வரலாற்றுச் சிறப்புமிக்க கற்கரை விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் 2012 பற்றிய சிறப்பு பார்வை. updated 15-08-2012

 

வரலாற்றுச் சிறப்பு மிக்க கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மாகோற்சவம் 23-07-2012 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து 15 நாட்கள் உற்சவம் நடைபெற்று பிராயச் சித்த அபிசேகத்துடன் இனிதே நிறைவு பெற்றது. இம்முறை கோபூசை, கோதரிசனம் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றது. கோபூசை என்பது பசுக்களை கெளரவப்படுத்தி செய்யப்படும் பூசை நிகழ்வு. இம்முறை பெருமளவான புலம்பெயர் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 300க்கு மேற்பட்ட புலம்பெயர் உறவுகள் கலந்து கொண்டதாகவும் குறிப்பாக இம்முறை கனடாவில் இருந்து 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தம்பிஜயா ஞாபகார்த்த கட்டிடத்தில் திரு சிவகுரு பஞ்சலிங்கம், திரு தம்பிராசா கணேசன் அவர்களால் நடாத்தப்படும் தண்ணீர் பந்தல்களில் குளிர்பானங்கள் 10 நாட்களும் எம்பெருமான் அடியார்களின் தண்ணீர் தாகத்தை போக்குமுகமாக வழங்கப்பட்டன. வெளிநாட்டு இளையோர் அமைப்பால் கடந்த வருடம் போன்றும் இம்முறை தேர்த்திருவிழாவன்று குளிர்பானம், ஜஸ்கிறீம் என்பன வழங்கப்பட்டன.கொடியேற்றம், வேட்டைத்திருவிழா, தேர்த்திருவிழா, தீர்த்த திருவிழா போன்றவற்றை வெளிநாட்டு அமைப்பின் சார்பில் திருமேனி பஞ்சாட்சரதேவனால் முழுமையாக வீடியோ எடுக்கப்பட்டதுடன், தேர்த்திருவிழாவன்று எழுந்தருளிப் பிள்ளையாரின் வர்ணப்படம் விற்பனை செய்யப்பட்டது. இதில் சேகரிக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி முன் சபா மண்டபத்திற்கு வர்ணம் பூசும் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. கொடியேற்றம், தேர்த்திருவிழா, தீர்த்தோற்சவம் போன்ற நிகழ்வுகளை புலம்பெயர் முன்னணி வானொலிகளில் ஒன்றான ரிஆர்ரி தமிழ் ஒலியில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. திருவிழா காலங்களில் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினரால் தெற்கு வீதியில் பூரண கும்பம் வைக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. இது ஒரு முன்மாதிரியான நிகழ்வாகும். இது போல் முன்பு நடைபெற்றதில்லை. விளையாட்டோடு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் முன்பெல்லாம் உற்சவ காலங்களில் கூட கோயிலுக்கு சென்றதில்லை. சுவாமி வெளி வீதி வரும் பொழுது கூட அதை கண்டு கொள்ளாமல் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் வயது முதிர்ந்த பின்பு ஆன்மீகத்தில் ஈடுபடுவார்கள், அல்லது துன்பம் வரும் போது அதைச் செய்வார்கள். நிலையில்லாத இந்த உலகத்தில் எதுவும் நிலையாக இருக்கமாட்டாது. குமரனோ, குமரியோ ஒரு காலத்தில் கிழவனாகவோ, கிழவியாக மாறுவார்கள். ஏன் இளைஞர்கள் இது போன்ற நல்ல விடயங்களை செய்ய முன்வருவதில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். ஆனாலும் இந்த செயற்பாடு எல்லோருக்கும் நல்ல பாடமாக அமையும்.திருவிழா காலங்களில் 10 நாட்களும் திரு வயிரவநாதன் அவர்களின் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. திரு நல்லதம்பி அவர்களால் உற்சவ காலங்களில் வீதிகளுக்கு நீர் தெழிக்கும் நிகழ்வு மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் இடம்பெற்றது.
இந்த உற்சவத்தின் 8ம் திருவிழாவன்று கோபுரத்தில் இருந்து நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியது இதைக் கண்டதும் பக்தர்கள் அரோகரா கோசத்துடன் பக்திப் பரவசத்தில் மூழ்கினார்கள்.தேர்த்திருவிழா 31-07-2012 செய்வாய்க்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. காலை 5.00 மணிக்கு திருப்பள்ளியெளுச்சியுடன் ஆரம்பமானது. காலை 6.30 மணிக்கு தம்ப பூசையும், 8.00 மணிக்கு மூலஸ்தான பூசையும், காலை 9.00 மணிக்கு வசந்த மண்டப பூசையும் இடம்பெற்றது. எம்பெருமான் தனது சகோதரனோடு தாமரை மலர்களால் ஆலங்கரிக்கப்பட்டு அடியார்களுக்கு காட்சி தந்த அந்த அற்புத காட்சியை காண்பதற்கு ஆயிரம் கண் வேண்டும் பராபரமே. பத்தர்கள் புடைசூழ அந்தணர்கள் வேதம் ஓத எம்பெருமான் உள்வீதி வலம்வர ஆரம்பித்தார். அடியார்களின் தோழில் ஆடி அசைந்து வர, பூமாரி பொழிய மெல்ல மெல்ல உள் வீதியை சுற்றி வந்தார். அதன் பின்னர் தேரில் பவனி வருவதற்காக தேர் இருப்பிடத்தை நோக்கி நகர்ந்தார். மணிகள் ஒலிக்க, அரோகரா கோசத்துடன், அடியார்கள் ஆனந்த கண்ணீர் மல்க விநாயகன் தேர் ஏறினார். பலரும் பல்வேறு வேண்டுதலுக்காக கற்பூர சட்டி அங்கப்பிரதட்சணம் செய்வது வழமை. பெருமளவான கற்பூர சட்டிகள் அடுக்கப்பட்ட காட்சி எல்லோர் மனதையும் மெய்சிலிர்க்க செய்தது. சிதம்பரத்தில் ஓடாத தேரை திருபல்லாண்டு பாடி ஓட வைத்தார் சேந்தனார் என்பது பண்டைய வரலாறு. நமது ஆலயத்திலும் தேர் இழுப்பதற்கு முதல் திருப்பல்லாண்டு பாடி தான் ஒவ்வொரு முறையும் தேரை இழுப்பார்கள்.

