குப்பிழான் பொதுவான செய்திகள்

 

 

யாழ். குப்பிழானில் மூவரின் உயிர்களைப் பலியெடுத்த இடிமின்னல். updated 16-04-2019

 

 

இன்றைய தினம் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றோம். அவர்களின் குடும்பத்தாரின் துயரத்தில் இணைவதோடு அவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்குமாறு வேண்டுகின்றோம்.

2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி!! இடிமின்னல் மழையில் நடந்த சோகம்!!

 

 

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு மயிலங்காடு J/ 203 கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்தவர்கள், இன்றையதினம் புகையிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த வேளை நீண்ட நாட்களின் பின்னர், இடியுடன் கூடிய மழை காரணமாக , இடி மின்னல் தாக்கி மூன்று பேர் இறந்துள்ளமை வருத்தமளிக்கின்றது.

ஒருவர் மதிய உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். ஏனையோரில் ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென மழை பெய்த காரணத்தினால் அருகில் இருந்த தென்னைமரத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் ஒதுங்கியுள்ளனர்.

இதன் போது இடி மின்னல் குறித்த தென்னை மரத்தின் மீது விழுந்ததில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மயிலங்காடு பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்களான அமரர் திருநாவுக்கரசு கண்ணன் வயது 48, அமரர் கந்தசாமி மைனாவதி வயது 52 மற்றும், அமரர் ரவிக்குமார் சுதா வயது 38 ஆகியோர் குப்பிளான் பிரதேச தோட்ட பகுதியில் வேலை செய்திருந்த போதே பலியாகியுள்ளனர்.அவர்களின் ஆத்ம சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உடனடியாக கள பிரதேசம் மற்றும் வைத்தியசாலைக்கும் விஜயம் செய்திருந்தனர்.

 

 

யாழ். குப்பிளானில் வறுமை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர். updated 28-09-2018

வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதனின் சொந்த நிதிப் பங்களிப்பில் யாழ்.குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாடசாலைச் சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு இன்று வியாழக்கிழமை(27) காலை-10.15 மணி முதல் வித்தியாலயத்தின் கிருஸ்ணர் அரங்கில் அதிபர் க. காராளசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கான சீருடைகளை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலாய பழைய மாணவரும், குப்பிளான் மண்ணின் மைந்தனுமான த. கணேசநாதன் தனது சொந்த நிதிப் பங்களிப்பில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட 30 மாணவ, மாணவிகளுக்குச் சீருடைகள் வழங்கி வைத்துள்ளார்.

சீருடைகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் வித்தியாலய ஆசிரியர் சி. மதனமோகன்ராஜ் நன்றியுரையாற்றினார்.

குறித்த நிகழ்வில் வடமாகாண உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.சி. சமரசிங்க, காங்கேசன்துறைப் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எம். உதயானந்தன், வித்தியாலய பழைய மாணவர் ஐ.தங்கமலை, மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதன் குப்பிளான் மகாவித்தியாலய மாணவர்களின் நிலையறிந்து மூன்றாவது தடவையாக உதவிக்கரம் நீட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 


 

மகனின் இறுதிச் சடங்கில் கலந்த கொள்ள சென்ற தாய், மகனின் பிரிவை தாங்க முடியாமல் அதிர்ச்சியில் மரணம். updated 06-06-2017

 


கடந்த வாரம் குப்பிழான் காளி கோவிலடியை பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணன் அவர்கள் சுகயீனம் காரணமாக காலமானார். அவர்களின் தாயார் இலங்கையில் வசித்து வந்தார். தனது மகனின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்ற தாயாரான திருமதி இந்திரா அவர்கள் மகனின் பிரிவை தாங்க முடியாமல் அதிர்ச்சியில் மரணமானார்.


