கண்ணீர் அஞ்சலி


குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு கணபதி மெய்யழகன் அவர்கள் 06-07-2013 சனிக்கிழமை காலமானார். அன்னார் ஒரு சைவ சமய பற்றாளரும், சிறந்த சமூக சேவகருமாவார். யாழ் மாவட்ட தெங்கு, பனம் பொருள் நிறுவனத்தின் முக்கிய அங்கத்தவருமாவார். அவர் தனது வாழ் நாளில் தமது சமூகத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த ஒரு சமூக சேவகன். இந்து சமயத்தின் மீது பற்றுக்கொண்ட அந்த உன்னத மனிதன் தனது இவ்வுலக வாழ்வை நிறைவு செய்து இறைவனடி சேர்ந்தார்.

தைலங்கடவை ஆலய வளர்ச்சிக்கும், மக்களிடையே தமது மதத்தின் மீது தொடர்ந்தும் பற்றுக் கொள்வதற்கும் அயராது உழைத்தார். வேற்று மதத்தார் மதமாற்றம் செய்ய முனைந்த பொழுது அதை துணிவுடன் தனித்து எதிர்த்து தமது சமூகம் மதம் மாறுவதை தடுத்த அந்த மதப் பற்றாளன், ஊர் பற்றாளனை நாம் இன்று இழந்து தவிக்கின்றோம். அவரின் முற்று முழுதான சமூக சேவைகள், அவரின் வாழ்க்கை வரலாறு எமக்கு கிடைக்கவில்லை அவர் பற்றி மேலதிக தகவல்கள் கிடைக்கும் போது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அன்னாரின் இழப்பினால் துயறுற்றிருக்கும் அவரின் குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னார் இப்போது எம்முடன் இல்லை என்ற போதும் அவரின் சிறந்த பணிகள் எம் மக்களின் உள்ளங்களில் என்றும் நிலைத்து நிற்கும். அவரின் பணிகளை தொடர்ந்து எடுத்துச் செல்வதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

குப்பிழான் வெப் நிர்வாகம்