50வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் குப்பிழான், இந்த பொன் விழா ஆண்டில் வரலாற்று நூல் வெளியிட எடுக்கும் முயற்சியும் அதற்கு உங்களிடம் எதிர்பார்க்கும் பங்களிப்பும். updated 28-12-2013


எமது ஊராகிய குப்பிழான் கிராமம் தனிக் கிராமம் என்ற அந்தஸ்த்தைப் பெற்று 50 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. 01-01-1964 அன்று தான் தனிக்கிராமம் அந்தஸ்த்து எமக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் எமது கிராமானது குப்பிழான் என்ற பெயரோடு இருக்கவில்லை. இன்றைய குப்பிழான் அன்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவை முறையே ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், மயிலிட்டி தெற்கு ஆகிய மூன்று கிராமங்களுடன் சேர்க்கப்பட்டிருந்தன. இதனால் குப்பிழான் கிராமத்திற்கென்று தனித்துவமான ஒரு வசதியும் கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இயங்கவில்லை எமது மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று தமக்கு தேவையானவற்றை பெற வேண்டி இருந்தது. எல்லா தேவைகளுக்கும் மற்றைய ஊர்களுக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை காணப்பட்டது.


எமது ஊரை தனிக்கிராமமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக இருந்தாலும் அதற்கு செயலுருவம் கொடுக்கப்பட்டது 1950ஆம் ஆண்டு ஆகும். கேட்டவுடன் எதுவும் கிடைத்து விடாது அல்லவா இதற்காக பல முயற்சிகள், போராட்டங்கள், பல அற்பணிப்புக்கள் செய்ய வேண்டிய தேவை இருந்தது. அதை எமது ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் என்ற பேதமின்றி முன்னெடுத்தார்கள். உடனடியாக பலன் எதுவும் கிடைக்கவில்லை. 13 வருட போராட்டத்திற்கு பிறகு எமக்கு கிடைத்த வெற்றி தான் குப்பிழான் என்ற தனிக்கிராம அந்தஸ்த்து. ஒரு இடத்தை தனி கிராமமாக மாற்றுவது என்பது சாதாரண விடயம் அல்ல. அதுவும் அண்ணளவாக ஒரு சதுர மைல் உள்ள பிரதேசத்தை தனிக் கிராமம் ஆக்குவது என்பது சாதாரண விடயமா.புதிய கிராமங்கள் உருவாக்கும் போது அதற்கான தேவைகளையும் செய்து கொடுக்க வேண்டும் உதாரணமாக தனி கிராம சேவகர், தபால் நிலையம், பலநோக்கு கூட்டுறவு சங்கம் என்று பல தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இதை சாத்தியமாக செய்வது என்பது இலகுவான காரியம் அல்ல.


929 சதுர கிலோமீற்றர் பரப்பளவை கொண்ட யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே 400க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 1964 ஆம் ஆண்டு யாழ் மாவட்ட சனத்தொகை 6 லட்சங்கள் குப்பிழானில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 3000 ஆகும். தனிக் கிராமம் ஆக்குவதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அனுமதி பெற வேண்டும். சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து சாதாரண மனிதர்களாகிய நாம் எப்படி சாத்தியமாக்கலாம் என்பதை சிந்தித்தீர்களா. அதனால் தான் நீண்ட காலங்கள் போராட வேண்டி இருந்தது. பலர் இதற்கு ஆதரவு வளங்கியிருந்தாலும் இதை முன் நின்று செய்தவர்கள் குறிப்பிட்ட சிலர் தான். அவர்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த பலன் தான் குப்பிழான் என்ற தனிக்கிராமம். இந்த புனித பயணத்தில் அரும்பாடுபட்டவர்களின் விபரங்கள் எமக்கு கிடைக்கவில்லை ஆனால் இந்த பூமி பந்து இருக்கும் காலம் வரை அவர்கள் எமக்கு செய்த இந்த வரலாற்றுப் பணியை யாரும் மறக்க முடியாது மறக்கவும் கூடாது.


