சிறப்பாக நடைபெற்ற கனடா வாழ் குப்பிழான் மக்களின் ஒன்றுகூடல். update 02-08-2015


01-08-2015 சனிக்கிழமை கனடா வாழ் குப்பிழான் மக்களின் ஒன்று கூடல் மோர்ணிங் சைட் பாக்கில் சிறப்பாக நடைபெற்றது. காலை 11 மணிக்கு திருமதி தங்கமுத்து தம்பித்துரை அவர்களின் தேவாரத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. அதன் பின்னர் கனடிய தேசிய கீதம் இசைக்கப்பட்டு போரில் உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்ற தலைவர் அப்பன் அவர்களின் தலைமை உரை இடம்பெற்றது. ஒவ்வொரு வருடமும் நமது கிராமத்துக்கு சேவை செய்த அமரர்களாகிய 3 பேரை நினைவு கூருவார்கள் அந்தவகையில் இம்முறை அமரர் சுப்பையா கனகரட்ணம், அமரர் கணேசலிங்கம், அமரர் பொன்னையா நடராசா போன்றோர் நினைவுகூரப்பட்டனர். தலைவர் தனதுரையில் அண்மையில் அமரத்துவமடைந்த அமரர் தம்பு தருமலிங்கம், அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன் அவர்கள் செய்த சேவைகளை கூறி அவர்களை நினைவு கூர்ந்தார்.

அதன் பின்னர் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகியது. சிறுவர்களுக்கான, பெரியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றது. விதம் விதமான குளிர் பானங்கள், நாவுக்கு சுவையான சுடச்சுட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. உணவு வகைகளை அந்த இடத்திலேயே தயார் செய்து பரிமாறினார்கள். 4மணிக்கு பிறகு கடலையும், சூடான பானங்களும் வழங்கப்பட்டது. இறுதியாக சுடச்சுட கூழ் வழங்கப்பட்டது. கடினமான வேலையை இலகுவாக செய்து முடித்தார்கள் மன்ற உறுப்பினர்களின் ஒத்துளைப்புடன்.

மாலையில் கடும் மழை காரணமாக போட்டிகள் இடை நிறுத்தப்பட்ட போதும் மழை விட்டதும் மீண்டும் போட்டிகள் ஆரம்பமாகியது. கயிறுளுத்தலுடன் இனிதே போட்டிகள் நிறைவு பெற்றது.

போட்டிகளை தொடர்ந்து சிற்றுரைகள் ஆரம்பமாகியது. திரு பொன்னையா சிவா ஆசிரியர் தனதுரையில் இந்த வாசிகசாலை அமைப்பதற்கு மன்ற தலைவர் திரு அப்பனின் கடும் முயற்சியும் அர்ப்பணிப்பும் அளப்பெரியது என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து மன்ற செயலாளர் திரு செல்வநாயகம் சற்சொரூபன் தனதுரையில் மன்றத்தின் செயல்பாடுகள் ஊரின் வளர்ச்சியை முன்நிறுத்தி இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார். திரு நாகையா அப்பன் அவர்கள் குறிப்பிடும் போது இந்த வருட இறுதிக்குள் வாசிகசாலை வேலைகள் முடிவுறும் என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து கவிஞரும், எழுத்தாளருமான திருமதி தங்கமுத்து தம்பித்துரை தமதுரையை ஆற்றினார். திரு மோகனதாஸ் அவர்களின் உரையுடன் பரிசளிப்பு விழா ஆரம்பமாகியது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வளங்கப்பட்டது. தமது உறவுகளின் ஞாபகார்த்தமாக இந்த வெற்றிக் கேடயங்கள் வழங்கப்பட்டது. பெருமளவு மக்கள் பங்கு பற்றிய இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றது.

 

மேலதிக புகைப்படங்களை குப்பிழான்வெப் முகப்புத்தகத்தில் பார்க்கலாம்