ஆண்கள் தேங்காய் உடைத்து அங்க பிரதட்சணம் செய்ய, பெண்கள் கற்பூரசட்டி மற்றும் விழுந்து கும்பிட்டு தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்கள். அதே நேரம் இரண்டு பறவைக் காவடிகள் கன்னிமார் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஆலயத்தை சுற்றி வட்டமிட்டு வந்தது. எம்பெருமான் தேரினில் வெளி வீதி சுற்றி வந்தான். தமது துன்பங்களில் இருந்து விடுதலையையும், தமது ஆசைகளையும் விநாயகன் நிறைவேற்றுவான் என்பது மக்கள் நம்பிக்கை. விக்கினம் தீர்கும் விநாயகன் அல்லவா அவன். தேர் இருப்பிடத்தை அடைந்ததும் அடியார்கள் அரிச்சனை தட்டுக்களை கொடுத்து அரிச்சனை செய்வித்தார்கள். அடியார்கள் ஆலய திருப்பணிக்கு தம்மால் இயன்ற தொகையை கொடுத்து உதவினார்கள். இந்த வருடம் ஆலயத்திருப்பணிகள் ஆரம்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. மூலஸ்தானம், வசந்த மண்டபம் முற்றாக இடிக்கப்பட்டு கருங்கல்லினால் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெருமளவு நிதி தேவை என்றும் அறிவிக்கிறார்கள் ஆலய பரிபாலன சபையினர். சில அடியார்கள் வேலைத்திட்டங்களை தாமே பொறுப்பெடுத்து செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். நம்மிடமுள்ள சிறிய தொகையாகதல் தானம் செய்தால் தான் நாமும் சந்தோசமாகவும் நாம் சேர்த்து வைத்த தொகை எமக்கு பிரயோசனமாகவும் இருக்கும். சிலர் ஒன்றுக்கும் ஈனமாட்டார்கள் பெரும் செல்வங்களை சேர்த்து வைப்பார்கள், எதற்கும் பஞ்சம் பாடுவார்கள் இறுதியில் தானும் அனுபவிக்காமல் குறைந்த ஆயுளில் மாண்டு போவார்கள். இப்படி பலரை கண்டிருக்கிறோம். கோயில்களுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்று இதன் அர்த்தம் இல்லை. எதோ ஒன்றுக்கு உதவி செய்யுங்கள் உங்கள் வாழ்வு சிறப்பு பெறும்.


இந்த தேர் உற்சவத்திற்கு பெருமளவு அயலூர் மக்களும் கலந்து கெண்டது குறிப்பிடத்தக்கது. கற்கரை கற்பக விநாயகர் ஆலயமானது வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் பண்டை தொட்டு எமது கலை கலாச்சாரத்தை வளர்த்த ஆலயமும் ஆகும். பண்டைய காலங்களில் கலைஞர் பீதாம்பரம், வேலையா ஆகியோரின் கூத்துக்களும் வித்துவான் செல்லத்துரை அவர்களின் பண்ணிசைகளும் இடம்பெற்றது இந்த ஆலய முன்றலில் தான் என்பது வரலாறு. எமது கிராமத்தின் பெருங்கோவிலாகவும், எல்லோருடைய குல தெய்வமாகவும் விளங்குபவர் எங்கள் விநாயகனே. ஆலய நிர்வாத்தோடு சிலருக்கு கருத்து வேற்றுமை இருக்கலாம் ஆனாலும் எமது ஆலயம் அதை யாருக்கும், யாருக்காகவும், யாரும் விட்டுக்கொடுக்க முடியாது. மிகவும் சிறப்பாக இந்த வருடத்தின் உற்சவம் நடந்து முடிவடைந்துள்ளது.