அவரின் உடல் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டு குப்பிழான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 

 

 

 


குப்பிளானில் இன்று அதிகாலை பெறுமதியான நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் திருட்டு: கூரிய ஆயுதங்களுடன் வந்த திருடர்கள் கைவரிசை (Photos)

 


யாழ்.குப்பிளானில் விவசாய தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் நீர் இறைக்கும் புதிய மோட்டார் இயந்திரமொன்று இன்று சனிக்கிழமை(08) அதிகாலை திருடர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

குப்பிளான் தெற்கு கம்பித் தோட்டம் பகுதிக்கு வந்த திருடர்கள் இன்று அதிகாலை விவசாய தேவைகளுக்காக மிகவும் பாதுகாப்பான முறையில் பொருத்தப்பட்டிருந்த 27 ஆயிரம் ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரத்தை உடைத்தெடுத்துச் சென்றுள்ளனர். கூரிய ஆயுதங்களுடன் வந்த திருடர்களே இன்று அதிகாலை-12.30 மணிக்கும் 01.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தக் கைவரிசையைக் காட்டியுள்ளனர். 

 


குறித்த விவசாயக் கிணற்றிற்கு அருகில் மோட்டாரைப் பறிகொடுத்த உரிமையாளரின் வீடு அமைந்துள்ள போதிலும் திருடர்கள் துணிகரமான முறையில் குறித்த மோட்டாரைத் திருடிச் சென்றுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருடர்கள் கொண்டு வந்த இரும்புக் கம்பியொன்று சம்பவ இடத்தில் காணப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் இன்று காலை சுன்னாகம் பொலிஸாருக்கு முறையிடச் சென்ற போதும் முக்கிய கூட்டமிருப்பதாகக் கூறி மோட்டாரைப் பறிகொடுத்தவர்களின் முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளதுடன், பகல்-11 மணிக்குப் பின்னர் முறையிட வருமாறு கூறியும் திருப்பியனுப்பியுள்ளனர். 

அதேயிடத்தைச் சேர்ந்த திருமதி- சரோஜினி தேவி கிருபைராசா என்பவருக்குச் சொந்தமான மோட்டார் இயந்திரமே இவ்வாறு திருட்டுப் போயுள்ளது.  குறிப்பிட்ட நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் திருட்டுப் போயுள்ளமை காரணமாக விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பியுள்ள மேற்படி குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் குப்பிளான் பகுதியில் அடுத்தடுத்து 18 வரையான நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரங்கள் களவாடப்பட்டிருந்தன. பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து திருட்டுப் போயிருந்த  நீர் இறைக்கும் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே மீண்டும் மேற்படி மோட்டார்த் திருட்டு இடம்பெற்றுள்ளது.

 


மீண்டும் குப்பிளானில் மோட்டார் திருட்டு இடம்பெற்றுள்ளமை குப்பிளான் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- எஸ்.ரவி. 

 

 

 

காய்ச்சலால் பீடிக்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  குப்பிளானைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு (Photo). updated 05-04-2017

 


ஒரு வகை வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ். குப்பிளானைச் சேர்ந்த குடும்பஸ்தரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றுப் புதன்கிழமை(05) உயிரிழந்துள்ளார். 

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தர் கடந்த-01 ஆம் திகதி திடீர்க் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்தும் அவருக்கு வைத்தியர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை அவரது உடல் அவயவங்கள் முழுவதும் செயலிழந்த நிலையில் காலை-09 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.  

அவருக்கு ஏற்கனவே சிறுநீரக நோய் இருந்துள்ளதாகவும் தெரியவருகிறது. 

குப்பிளான் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆறு பிள்ளைகளின் தந்தையாரான கந்தையா இரத்தினசிங்கம்{குழந்தை} (வயது-60) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.  

மேற்படி குடும்பஸ்தர் மரணமானமை குப்பிளானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி. 

