குப்பிழான் கற்கரை கற்பக ஆலயத்தின் கடந்த கால சம்பவங்களும் அதன் எதிர் காலமும். செய்திதொகுப்புமாற்றம் ஒன்றே என்றும் மாறாதது, அந்த மாற்றங்கள் வருவதற்கு மாதங்களாகவோ ஆண்டுகளாகவோ அல்லது யுகங்களாகவோ இருக்கலாம். ஆனால் மாற்றங்கள் நடக்க வேண்டும் என்பது நியதி. கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்திலும் ஒரு மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள் அவைகள் நடந்து விட்டது. அதற்காக பழைய நிர்வாகம் பிழையானது என்று அர்த்தம் இல்லை. அவர்களும் செய்து இருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் நிறைய விடயங்களை செய்திருக்கலாம். புதியவர்கள் வரும் போது உற்சாகத்தில் மேலும் பல விடயங்களை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பது இயற்கை.

வரலாற்று சிறப்பு மிக்கதும் எமது ஊரின் பெருங்கோவிலுமாக விளங்கிய கற்கரை கற்பக விநாயகர் ஆலயம் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது. அதாவது குப்பிழான் கிராமத்தில் மக்கள் குடியேற தொடங்கிய காலத்தில் இந்த கோயில் அமைக்கப்பட்டது என்று வரலாறு கூறுகின்றது. சின்னஞ் சிறியதாக இருந்த இந்த கோவில் எமது முதாதையர்களின் அர்ப்பணிப்பினால் பெருங்கோயிலாக தோற்றம் பெற்றது. குப்பிழான் கிராமமே கற்கரையானை தான் தனது குல தெய்வமாக ஆரம்ப காலம் தொட்டு வணங்கி வந்தனர். பீதாம்பரம் அவர்களின் நாடகமும் செல்லத்துரை அவர்களின் பண்ணிசையும் கற்கரை ஆலய முன்றலிலே இடம்பெற்றது. ஆரம்ப குப்பிழான் என்பது ஒரு காட்டுப்பிரதேசம் ஆகும் இங்கு பெருமளவு மக்கள் வசிக்கவில்லை குறிப்பிட்ட இடத்திலேயே தான் மக்கள் வசித்தார்கள் மற்றைய பிரதேசங்கள் ஒரு வனார்ந்தரமாகவே காணப்பட்டது. புதிய குறிச்சிகள் தோன்றும் போது புதிய ஆலயங்களும் தோன்றின ஆனால் எல்லோருடைய குல தெய்வம் கற்கரையானே. கற்கரையான் குறிச்சிகளை கடந்து எல்லோருக்கும் குல தெய்வம்.

கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தை பொறுத்த வரையில் ஆரம்ப காலத்திலிருந்து அமரர்களான முத்துக்குமார், நல்லையா போன்றவர்களின் சிறந்த தலைமையில் தலைமைக்கு கட்டுப்பட்ட நல்ல நிர்வாகம் இருந்தது. திரு நல்லையா அவரின் மறைவுக்குப் பின்னர் அவரின் துணைவியார் மற்றும் மருமகன் நிர்வாகத்தை பொறுப்பேற்றார்கள். அதன் பின்னர் கொடிய போர் காரணமாக எல்லோரும் இடம்பெயர நேரிட்டது. மக்கள் மறுபடியும் ஊர் திரும்பும் போது ஆலயம் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. இடப்பெயர்வின் பின் வந்த புதிய தலைவராக திரு சிவ மகாலிங்கம் அவர்கள் பொறுப்பேற்றார்கள். ஆலயமானது உயர் பாது காப்பு வலயத்துக்குள் இருந்தது. பெரும் முயற்சி செய்து உரிய அனுமதிகளைப்பெற்று ஆலயம் இயங்குவதற்கு பெரும்பங்காற்றினார். அதன் பின்னர் திரு பரமநாதன் மற்றும் சிலரின் தலைமையில் ஆலய நிர்வாகம் இயங்கியது. இறுதியாக திரு சின்னராசா தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கியது.

இடப்பெயர்வுக்கு பிறகு வந்த நிர்வாகங்கள் ஆலயத்தை பழைய நிலைக்கு கொண்டு வர கடுமையாக முயற்சி செய்தனர். அதற்காக சில அர்ப்பணிப்புக்களையும் செய்தனர். ஆலயத்தையும் ஓரளவு பழைய நிலைக்கு கொண்டு வந்தனர். இந்த ஆலயத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு திரு ஜெகநாதன் போன்ற புலம் பெயர் உறவுகளின் பங்களிப்பு அளப்பரியது.

