யாழ்.குப்பிளான் கன்னிமார் கௌரி அம்பாள் வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்ற உற்சவத்துடன் இன்று வெகுவிமரிசையாக ஆரம்பம். updated 24-04-2015


யாழ்.குப்பிளான் வீரமனையம்பதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று வியாழக்கிழமை(24.04.2015) காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.இதில் பெருமளவான அம்பிகை அடியார்கள் கலந்து கொண்டனர்.விசேட நிகழ்வாக ஆலய பரிபாலன சபைத் தலைவர் சோ.பரமநாதன் தலைமையில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வு நிலைப் பணிப்பாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். மாலை உற்சவத்தில் சைவப் புலவர் கந்த சத்தியதாசனின் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
தொடர்ந்து 10 நாட்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மகோற்சவத்தில் அடுத்தமாதம் 1 ஆம் திகதி இரவு 7 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 2 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இரதோற்சவமும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை(03.5.2015) முற்பகல் 11 மணிக்குத் தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.

 


ஆறாம் திருவிழாவான எதிர்வரும் புதன்கிழமை(29.04.2015) வசந்த உற்சவமன்று காலை 11 மணிக்குக் கௌரியம்பாளுக்கென புதிதாக அமைக்கப்பட்ட புதியசித்திரத் தேர் வெள்ளோட்ட விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.


திருவிழாக் காலங்களில் தினசரி காலை உற்சவம் காலை 08.30 மணிக்கு ஆரம்பமாகி 11 மணிக்கு வசந்தமண்டபப் பூஜை இடம்பெற்று,மதியம் 12.30 மணிக்கு நிறைவு பெறும்.மாலை உற்சவம் 05.45 மணிக்கு ஆரம்பமாகி 6.45 மணிக்குச் சிறார்களின் சொற்பொழிவு இடம்பெற்று இரவு 7.30 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை ஆரம்பமாகி இரவு 9.30 மணிக்கு நிறைவு பெறும்.அத்துடன் தினமும் மகேஸ்வர பூஜை(அன்னதானம்) இடம்பெறுமெனவும் ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது.


செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்.