கற்பரை கற்பக ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பான சிறப்பு கட்டுரை. updated 17-08-2011.

எமது கிராமத்தின் மிகப்பெரிய ஆலயமும், பல நூற்றாண்டு வரலாற்றை கொண்ட கற்கரை கற்பக விநாயகர் ஆலயமானது கடந்த 04-08-2011 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து காலையிலும் மாலையிலும் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. மாலை வேளைகளில் தேவாரா பண்ணிசை, சிறப்பு பேச்சுக்கள் இடம்பெற்றன. எமது மண்ணில் பிறந்து, எமது மண்ணின் புகழ் பரப்பும், இலங்கையில் வாழும் சிறந்த சைவ சமய பேச்சாளர்களில் ஒருவராகிய சிவத்தமிழ் வித்தகர் திரு சிவ மகாலிங்கம் அவர்களுடைய பல சமய சொற்பொழிவுகள் இந்த உற்சவ காலத்தில் இடம்பெற்றது. அதோடு எமது அயல்கிராமத்தை சேர்ந்த திரு விநாயகமூர்த்தி அவர்களின் சொற்பொழிவும் இடம்பெற்றது. திரு விநாயகமூர்த்தி ஆனவர் கடந்த 35 வருடங்களாக இந்த ஆலயத்தில் சமய சொற்பொழிவுகளை மேற்கொண்டு வருகிறார்.


 

இம்முறை இந்த ஆலய உற்வத்தின் சிறப்பம்சமாக 5ம் திருவிழாவன்று திருமஞ்ச பவனி இடம்பெற்றது. இதற்காக புதிய திருமஞ்சம் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டு கொடியேற்றம் அன்று வெள்ளோட்டமும் விடப்பட்டது. திருமஞ்ச பவனியில் எம்பெருமான் தனது சகோதரனோடு வந்த அந்த காட்சியை நேரடியாகவும் இணையத் தளத்தினூடாகவும் கண்டு களித்தனர். திருமஞ்ச திருவிழாவன்று யாழ்பாணத்தில் பிரபல்யமான தவில் வித்துவான்கள் மிகப்பெரிய செலவில் வருவிக்கப்பட்டனர். அவர்களின் தவில் இசையினால் எல்லோரையும் மெய்மறக்க செய்தனர். 6ம் திருவிழா திருமுறை விழாவாகவும் நடைபெற்றது. இந்த திருமுறை விழாவில் பதிகங்கள் பாடிய 12 நாயன்மார்கள் வீதி உலா வந்தனர். அமரர் திரு க.நல்லையா அவர்களின் பெருமுயற்ச்சியால் நாயன்மார்களுக்கென்று தனியான மண்டபம் அமைக்கப்பட்டு, 6ம் திருவிழாவை திருமுறை விழாவாக கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. 7ம் திருவிழா வேட்டைத் திருவிழாவாக நடைபெற்றது.


 

11.08.2011 அன்று மாலை சப்பறத்திருவிழா வழமை போல் பிரசங்கம் நிறைவடைந்ததும் எம்பெருமானுக்கு அழகான திருவாசியினாலும் மலர்கள் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தன் உடன் பிறந்தோனுடன் எழுந்தருளி சப்பரத்தில் வீதியுலா வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. வெளி மாவட்டங்கள், வெளிநாடுகள், அயலூரார் என பலரும் இக்காட்சியை வந்து காண்பதை அங்கே உணரக்கூடியதாக இருந்தது. வடக்கு வீதியல் தவில், நாயனக் குழுவினர் அட்டகாசமாக முழங்கினர். அப்பொழுது சிலர் 1997 காலப்பகுதியில் நம் விநாயகனின் நிலை எவ்வாறு இருந்ததென்று நினைத்து ஆனந்த கண்ணீர் மல்கினர்.


