எமது இணையத் தளத்தை வாழ்த்தி வரவேற்று ஊர் பெரியார்கள், நண்பர்கள் வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அவைகள் வருமாறு

சிவத்தமிழ் வித்தகர் திருவாளர் சிவ.மகாலிங்கம் விடுக்கும் வாழ்த்து செய்தி

சிவப்பூமியாகிய ஈழமணித் திருநாட்டில் குப்பிழான் கிராமம் ஞானபூமியாக மிளிர்கிறது. சித்தாந்த கலாநிதி மகான் காசி வாசி செந்திநாதையர் பிறந்த பூமியாகையால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் குப்பிழான் கிராமம் ஒரு திருப்பரங்குன்றம் போல அமைந்துள்ளது என்பது பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களின் கூற்றாகும். இசைவல்லார் செல்லத்துரை நாடகாசிரியர் பீதாம்பரம் ஆகியோர் இந்த மண்ணிலே தோன்றி இசைக்கலை நாடகக்கலை ஆகியவற்றைச் சிறப்பாகப் பேணி வளர்த்தார்கள்.

சிவமணம் கமழும் குப்பிழான் கிராமத்தில் பல்வேறு சைவ ஆலயங்கள் அடியார்களுக்கு அருளை வாரிவழங்கும் பெருங்கருணைத் தேக்கங்களாகக் காணப்படுகின்றன. கற்பக விநாயகர் ஆலயம் சோதி விநாயகர் ஆலயம் கன்னிமார் அம்பாள் ஆலயம் என்பன மகோற்சவம் நடக்கும் ஆலயங்களாகத் திகழ்கின்றன. சித்த புருஸராகிய சரவணைச் சாமியாரின் சமாதியிலே எழுந்த சமாதி ஆலயமும் இங்கே உள்ளது. புராதனமான கேணியுடன் கூடிய வைரவர் ஆலயம் காளி அம்பாள் ஆலயம் என்பவற்றுடன் பல சிறு ஆலயங்களும் குப்பிழான் கிராமத்தின் குறிச்சிகள் தோறும் காணப்படுகின்றன.

பிள்ளையார் வழிபாடு இங்கே சிறப்பிடம் பெற்றிருப்பதால் பாடசாலை விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம் என்றும், வாசிகசாலை விக்கினேஸ்வரா சனசமூக நிலையம் என்றும் விளையாட்டுக் கழகம் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் என்றும் பெயர்களைப் பெற்றுள்ளது.

சிவக்கோலத்தோடு வாழும் செம்மண் வளமுடைய இக்கிராமத்து மக்கள அகமும் புறமும் தூய்மையானவர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர்கள். தர்ம நெறி பிசகாதவர்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்கள். உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எம் மண்ணையும் மக்களையும் மிகவும் நேசிப்பவர்கள்.

புலம்பெயர்ந்து வாழும் எமது கிராம மக்கள் தாம் வாழும் நாடுகளில் குப்பிழான் கிராமம் பற்றிய இணையத்தளத்தினை உருவாக்கி வைத்தார்கள். இவை அனைத்தையும் இணைத்து பொதுவான ஒரு இணையத்தளத்தை உருவாக்கும் முயற்சியில் குப்பிழான் கிராமத்தின் மைந்தன் தற்பொழுது லண்டனில் வாழும் மோகனதாஸ் அவர்கள் செயற்பட்டு வருகிறார். எனது மாணவச் செல்வங்களில் ஒருவராகிய நல்லதம்பி மோகனதாஸ் அவர்கள் தான் பிறந்த மண்ணை மறவாது செய்யும் இப் பணியினை மனமார வாழ்த்துகின்றேன்.

உலகின் எத்திசையில் இருந்தாலும் தாம் பிறந்த கிராமத்தின் பெருமையினை விளங்க வைக்க வேண்டுமென்று செயற்படும் எங்கள் கிராமத்தின் பிள்ளைகள் அனைவரையும் எங்கள் குலதெய்வமாகிய கற்பக விநாயகன் தோன்றாத் துணையாக நின்று வழி நடாத்த வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

நன்றி .