 

 

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய நிர்வாக சபை கூட்டமும் அங்கு எடுக்கப்பட்ட முடிவுகளும். updated 09-02-2017

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய நிர்வாக சபை கூட்டம் 21-01-2017 அன்று திரு சந்திரவேல் தலைமையில் நடைபெற்றது. திரு பாலசுப்பிரமணியம் அவர்களின் தேவாரத்துடன் ஆரம்பமாகியது. கடந்த தைப்பொங்கல் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த விழாவில் ஊர் பிள்ளைகளின் நிகழ்வுகள் இடம்பெறாதது தொடர்பாக ஆராயப்பட்டது. பிள்ளைகள் சம்மதம் தெரிவித்தும் பயிற்றுவிப்பாளர்கள் சம்மதிக்காமையால் ஊர் பிள்ளைகளின் நிகழ்வுகள் இடம்பெற முடியவில்லை என்று சுட்டி காட்டப்பட்டது. ஆனாலும் இதை ஆட்சேபித்த திரு தட்சணாமூர்த்தி அவர்கள் எதிர்காலத்தில் தான் பாடசாலை, 2 கல்வி நிலையங்களுடனும் கதைத்து எமது ஊர் பிள்ளைகளின் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து தருவதாக கூறினார்.

RDO இல் உள்ள நல்ல புத்தகங்களை பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. பத்திரிகை நிதியினை முன்பு வழங்கியோரிடமிருந்து பெற்றுக்கொள்வதென தீர்மானிக்கபட்டது.

எதிர்காலத்தில் அவசரமாக முன்னெடுக்கப்படுகின்ற பணிகள் தொடர்பான பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- சாதாரண பாடங்கள் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு ஆங்கில சிங்கள பாடங்களை நடத்துதல்.
- கலைப்பாட விதானங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு நடனம் சங்கீதம் பாடங்களை நடாத்துதல்
- புலமை பரீட்சை சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கல்.

 

 


யாழ்.குப்பிளான் பகுதியில் கொள்ளையர்கள் கைவரிசை: கொழுத்த கடா அதிகாலையில் துணிகரத் திருட்டு 

 


யாழ்,குப்பிளான் தெற்குப் பகுதியில் வீடொன்றின் முன்னால் கட்டப்பட்டிருந்த கொழுத்த கடா ஆடொன்று நேற்றுத் திங்கட்கிழமை(30) அதிகாலை வேளையில் திருடர்களால் துணிகரமாகத் திருடிச் செல்லப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

வீட்டுக்கு மிக அருகிலுள்ள கொட்டிலில் குறித்த கடா ஆடு கட்டப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை-02.30 மணியளவில் வீட்டுக்கு முன்னாலுள்ள படலை சாத்தும் சத்தம் கேட்டுக் குறித்த வீட்டில் தனித்திருந்த குடும்பஸ்தர் நித்திரையால் கண் விழித்துப் பார்த்த போது ஆட்டுக் கொட்டிலில் கட்டப்பட்டிருந்த ஆடுகளில் கொழுத்த கடா ஆடு திருட்டுப் போனமை தெரிய வந்தது. 

இதனையடுத்துக் குறித்த குடும்பஸ்தர் அயலிலுள்ளவர்களுடன் சேர்ந்து குப்பிளான் பகுதியின் பல்வேறிடங்களிலும் தேடியும் திருட்டுப் போன கடா ஆட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

சுமார்-40 ஆயிரம் ரூபா பெறுமதியான கடா ஆடே இவ்வாறு திருட்டுப் போயுள்ளது. 

இதேவேளை, குறித்த கடா ஆடு ஆட்டோவில் திருடிச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் குறித்த பகுதியில் வசிப்பவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், நீண்ட நாட்களின் பின்னர் குப்பிளான் பகுதியில் இவ்வாறான துணிகரத் திருட்டு இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

செய்தித் தொகுப்பு:- குப்பிளானிலிருந்து செ.ரவிசாந்-

 

 

 

புலமைப்பரீசில் பரீட்சையில் குப்பிழான் மாணவர்களின் பெறுபேறுகள். updated 05-10-2016


இந்த வருடத்திற்கான புலமைப்பரீசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. சைல்ட் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் 4 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். அவர்கள் விபரங்கள் வருமாறு.