ஒரு இனமோ சமூகமோ வாழ்வதற்கு ஆதராமாக இருப்பது அதன் வரலாறு தான். ஒவ்வொரு நாடும் தமது வரலாற்று பாடங்களுக்கே அதிக முக்கியம் கொடுக்கின்றன. எமது ஊரின் வரலாறும் மறக்கப்படாமல் இந்த பூமி பந்து இருக்கும் வரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எல்லோரையும் சாரும். அந்த வகையில் குப்பிழான்வெப் இணையத்தளம் மற்ற அமைப்புக்களின் உதவியுடன் எமது வரலாற்றை ஆவணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இதற்கு செயலுருவம் கொடுப்பது உங்களின் கைகளில் தான் உள்ளது. குப்பிழான் தனிக் கிராமமாக உருவாகிய போது 70 பக்கங்கள் கொண்ட கிராமோதய மலர் வெளியிடப்பட்டது. அதற்கு பிறகு எந்த வரலாற்று ஆவணமும் வெளியிடப்படவில்லை. அதனால் பொன் விழா மலராக ஒரு வரலாற்று ஆவணத்தை வெளியிட உத்தேசித்துள்ளோம். இந்த வரலாற்று நூலில் குப்பிழான் சம்பந்தமான எல்லா விடயங்களும் இடம்பெறவுள்ளன. உதாரணமாக கற்கரை கற்பக ஆலய வரலாறு, கன்னிமார் ஆலய வரலாறு, எமது பரம்பரிய கலைகள், அன்றைய குப்பிழானின் உணவுப் பழக்கங்கள் எப்படி இருந்தது, காலத்திற்கு காலம் காதல், திருமணங்கள் எப்படி இடம்பெற்றது போன்ற சுவார்யமான தலைப்புக்களில் உங்கள் கட்டுரைகளை எதிர்பார்க்கின்றோம். கடந்த சில வருடங்களில் அமைக்கப்பட்ட ஆலய வரலாற்றையும் பதிவு செய்யலாம் காரணம் இன்னும் 50 வருடங்களில் அதன் வரலாறு பலருக்கு தெரியாமல் போகலாம் அல்லவா. பலர் சிந்திக்கலாம் எமக்கு சரியாக எழுத தெரியாது என்று ஆனால் அவர்களிடம் அரிய தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார்கள் உங்களுக்கு தெரிந்த வசன நடையில் தகவல்களை அனுப்பி வையுங்கள் கட்டுரைகளாக நாம் உருவாக்குவோம். ஆதாரமாக உங்கள் பெயரையும் அதில் சேர்த்துக் கொள்வோம். தகவல் கொடுத்தவர்களின் பெயரும் இந்த வரலாற்று நூலில் நிட்சயம் இடம்பிடிக்கும். இந்த பூமி பந்து இருக்கும் வரை இந்த வரலாற்று ஆவணம் இருக்கும் என்பதில் ஜயமில்லை.

இந்த வரலாற்று நூலில் உங்கள் அன்புடையவர்களின் நினைவஞ்சலியும் கட்டணத்துடன் இடம்பெறும் இதன் கட்டண விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். எமது கிராமத்தை சேர்ந்த 15 பேருக்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்களின் கட்டுரைகள் இடம்பெறும் அதே வேளை பொது மக்களாகிய உங்களிடமிருந்து தகவல்களாகவோ அல்லது கட்டுரைகளாகவோ எமக்கு எழுதி அனுப்புமாறு வேண்டுகின்றோம். அதே நேரம் கட்டுரைகளை எழுத விரும்புபவர்கள் எந்த தலைப்பில் எழுத விரும்புகிறீர்கள் என்ற தகவல்களையும் எங்களுக்கு முன்கூட்டியே அறிய தாருங்கள். பலர் ஒரு தலைப்பில் எழுதுவதை தவிர்பதற்காகவே இந்த முன் ஏற்பாடு. நாமாக உங்களிடம் தொடர்பு கொள்வோம் என்று எதிர்பார்க்காமல் நீங்களே உங்கள் வரலாற்றுக் கடமையை செய்ய முன்வாருங்கள்.


2014 ஆண்டை பொன்விழா கொண்டாட்டமாக சகல அமைப்புகளும் கொண்டாடுமாறு வேண்டுகின்றோம். ஊரில் இயங்கும் ஆலயங்கள், விளையாட்டுக் கழகங்கள், பாடசாலை, தனியார் கல்வி நிலையங்கள்,மற்றைய பொது அமைப்புக்கள், புலம் பெயர் அமைப்புக்கள் இந்த வேண்டுகோளை ஏற்று தனி விழாவாக கொண்டாடுமாறு வேண்டுகின்றோம். அப்படி முடியாவிட்டால் உங்கள் விழாவோடு இதையும் இணைத்து செய்யுமாறு வேண்டுகின்றோம்.

உங்கள் தொடர்புகளுக்கு -
மோகனதாஸ் 00447725868320
பஞ்சாட்சரதேவன் 0049243170715

Email - kuppilan@hotmail.com