12.08.2011 அதிகாலை ஐந்து மணியளவில் திருப்பள்ளியெளுச்சியுடன் ஆரம்பமானது, எம்பெருமானுக்கு அபிசேகம் நடைபெற்று பின் ஏழு மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்று, எட்டு மணிக்கு வசந்த மண்டப பூஜா நடைபெற்று ஒன்பது மணியளவில் விநாயகன் வீறான கோலத்துடன். தேர்பவநிக்காக எழுந்தருளினான். உள்வீதி எங்கும் செந்தாமரை மலர்களும் மழை பொழிந்தன. பத்து மணியளவில் சித்திர தேரினிலே அமர்ந்த விநாயகனுக்கு திருப்பல்லாண்டு பாடி சிதறு தேங்காய் அடித்து அடியவர் வடம் பிடித்து எட்டு திக்கும் அரோகரா.....அரோகரா....கோசத்துடன் தேர்ச் சில்லுகள் நம் வினாயகனுக்காய் சிரித்த வண்ணம் சுழல ஆரம்பித்தன. இம்முறை அடியார்கள் பல வேண்டுதல்களை மேற்கொண்டார்கள்.வழக்கத்துக்கு மாறாக 5 தூக்கு காவடிகள் பவனிவந்ததை அவதானிக்க முடிந்தது. இரண்டு மணியளவில் குளிர்ச்சியாக பச்சை சாத்திய வண்ணம் அவரோகணம் இடம்பெற்று அபிசேகத்துடன் முடிவடைந்தது.


13.08.2011 பத்தரை மணியளவில் தீர்த்தத் கேணியில் சகல பூரண கிரிஜைகளுடன் தீர்த்தமாடிய விநாயகனுக்கு அடியவர்கள் பலர் அர்ச்சனை செய்து தம் கவலைகள் குறைகள் பலதையும் முறையிட்டு வணங்கினர். பதினோரு மணியளவில் பத்து நாளும் யாக பூசையில் இருந்த கும்பம் ஆதிமூல விநாயகனுக்கு அபிசேகம் செய்யப்பட்டு மாலை திருவூஞ்சல் பாடி கொடியிறக்கம், எம்பெருமான் வீதிவலம் வந்து சண்டேஸ்வர உத்சவம் மற்றும் குரு ஆசி போன்றவற்றுடன் நிறைவுபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருக்கலியாணம், வைரவர் சாந்தி ஊர்வலம், அன்னாபிசேகம் ஆகிய விழாக்கள் நடைபெற்று 2011 ஆம் ஆண்டு உற்சவம் இனிதே நிறைவடைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் ஜஸ்கீறிம் வாகனங்கள் 10 நாட்களும் காண கூடியதாக இருந்தது.

கடந்த கால திருவிழா நிகழ்வுகளை பின்னோக்கி பார்ப்போமானால், 80ம் ஆண்டு நடுப்பகுதி வரையும் திருவிழா என்றால் அதன் அம்சமே தனிதான். திருவிழாவுக்கு ஒரு கிழமைகளுக்கு முன் லான்மாஸ்ரரில் ஒலிபெருக்கி பொருத்தி ஒவ்வொரு வீதி வழியாகவும் சென்று திருவிழா நடைபெறும் செய்தியை அறிவிப்பார்கள். ஆனால் 70ம் ஆண்டுகளில் பறை அடித்து இந்த செய்தியை மக்களுக்கு தெரிவிப்பார்கள். திருவிழா தொடங்குகிறது என்றால் ஊரே களை கட்டும். ஆலய வீதிகள் சுத்தம் செய்து அதற்கான வேலைகளை தொடங்குவார்கள். திருவிழாவுக்கு முதன் நாளே சிறிய கடைகள் எம்மூர் இளைஞர்களால் அமைக்கப்பட்டு சிறுவர்கள் விரும்பும் காத்தாடி, அம்மம்மா குழல், பப்படம், விசில், பலூன், மிட்டாய் என்று பல வித பொருட்களை விற்பனை செய்வார்கள். அதுவும் தேவா கடை என்றால் மிகவும் பிரபல்யம். இந்தியா வியாபாரிகள் கடலை, சோளம் வறுத்து விற்பனை செய்வார்கள். திருவிழாக் காலங்களில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.
5ம் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று. குருந்தடி மூலையில் இருந்து ஆலய பின் வீதி வரைக்கும் மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு நீண்ட பந்தல் போடப்படும். விடிய விடிய பாட்டுக்கள், கூத்துக்கள், நாடகம், சிறப்பு சொற்பொழுவுகள் என்று பல நிகழ்வுகள் இடம் பெறும். அடுத்தது வேட்டை திருவிழாவன்று எம்பெருமான் வீதி வழியே சென்று வீரபத்திரர் கோவிலடியில் வேட்டை ஆடி கோயில் திரும்புவார். தேர்திருவிழா இன்று நடைபெறுவது போல் நடைபெற்றாலும். அந்த நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேர் உற்சவம் அன்று அங்கப்பிரதிட்சனம் செய்வார்கள். தேர்த்திருவிழா அன்று எமது கிராமத்தவர்கள் மட்டுமன்றி பல அயல் கிராம மக்களும் கலந்து கொள்வார்கள்.

