட்களை பெற்ற மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.