நர்தனன் 164 (குப்பிழான்)
ராஜவி 156 (ஏழாலை)
பவித்ராஜ் 154 (குப்பிழான்)
கஜமுகன் 152 (குப்பிழான்)

மற்றைய மாணவர்கள் 100க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுள்ளனர்.

 

புலமைப்பரீசில் பரீட்சையில் சித்தி பெற்ற சைல்ட் கல்வி நிலைய மாணவர்கள்

 

மேலும் தாயகம் கல்வி நிலைய 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். அவர்கள் பற்றிய விபரங்கள் கிடைக்வில்லை.

த.சந்தோஷ்-173 புள்ளிகள்

சி.டிலக்சன்-163 புள்ளிகள்

யோ.தனுசியா-158 புள்ளிகள்


குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலத்திலிருந்து இம்முறை யாரும் சித்தியடையவில்லையென்றாலும் பெரும்பாலனவர்கள் நல்ல பெறுபேற்றை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரீசில் பரீட்சையின் ஆசிரியர்கள் பெற்றோர்களின் பெரும் முயற்சியால் எமது மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் நல்ல பெறுபேற்றை பெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

 

 

குப்பிழான் விவசாயிகள் சம்மேளனத்தில் இடம்பெற்ற விவசாயிகளிடம் கருத்தறியும் நிகழ்வும் அண்ணமார் கோவிலுக்கு அன்பளிப்பாக வளங்கப்பட்ட பூசைப் பொருட்களும். updated 24-06-2016


விவசாய அமைச்சினால் நடாத்தப்பட்ட கருத்தறியும் நிகழ்வு விவசாயிகள் சம்மேளனத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு விவசாயியையும் தனித்தனியாக சந்தித்து பயிரிடுதலில் என்னனென்ன நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள் என்றும் விவசாயத்தை செய்வதற்கு எவ்வளவு தொகை செலவிப்படுவதென்றும் அவர்கள் அதன்கான பலனை பெறுகின்றார்களா என்று விரிவான மதிப்பீடு நடத்தப்பட்டது.

 

அண்ணமார் கோவிலுக்கு தேவையான அபிசேக பொருட்கள் திரு நவரட்ணராசா அவர்களால் அன்பளிப்பாக வளங்கப்பட்டது.

 


குப்பிளான் விவசாயிகள் சம்மேளனத்தின் விதை உருளைக் கிழங்கு விநியோக விழாவும் தெரிவு செய்யப்பட்ட 50 முதியவர்களுக்கு அன்பளிப்புப் பொதி வழங்கலும் நாளை. updated 10-12-2015


குப்பிளான் வடக்கு ,தெற்கு விவசாயிகள் சம்மேளனத்தின் விதை உருளைக் கிழங்கு விநியோக விழா நாளை  வெள்ளிக் கிழமை (11-12-2015) பிற்பகல் -2.30 மணி முதல் மேற்படி சம்மேளனத்தின் தலைவர் செ -நவரத்தினராசா தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட விவசாயிகள் சம்மேளனக் கட்டட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினரும் ,புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பிரதம விருந்தினராகவும் ,வலி.தெற்குப் பிரதேச செயலாளர் என்.நந்தகோபாலன்,யாழ்ப்பாணம் கமநல அபிவிருத்தித் திணைக்களக் கணக்காளர் கு.சுரேஸ்குமார்,யாழ்ப்பாணம் மாவட்டக் கிராம அபிவிருத்தி அதிகாரி நா.பஞ்சலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும்,குப்பிளான் தெற்குக் கிராம சேவையாளர் பி.மயூரதன் ,குப்பிளான் வடக்குக் கிராம சேவையாளர் என் .நவசாந்தன் ,உடுவில் பிரதேச செயலக விவசாயப் போதனாசிரியர் ப.மீனலோஜினி ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.அமிர்தா ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும்  கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த நிகழ்வின் போது கிராமப் பற்றாளர் சிங்கப்பூர் க.கிருஷ்ணரின் நிதியுதவியில் குப்பிளான் வடக்கு (ஜே-211),குப்பிளான் தெற்கு (ஜே-210) பிரிவுகளிலிருந்து கிராம சேவையாளர்களால் தெரிவு செய்யப்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான அன்பளிப்புப் பொதி  வழங்கும் நிகழ்வும் நடைபெறும் .

