குப்பிளானில் சமூக சேவையாளர் கந்தையா கிருஷ்ணரின் நிதியில் பல்வேறு நலத் திட்ட உதவிகள்  வழங்கி வைப்பு  (Photos)

 


சமூக சேவையாளர் கந்தையா கிருஷ்ணரின் நிதிப் பங்களிப்புடன் குப்பிளான்- சிங்கப்பூர் நலன்புரி மன்றத்தின் ஏற்பாட்டில் வருடாந்த உதவி வழங்கல் நிகழ்வு  கடந்த வியாழக்கிழமை(12) பிற்பகல் குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் இடம்பெற்றது. 

பிற்பகல்-02.45 மணியளவில் ஆச்சிரமத்தில் விசேட தீபாராதனை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய விழாவில் குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ ச. வைத்தீஸ்வரக் குருக்கள் மங்கள விளக்கேற்றி விழாவை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடந்து ஏனைய விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றி வைத்தனர். 

 


அதனைத் தொடர்ந்து  விருந்தினர்கள் மாலை அணிவித்து சிவபூமி ஆச்சிரம முன்றலில் அமைந்துள்ள விழா மண்டபத்தை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.  

இந்துசமய கலாசார திணைக்கள ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெல்லிப்பழைப் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு அலுவலர் தி.கிருஷ்ணகுமார், குப்பிளான் வடக்கு கிராம அலுவலர் ந. நவசாந்தன், குப்பிளான் தெற்கு கிராம அலுவலர் பே. மயூரதன் ஆகியோர் விருந்தினார்களாகக் கலந்து கொண்டனர். 

குறித்த நிகழ்வில் குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ ச. வைத்தீஸ்வரக் குருக்கள், யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் சுவாமி சுவாமி நிதா காசானந்தா சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை நிகழ்த்தினர். 

 


இந்நிகழ்வின் போது  குப்பிளான் கிராமத்தில் வளர்ந்துவரும் ஊடகவியலாளர் குறிஞ்சிக்கவி செ.ரவிசாந் விருது வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் விசேடமாகக் கெளரவிக்கப்பட்டார்.  

 


அதனைத் தொடர்ந்து குப்பிளான் தெற்கில் மிக வேகமாக வளர்ந்து வரும் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழகத்தின் நிரந்தர வளர்ச்சிக்கான நிரந்தர வைப்பு நிதியாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டதுடன் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 65 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர்கள் நூறுபேறுக்கான ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான புதுவருடப் புத்தாடைகள் வழங்கப்பட்டதுடன், மிக வறிய நிலையில் கல்வி கற்கும் 30 பாடசாலை மாணவ,மாணவிகளுக்கு 30 ஆயிரம் பெறுமதியான  சப்பாத்துக்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

 


அத்துடன் கிராம அபிவிருத்திச் சங்க ஆதரவுடன் குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தில் நடைபெற்று வரும் தையல்,முக அலங்காரப் பயிற்சிகள் பெறும் 20 வறிய மாணவிகளுக்கான 20 ஆயிரம் ரூபா பெறுமதியான பயிற்சி உபகரணங்கள் வழங்கலும் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் குப்பிளான் தெற்குப் பகுதியின் முன்னாள் கிராம சேவகரும், சமாதான நீதவானுமான சோ.பரமநாதன்,மாணவர்கள், கிராம மக்கள், பயனாளிகள், ஆர்வலர்கள் எனப்  பெருமளவானோர் கலந்து கொண்டனர். 

 


குறித்த நிகழ்வை ஒழுங்கமைப்பதில் நீர்வேலி சி.சி.த.க. பாடசாலை அதிபர் தி.ரவீந்திரநாதன், இணுவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தி. சசீதரன் ஆகியோர் முக்கிய பங்களிப்புக்களை வழங்கியிருந்தனர். 

இதேவேளை, சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுப்  புத்தாடைகள் பெற்றுக் கொண்ட மூத்தோர்கள் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதுடன் சிறுவயது முதல் சிங்கப்பூரில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற போதிலும் தான் பிறந்த மண்ணான குப்பிளான் மண்ணில் ஆழமான பற்றுக் கொண்டு பல்வேறு சமூகப் பணிகளை 101 வயதிலும் முன்னெடுத்து வரும் கந்தையா கிருஷ்ணரைப்  பாராட்டி விழாவில் ஆசியுரை நிகழ்த்திய   குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ ச. வைத்தீஸ்வரக் குருக்கள், யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் சுவாமி சுவாமி நிதா காசானந்தா சுவாமிகள் உட்பட விருந்தினர்கள் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டமையும்  இங்கு குறிப்பிடத்தக்கது.