 

கற்கரை கற்பக விநாயகராலயத் திருப்பணி சபையினரின் வாழ்த்து செய்தி

எமது குப்பிழான் வாழ் அன்பர்கள் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது ஊரையும் ஊரில் உள்ளவர்களையும் மறந்ததில்லை. அவர்களில். பலரது நிகழ்வுகள் வாழ்கின்ற நாடுகளில் உள்ள பத்திரிகைகள் சசிகைகள் வானொலிகள் தொலைகாட்சிகள் இணையத் தளங்கள் என்பவற்றின் முலம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் எமது கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்துக்கு அருகாமையில் வசித்த ஆலயத்தின் தொண்டர் திரு மோகனதாஸ் இலண்டன் மாநகரில் இருந்து நண்பர்களோடு உலகத்தில் உள்ள எம்மவர்களை இணையத்தளத்தின் ஊடாக இணைக்கின்ற செயற்பாடுகளை மேற்கொள்ளுவதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். அவரின் பணி சிறப்புற குப்பிழான் பதியுறை கற்கரைக் கற்பக விநாயகனின் பாதம் பணிந்து வேண்டி வாழ்த்துகின்றோம்.
வளரட்டும் உம் பணி வேள முகத்து விநாயகனை தொழ வாழ்வு மிகுந்து வரும்.
சுபம்
நன்றி

திரு.தி.சசிதரன்(ஆசிரியர்)
செயலாளர்

குப்பிளான் விக்கினேஸ்வரா மன்றம் கனடா அமைப்பின் தலைவர் திருவாளர் சண்முகம் சதானந்தனின் வாழ்த்து செய்தி


அன்பின் தம்பி மோகனதாஸ் அறிவது

உங்களால் ஆரம்பிக்கபட்டு நடாத்தப்படும் குப்பிழான் மக்களிற்கான இணையத்தளத்திற்கு கனடா வாழ் குப்பிழான் மக்களின் சார்பில் வாழ்த்து செய்தி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த இணையத்தளம் தொடர்ந்து நல்வளர்ச்சி பெற்று புதிய தொழில் நுட்பங்களை உள்ளடக்கி உலகின் பல பாகங்களிலும் பரந்து வாழும் குப்பிழான் மககளை ஒன்றிணைக்கும் பாலமாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நல்முயர்ச்சிக்கு எமது மக்கள் அனைவரும். தம்மால் இயன்ற உதவிகளையும் ஒத்துளைப்பையும் வழங்க வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

பரந்து வாழும் எமது குப்பிழான் மக்கள் தாம் வாழும் நாடுகளில் சமயம் மொழி விஞ்ஞானம் மருத்துவம் பொருளியல் சட்டம் போன்ற பல்வேறு துறைகளில் குப்பிழான் மண்ணிற்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்து வாழ்ந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

பல நாடுகளிலும் வாழும் குப்பிழான் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து குப்பிழானில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எமது கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்வதற்கும் எமது சமூகத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்கும் இவ் இணையத்தளம் உதவ வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

 

பிறைன் கல்வி நிலய ஸ்தாபகரும் விஞ்ஞான ஆசிரியருமான திருவாளர் சிவா அவர்களின் வாழ்த்து செய்தி

காரிருளை விரட்டி கதிர் ஒளி பரப்ப உதிக்கும் ஆதவன் போல ஆதவனின் கதிரொளி கண்டு மலரும் தாமரை போல தளிர் பரப்பி விழுது விட்டு நீடுடி வாழும் ஆலமரம் போல எமது மக்களின் மனங்களை குளிர்வித்து அறிவு ஒளி பரப்பி எமது மக்களினது கடந்த கால நிகழ் கால எதிர் கால நினைவுகளை எமது மக்களின் மனங்களில் குறைவின்றி குறையின்றி தர பிரசவிக்கும் எமது குப்பிழான்வெப்கொம் பல சிறப்புகளும் பாராட்டுகளும் படிப்பினைகளும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு நீடுடி வாழ்க என வாழ்த்துகிறேன்.