செய்தித் தொகுப்பு  :-செ -ரவிசாந். 

 


 

 


 

குப்பிளானில் வெடி பொருட்கள் மீட்பு! updated 22-10-2015

 

யாழ்.குப்பிளானில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.குப்பிளான் தெற்கு கிராமத்தில் தோட்டக்காணி ஒன்றிலிருந்து இரு வாகன எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் சில சாதாரண கண்ணிவெடிகளுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இப் பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குறித்த கண்ணிவெடிகளை நேற்றய தினம் கண்டுபிடித்துள்ளதாகவும்,

இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கும் ஊர் மக்கள் குறித்த கண்ணிவெடிகள் போர்காலத்தவை எனவும் எதிரியை இலக்கு வைத்து புதைக்கப்பட்டிருந்த்தாகவும் கூறிகின்றனர்.

 


 

யாழ் இந்து மன்றம் நடாத்திய நாடக போட்டியில் குப்பிழான் கன்னிமார் அறநெறி பாடசாலை வெற்றியீட்டியுள்ளது. updated 06-10-2015இந்து மன்றத்தினால் யாழ்ப்பாண மாவட்ட ரீதியாக நாடக இறுதிப் போட்டி கடந்த 27-09-2015 அன்று யாழ் வேம்படி மகளீர் கல்லூரியில் நடாத்தப்பட்டது. இந்த போட்டியில் பங்கு பற்றிய குறிஞ்சிக்குமரன் அறநெறி பாடசாலை 3ம் இடத்தை பெற்றது. திரு சோ.பரமநாதன் அவர்களின் எழுத்து நெறியாள்கையில் உருவான இந்த நாடகத்தின் தலைப்பு ஆன்மீகத்தை தேடி. இந்த நடாகத்தின் சிறப்பம்சம் என்னவெனில் இயற்கையாக உள்ள பொருட்களை வைத்து அலங்காரங்கள் செய்யப்பட்டது.

 


தகவல்.
சி.திசாந்தன்
குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய மூலஸ்தான வேலைகள் ஆரம்பம். updated 20-08-2015

 


கற்கரை கற்பக விநாயகர் ஆலய பாலஸ்தானம் கடந்த சில மாதங்களுக்கு முதல் செய்யப்பட்டு நாளை 21-08-2015 வெள்ளிக்கிழமை அத்திவார வேலைகள் ஆரம்பமாகவுள்ளன. அமையவுள்ள இந்த மூலஸ்தானம் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள் போல் கருங்கல்லினால் அமைக்கப்பட்டால் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் இந்த கட்டிடம் அழியாமல் பேணி காக்க முடியும். இதன் செலவுகள் ஒரு கோடியை தாண்டலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆகவே ஆலய அடியார்கள் தமது பங்களிப்பை வளங்குமாறு வேண்டுகின்றார்கள் ஆலய நிர்வாக சபையினர்.

 

 குப்பிளானில் கசிப்பு உற்பத்தி! இருவர் கைது! updated 12/07/2015

 

குப்பிளான் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் சுன்னாகம் பொலிசாரிடம் வகையாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்ற நேற்று சனிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட குப்பிளான் தைலங்கடவைப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அற்ற பற்றைகள் நிறைந்த பகுதியில் சிலர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.


இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்க்கு சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரதீப தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் குறிப்பிட்ட நபர்களை சுற்றி வளைத்;துள்ளார்கள்.இந் நிலையில் இருவர் பிடிபட ஒருவர் பற்றைகள் ஊடக தப்பி ஒடி தலைமறைவாகியுள்ளார். இவர்களிடம் இருந்த 24 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்க பயன்படுத்திய பொருட்’கள் மற்றும் சில பொருட்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 


 

யாழ்.இலுப்பையடிச் சந்தியில் இன்று இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள்-வடி வாகன விபத்தில் குப்பிளான் சகோதரர்கள் காயம். updated 30-06-2015

 


யாழ்.இலுப்பையடிச் சந்தியில் இன்று 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள்-வடி விபத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த சகோதரனும் சகோதரியும் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் தனது சகோதரியை சகோதரன் பாடசாலைக்கு குப்பிளானிலுள்ள இல்லத்திலிருந்து மோட்டார்ச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது நாவலர் வீதியால் வந்த வடிரக வாகனம் குறித்த சகோதரர்கள் இருவரும் பயணித்த மோட்டார்ச் சைக்கிளை பலாலி வீதி இலுப்பையடிச் சந்தியில் மோதித் தள்ளியது. சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த குப்பிளான் கேணியடியைச் சேர்ந்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர் படுகாயமடைந்ததுடன் அவரது சகோதரியான வேம்படி மகளிர் கல்லூரியில் தரம்-9 இல் கல்வி கற்கும் மாணவி காயமடைந்துள்ளார்.


குறித்த விபத்துச் சம்பவத்துக்கு வடிரக வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதியின் கவனயீனமே காரணமெனத் தெரிய வருகிறது.

(-ரவி-)யாழ்.குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக இளைஞர்களும் விக்கினேஸ்வரா இளைஞர் கழகமும் இணைந்து முன்னெடுத்த பார்த்தீனியம் ஒழிப்புச் செயற்பாடு. updated 16-02-2015

 யாழ்.குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக இளைஞர்களும்,விக்கினேஸ்வரா இளைஞர் கழகமும் இணைந்து முன்னெடுத்த பார்த்தீனிய ஒழிப்புச் செயற்பாடு கடந்த வாரம் இருநாள் வேலைத்திட்டமாக நடைபெற்றது.


குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகமும்,அதனையண்டிய பகுதிகளிலும் விளையாட்டுக்கழகத் தலைவர் வை.தமிழ்ச்செல்வன் தலைமையில் இந்தப் பார்த்தீனியம் ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பார்த்தீனியம் ஒழிப்புச் செயற்பாட்டில் 25 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் படங்கள்;:-செ.ரவிசாந்.

 


 


குப்பிளான் கிணறுகளிலும் பரவும் கழிவோயில்! உறுதிப்படுத்திய பொதுச் சுகாதாரப் பரிசோதகர். updated 19-01-2015

 

யாழ். சுன்னாகம் மின்சார நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு ஒயில்கள் நிலத்தடி நீருடன் கலப்பதால் வலி.வடக்கு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது குப்பிளான் பகுதிகளிலுள்ள சில வீடுகளின் கிணறுகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

நொதேன் பவர் நிறுவனத்தால் உரிய முகாமைத்துவமின்றி வெளியேற்றப்படுகின்ற கழிவு ஒயில் நிலத்தடி நீருடன் கலப்பதால் சுன்னாகம் மின்நிலையத்திற்கு அண்மையிலுள்ள விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன.