அதே சமயம் புதிய நிர்வாகத்தினர் ஆலயத்திற்கு அர்ப்பணிப்பு செய்தவர்களை மறந்து போய்விட்டார்கள். அமரர்களான கா.நல்லையா, முத்துக்குமார், சிவபாதம், இராமநாதன் போன்ற பலர் ஆலயத்தின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஆத்ம சாந்தியடைய ஒரு அமைதிப் பிரார்த்தனை கூட செய்யவில்லை. திரு கா. நல்லையா அவர்களின் மருமகன் திரு சிறிஸ்கந்தராஜா அவர்களை ஆலய நிர்வாகம் திட்டமிட்டு புறக்கணித்தாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். திரு சிறிஸ்கந்தராஜா அவர்கள் ஒரு கோடி பெறுமதியான தனது வீட்டை சிவ பூமிக்கு அன்பளிப்பு செய்தவர் என்பது குறிப்பிடதக்கது. அப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ள நல்ல மனிதர்களை இழந்தது எமது ஆலயத்தின் வளர்ச்சி பாதிக்கபட்டதற்கு ஒரு காரணம். ஜதீக முறைப்படி கிரிஜைகள் நடைபெறுகிறதா என்று கவனித்தவர்கள் எமது மதத்தின் வளர்ச்சிக்கு எந்த அர்ப்பணிப்பும் செய்யவில்லை. அங்கத்தவர்கள் எல்லாம் தலைவர் போல் செயல்பட்டதாகவும், யார் தலைவராக இருந்தால் என்ன ஒரு சிலர் மட்டுமே முடிவுகளை எடுத்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் நிவுகின்றது. பதவியில் இருப்பவர்கள் வாழ் நாள் முழுவதும் தாமே அந்த பதவியை வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தார்களே தவிர புதியவர்களை உள்வாங்கவில்லை. ஒரு சிலர் பதவியை இழந்த போது அதை பெரும் அவமானமாக கருதி ஆலயத்தை விட்டு விலகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆண்டவனுக்கு சேவை செய்ய பதவி தேவையில்லை ஆனால் பதவி தேடி வரும் போது அதை ஏற்றுக் கொள்ளாமல் விடுவதும் நல்லதல்ல.

காலம் மாறிவிட்டது காலத்திற்கு ஏற்ப நமது செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்களை அடிமையாக வைத்திருந்த காலம் மாறி அவர்களும் ஆண்கள் போல் பல துறைகளில் உட்புகுந்து ஆண்களுக்கு சமமாக வேலை செய்கின்றார்கள். சிவபெருமானே அர்த்தநாதிஸ்வரராக பெண்ணுக்கு பாதியை கொடுத்திருக்கிறார். அப்படி இருக்கும் போது கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் பெண்கள் தேர் இழுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல ஆலயங்களில் பெண்கள் தேரை இழுக்கின்றார்கள். அதற்காக எமது பாரம்பரியத்தை கைவிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. சில முற்போக்கான சிந்தனைகள் தேவை. ஆலயங்களுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்களும் ஆண்டவனுக்கு தம்மாலான சேவைகளை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

இந்து சமயத்தில் ஆலய அர்ச்சகர்கள் என்பவர்கள் கோயிலுக்கு சேவை செய்ய வரும் தொண்டர்கள் அல்ல. அது அவர்களது தொழில். ஒவ்வொரு தொழிலுக்கும் எந்த தகமை தேவையோ அந்த தகமை ஆலய அர்ச்சகரிடமும் இருப்பது அவசியம். செய்யும் தொழிலே தெய்வம் என்பது போல் உங்களுடைய தொழிலும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும். தட்சணை என்பது அர்ச்சகரின் சேவைக்கு கிடைக்கும் அன்பளிப்பு. அதன் பெறுமதிகள் ஒவ்வொருவரின் வசதிக்கேற்ப மாறுபடலாம். இந்த புனிதமான இடத்தில் எல்லோரையும் சரி சமனாக நடாத்தப்பட வேண்டும். ஆனால் அந்த நிலை இங்கு காணப்படவில்லை. காளாஞ்சி தூக்குவதற்கும், வேறு உபச்சாரங்கள் வழங்கப்படுவதில் நடுநிலை பேணப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. எந்த விருப்பு, வெறுப்பென்றாலும் அதை பக்தர்களிடம் காட்ட முயற்சி செய்யக் கூடாது . இவர்கள் நிர்வாக சபையின் கீழ் வேலை செய்யும் ஊழியர்கள். நிர்வாக சபையின் கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வேண்டும் அதே சமயம் பூசகர்களின் மனித உரிமையையும் நிர்வாகத்தினர் மதித்து நடக்க வேண்டியது அவசியமாகின்றது.

புதிய நிர்வாகத்திடம் எல்லோரும் எதிர்பார்க்கும் முக்கிய விடயங்கள்.

எந்த முடிவும் பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்கி எடுக்கப்படவேண்டும். அவர்களின் கருத்துக்களுக்குமதிப்பளிக்க வேண்டும். பொதுமக்களோடு நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஆலயத்திற்கு வருவதை ஊக்குவிக்க வேண்டும்.