இந்த இணையத்தளத்தை தந்துதவும் திரு.மோகனதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நனறியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

குப்பிழான் தங்கம் அவர்களின் வாழ்த்து செய்தி.

இதய வானில் எழுந்த இணையம்

அத்தி முகத்தான் அருள் பாலிக்கும்
செந்தமிழ் பேசும் சுந்தரப் பூமி
அந்தணர் ஆன்றோர் அருளாளர் வாழ்ந்த
குப்பிழான் ஊரின் பெயரினைச் சொல்ல

மோகனப் புன்னகை சிந்திடும் தாசனின்
இதய வானில் எழுந்த இணையமே
உதயமானாய் உன் புகழ் பரவுக!
அகிலம் எங்கும் ஆற்றிடு திறனை!

மண்ணின் வளமும் மக்களின் சிறப்பும்
கண்ணியம் மிக்க கல்வி மான்களும்
செம்மனச் செல்வர்கள் சித்தர் வாழ்வும்
முத்தமிழ் வித்தகர்கள் முதலானோர் சிறப்பும்

இத்தரை தன்னில் எழிலுடன் வாழும்
புத்தி யீவிகள் புகழ் மிக்கோர் பெருமைகள்
விஞ்ஞான விந்தைகள் மெஞ்ஞான மேன்மைகள்
எஞ்ஞான்றும் விளங்க எடுத்தியம்புக!

குப்பிழான் இணையமே எம்மினிய நிலவே!
முப்போதும் முழு நிலவாய் முன்னேறி வளர்க
பல்லோர் போற்றப் பார் புகழ
வாழ்க! வாழ்க! வாழ்க பல்லாண்டு!

ஞான சொல் வித்தகர் சிவபாதம் கணேஸ்குமாரின் வாழத்து செய்தி
ஓம் ஸ்ரீ குப்பிழான் கற்பக விநாயகர் துணை

எல்லாம் வல்ல கற்பக விநாயகனின் திருவருளால் சைவமும் தமிழும் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் சிறப்போங்கிய அழகிய கிராமமே குப்பிழான் ஆகும். தேவாரத்தை வேதசாரம் என்று, சைவசமயமே போற்றும் அளவிற்கு எடுத்து விழங்கிய வாசி குப்பிழான் செந்தில்நாத ஐயர். அதே போன்று கர்நாடக சங்கீதத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பெற்று தந்தவர் குப்பிழான் மக்களால் போற்றப்படும் பாட்டுக்கார செல்லத்துரை ஆவார்.இவர்கள் இருவரும் இன்றும் இலங்கையில் உள்ள பாடசாலைகளிலும் பல்கலை கழகங்களிலும் இவர்கள் பற்றி சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாறு பல சிறப்புக்களும் கொண்ட கிராமமே குப்பிழான் ஆகும்.

எனவே எத்தைனையோ தொலைவு தூரத்தில் கடல் கடந்து நாங்கள் உலகம் எங்கும் பல நாடுகளிலும் வசித்து வந்தாலும் எமது உறவுகளை இணைக்கும் ஒரு உறவுப் பாலமாக kuppilanweb.com என்ற இணையத் தளத்தினூடாக, லண்டனில் உள்ள தற்போது குப்பிழான் மன்றத்தின் தலைவராக பணியாற்றும் நல்லதம்பி மோகனதாஸ் (வெள்ளி அண்ணனின் மகன்) இதனை இயக்கி வருவதனை பார்த்து மிக்க மகிழ்ச்சியுற்று எனது சார்பிலும் குப்பிழான் மக்கள் சாழ்பிலும் மனமார வாழத்தி இச்சேவை தொடர எல்லாம் வல்ல கற்பக விநாயகர் துணை புரிவாராக.