அடுத்து குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம் சுவாமி ஊர்வலம் ஆலயத்தில் இருந்து எம்பெருமான் வீதி வழியே மாலை 2.00 மணிக்கு வெளிக்கிட்டு முதலில் சமாதி கோவிலை அடைந்து பின்னர் ஊரங்குணை வைரவர்கோவில் பின்னர் ஆலய வீதி வழியாக திரும்பி வந்து குரும்பசிட்டி முத்துமாரி அம்மன், விநாயகர் ஆலயம் அதன் பின்னர் வைரவர், வீரபத்திரர் ஆலயங்களை சென்றடைந்து காளிகோவில் ஊடாக முத்தர்வளவு, கேணியடி சென்று இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் சென்று புன்னாலைக்கட்டுவன் குப்பிழான் வீதி வழியாக கன்னிமார் ஆலயம், குப்பிழான் தென்பகுதி, மயிலங்காட்டை அடைந்து சுடலை வீதி வழியாக திரும்பி வருவார், அதன் பின் இலந்தையடி வைரவர்ஆலயம், மின்திரை, கோட்டார் மனையூடாக ஆலயத்தை மறுநாள் அதிகாலை 5.00 மணியளவில் சென்றடைவார். பக்கத்தர்கள் எம்பெருமானை தோழிலே சுமந்து செல்வார்கள். எம்பெருமான் வீதி உலா வரும் போது பக்கத்தர்கள் நூற்றுக்கணக்கில் முன்னும் பின்னும் செல்வார்கள். சுமார் 15 மணி நேரம் நடைபெறும் இந்த ஊர்உலா நிகழ்வில் மக்கள் எவ்வித களைப்பின்றி ஊர்வலம் முடியும் வரை செல்வார்கள். இந்த திருவிழா மக்களுக்கு ஒரு ஆத்ம பலத்தையும், உடல் பலத்தையும் கொடுக்கும். மக்கள் எவ்வித நோய் நொடி இன்றி உடல் ஆரோக்கியத்தடன் பல காலம் வாழ்ந்தார்கள். இன்றைய காலம் அப்படி அல்ல மக்களின் வாழ்க்கை பெருமளவு மனஅழுத்தம் நிறைந்தது. மாத்திரை உதவியுடன் பலர் வாழ்க்கையை கொண்டு செல்கிறார்கள்.