கட்டிடத்தை மட்டும் கட்டுவதால் எமது மதம் வளர்ந்து விடாது. சிறு பிள்ளைகள் தொடக்கம், பெரியோர்கள் வரை ஆன்மீகத்தில் ஈடுபடுவதற்கான மார்க்கங்களை திறந்து விடவேண்டும். சமய பேச்சுப் போட்டியை நடாத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசில்கள் வழங்குதல், வறுமையிலோ அல்லது துன்பத்தில் வாழ்பவர்களுக்கு தேடிச் சென்று சிறு உதவிகளாதல் வழங்குதல். இதனால் ஆலயத்திற்கும் பொதுமக்களுக்கும் நல்ல நட்புறவு வளரும் அதன்மூலம் பொதுமக்களின் சிறந்த பங்களிப்பு ஆலயத்திற்கு கிடைக்கும்.

விளையாட்டுக் கழகமும். ஆலய நிர்வாகமும் எப்போதும் நட்புறவுடன் செயல்படவேண்டும். இவைகள் இரண்டும் அருகில் இருப்பதால் நட்புறவுடன் செயல்படாமல் விட்டால் இன்று நடந்த நிலை தான் எதிர்காலத்திலும் நடக்கும் சாத்தியம் உள்ளது. கடந்த 2 வருடங்களாக இரு பகுதியினரும் தமக்குள் மோதிக் கொண்டு இரு நிர்வாகங்களும் செயல்படாமால் முடங்கி போனதை யாவரும் அறிவீர்கள். ஆலயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிரந்தர வேலி அமைக்க முற்பட்டு ஆலய நிர்வாகத்தோடு வலிந்த மோதல் ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இரு பகுதியினரும் அவ்வப்போது மோதிக் கொண்டனர். இதன் தாக்கங்கள் கடந்த வருட உற்சவத்தில் அவதானிக்க கூடியதாக இருந்தது.

புதிய நிர்வாகத்தை ஆலய அர்ச்சகர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவாரோ என்ற அச்ச நிலையை போக்கி நிர்வாக சபையே எல்லா விடயத்தையும் கையாள வேண்டும். ஆலய அர்ச்சகரை பொறுத்த வரையில் ஆலய வளர்ச்சியை விட தமது பொருளாதார வளர்ச்சியையே முன் கொண்டு செல்லும் சாத்தியம் உண்டு. அவர்கள் எதிர்பர்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை, அவர்கள் வாழ்வுக்கு பொருளாதாரம் அவசியம்.

நிர்வாக உறுப்பினர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஆலயத்திற்கு சமயத்தோடு தொடர்புடையவர்களை ஒன்றிணைத்து ஆலோசகர் சபையை உருவாக்க வேண்டும். பழைய நிர்வாகத்தினர் சில பிழைகளை செய்திருந்தாலும் அவர்கள் செய்த நல்லவற்றை உள்வாங்கி அவர்களையும் ஏதோ ஒரு வகையில் உள்வாங்கபடவேண்டும்.

தேர் இழுத்தல், நிர்வாக சபை என்பவற்றில் பெண்களும் இணைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் தேர் இழுக்க கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை, ஆலய பக்தர்கள் பெரும்பாலும் பெண்களே அவர்களுக்கும் நிர்வாகத்தில் இடம் வழங்கபடவேண்டும்.

ஆலய நிர்வாகத்தின் தனித்தன்மை பாதுகாக்கபடவேண்டும். விளையாட்டுக் கழகத்தின் தலையீடுகளும், பயமுறுத்தல்களும் பெருமளவு இடம்பெற்றதை யாவரும் அறிவீர்கள். ஆலய நிர்வாக சபை அனுமதி இன்றி தொண்டர் சபைக்கு சால்வை அடிக்கப்பட்டு கோயில் நிர்வாகம் ஒன்று இருக்கோ என்ற ஜயம் ஏற்பட்டது. அதே சமயம் விளையாட்டு நிர்வாத்தில் யாருமே தலையிடுவதற்கு அனுமதிக்கப்படவுமில்லை. மற்றவர்களின் கருத்துக்களை உள்வாங்கபடவுமில்லை.

ஆலய வளர்ச்சியில் எல்லோரையும் இணைக்க வேண்டும். ஆலயத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்களுக்கு உரிய மதிப்பு கொடுக்கபட வேண்டும். இன்று நீங்கள் செய்தால் தான் நாளை வருபவர்கள் உங்களை மதிப்பார்கள். அந்தவகையில் சில மனத்தாங்கல்களால் விலகி நிற்பவர்களை உள்ளே கொண்டு வரவேண்டும். முக்கியமாக திரு சிறிஸ்கந்தராஜா போன்றவர்களை.

மற்ற ஆலயங்களோடு உறவுகளை வளர்க்க வேண்டும். போட்டிகளை, பொறாமைகளை வளர்க்க கூடாது. போட்டிக்கு ஆலயத்தை பெருசாக்கும் முயற்சியை கைவிட்டு எது தேவையோ அதை மட்டும் செய்ய வேண்டும். திருவிழா காலங்களில் மற்ற ஆலயங்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கியும் பங்கு பற்றியும் விழாவை சிறப்பிக்க வேண்டும்.

திருவிழா காலங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சியை நடாத்த வேண்டும். சமயம் மட்டுமல்ல நமது கலைகளும் வளரும்.

சாதி, குறிச்சி வேற்றுமை இன்றி எல்லோரையும் ஆலயத்திற்கு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.