இந்த உற்சவ காலங்களில் பெருமளவு வெளிநாடுகளில் வசிக்கும் எமது கிராமத்து உறவுகள் வருகை தந்து சிறப்பித்தனர். அதோடு கொழும்பு,மற்றும் இலங்கையின் இதர பகுதிகளில் வாழும் மக்களும் கலந்து கொண்டதை காண கூடியதாக இருந்தது. ஒரு காலத்தில் சகல விழாக்களும் எமது ஊருக்குள்ளே நடந்து முடிந்து விடும். வெளியூரில் இருந்து திருமணமாகி போன ஒரு சில குடும்பங்களே இதில் கலந்து கொள்வார்கள். இன்று நிலமை அப்படி இல்லை நாம் எல்லோரும் பரந்து வாழ்கிறோம். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பல கண்டங்களில் வாழ்கிறோம், இலங்கையில் இருப்பவர்களும், பல இடப்பெயர்வுகளால் வேறு ஊர்களிலும், தென் இலங்கையிலும் வசித்து வருகிறார்கள். கடந்த 30 வருடமாக நடைபெற்ற கொடிய போர் எல்லோரையும் ஒவ்வொரு இடத்திற்கு கொண்டு போய் சேர்த்துள்ளது. எதிர் காலத்தில் நாம் எல்லோரும் பழைய வாழ்க்கைக்கு போவோம் என்பது கனவிலும் நடக்காத ஒரு விடயம்.ஆனாலும் சினிமாவில் வருவது போல் திருவிழாவுக்கு, வெவ்வேறு ஊர்களில் இருந்து கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். அதே போல் மூலை முடுக்கெல்லாம் வசிக்கும் எமது கிராமத்து உறவுகள் சந்திக்கும் ஒரு தளமாக இந்த வருடாந்த உற்சவம் திகழ வேண்டும் என்பது எல்லோரினதும் அவா. எல்லோருக்கும் பல பிரச்சினைகள் உண்டு, அதற்கு பொருளாதாரமும் இடம் கொடுக்கவேண்டும், ஆனாலும் அதற்கான முயற்ச்சிகளில் இறங்குவது சாலப்பொருந்தும். இன்று நாட்டின் சூழ் நிலை நன்றாக இல்லை என்பது உண்மை தான் எதிர்காலத்தில் சூழ் நிலை மாறலாம். அப்போது நாம் எல்லோரும் சந்திக்கும் தளமாக இப்படியான உற்சவம் அமையும் என்பது திண்ணம்.

குப்பிழான் கற்கரை விநாயகர் ஆலயத்திற்கென்று ரூபா 75,000 செலவில் மின்பிறப்பாக்கி திரு தவக்குமார் அவர்களால் திரு சபாரத்தினம் மூலம் வழங்கப்பட்டது. இதன் மூலம் மின்சாரம் தடைப்படும் போது இதன்மூலம் தொடர்ந்து மின்சாரம் கிடைக்க கூடியாதாகவுள்ளது.

திரு திருமேனி பஞ்சாட்சரதேவன் அவர்களால் ஆலயதிற்கென்று ரூபா 22,000 செலவில் focus lights அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதன் மூலம் 4 வீதியும் இரவில் பிரகாசமாக காட்சி அழிக்கிறது. ஆலய உற்சவத்தை முன்னிட்டு தம்பிஜயா நினவு தண்ணீர் பந்தலில் காவல்துறை அதிகாரி திரு கணேசன் அவர்களும், திரு சிவகுரு பஞ்சலிங்கம் அவர்களும் அடியார்களின் தாக சாந்தியை போக்கும் வண்ணம் 10 நாள் உற்சவ நாட்களில் குளிர்பானங்களை வழங்கினார்கள். தேர்த்திருவிழா அன்று விக்கினேஸ்வரா இளைஞர் அபிவிருத்தி அமைப்பு வெளிநாட்டுக் கிளையால் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு அடியார்களுக்கு வழங்கப்பட்டது.திரு நல்லதம்பி அவர்கள் தமது Tractor மூலம் 10 நாட்களும் வீதிக்கு தண்ணீர் அடித்து, வீதியை சுத்தமாக்கி பக்தர்கள் வழிபடுவதற்கு பெருமளவு பங்கை செய்துள்ளார். உற்சவகாலம் 10 நாட்களிலும் அடியார்களுக்கு அன்தானம் வழங்கப்பட்டது. திரு பஞ்சாட்சரதேவன், திரு நல்லதம்பி ஆகியோரின் ஆதரவில் 10 நாள் திருவிழாவும் ஒளிப்பதிவாக்கப்பட்டது. திரு பஞ்சாட்சரதேவன் அவர்களால் ஆலய முன் பகுதி அட்டையில் படமாக்கப்பட்டு தேர்த்திருவிழாவன்று விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைத்த ஒன்றரை லட்சம் நிதி ஆலய முன்பகுதி வர்ணம் பூசுவதற்கு வழங்கப்பட்டது.

தகவல், படங்கள் - திரு சசிதரன் ஆசிரியர், திரு பரம்சோதி தனுசன்
எழுத்துருவாக்கம் - ந.மோகனதாஸ்