அத்துடன் சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, கட்டுவன், மயிலங்காடு, ஏழாலை போன்ற பிரதேசங்களிலுள்ள நிலத்தடி நீர்களும் மாசடைந்துள்ளன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குப்பிளான் பிரதேசத்திலுள்ள சில வீடுகளின் கிணறுகளிலும் கழிவு ஒயில் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த கழிவு ஒயில் கலந்திருப்பது தொடர்பில் பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து அவர் நிலமைகளைப் பார்வையிட்ட பின் குறித்த நீரைப் பாவிக்க வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த கழிவு ஒயில் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்படாவிட்டால் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளின் நிலத்தடி நீர்களிலும் கழிவு ஒயில் வேகமாகப் பரவக் கூடும் எனச் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

கழிவு எண்ணெய் கலந்த நீரைப் பயன்படுத்துவதால் மலட்டுத்தன்மை, புற்றுநோய், பிறப்பில் குறைபாடு போன்ற உயிராபத்தை உண்டாக்கும் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாக வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடும் விசனம் தெரிவித்துள்ள பொதுமக்கள் தமக்கு மின்சாரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எங்கட பச்சைத் தண்ணி குடித்துக் கொண்டே நாங்கள் உயிர் வாழ்வோம். எங்கட அடிப்படைத் தேவைகளில் ஒன்றான நீர்த் தேவை பாதிப்படைவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

திட்டமிடப்பட்ட இன அழிப்பில் ஒன்றாக முன்னைய அரசாங்கத்தால் எமது மண்ணில் அரங்கேற்றப்பட்ட கழிவு ஒயில் விவகாரத்தில் தற்போது சிறுபான்மைத் தமிழர்களின் ஏகோபித்த தெரிவாகப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் மைத்திரி அரசாங்கம் என்ன செய்யப் போகிறது? இந்த விடயத்தில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று சொல்வதற்கில்லை.

ஏனெனில் பொறுமை காக்கும் ஒவ்வொரு நிமிடங்களிலும் எங்கள் நீர் வளம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் நம்பி இதுவரை காலமும் நாம் ஏமாந்தது போதும். ஏன்? சட்டமும் கூட உரிய நேரத்தில் தனது கடமையைச் சரி வரச் செய்யவில்லையோ? என எண்ணத் தோன்றுகிறது.

தமிழர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டுமென்று தந்தை செல்வநாயகம் அன்று சொன்னார். ஆண்டவா! எங்கள் சொத்தான நீர் வளம் காத்திட உன்னிடம் விநயமாக வேண்டுகிறோம். உன்னை மட்டுமே நம்புகிறோம். பிறிதொருவரையும் நம்புகிறோம். கழிவு ஒயில் பிரச்சினைக்கு யார் தீர்வு காண முன்வருகிறார்களோ அவர்களெல்லாம் தமிழர் அகராதியில் கடவுள்களாகப் போற்றப்பட வேண்டும்.

இதேவேளை, இன்று திடீரென விழித்துக் கொண்ட வடமாகாண சபை நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கென 9 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.

கட்டுரையாக்கம் மற்றும் படங்கள்: செ.ரவிசாந்-
 

முன்னைய செய்திகள்

January - december 2014 மாத செய்தி தொகுப்பு

July -dec 2013 மாத செய்தி தொகுப்பு

July -Auguest 2013 மாத செய்தி தொகுப்பு

January - June 2013 மாத செய்தி தொகுப்பு

July - December 2012 மாத செய்தி தொகுப்பு

January - June 2012 மாத செய்தி தொகுப்பு

October, Novermber, December 2011 மாத செய்தி தொகுப்பு

July, August, September 2011 மாத செய்தி தொகுப்பு

May, June 2011 மாத செய்தி தொகுப்பு

march, april 2011 மாத செய்தி தொகுப்பு

February 2011 மாத செய்திகளின் தொகுப்பு

January 2011 மாத செய்திகளின் தொகுப்பு

December 2010 மாத செய்திகளின் தொகுப்பு

நவம்பர் 2010 மாத செய்தி துளிகள். கனடா உதவிகள், செம்மண் இரவு 2010.

இம்மாத செய்தி துளிகள் கடந்த மூன்று சாதப்தங்களாக பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டிருந்த நமது கிராமம் இப்போது விடுதலை அடைந்துள்ளது.updated 31-10-2010

இன்றைய முக்கிய செய்தி பலரும் ஆவலாக காத்திருந்த குப்பிழான் கிராமத்தின் வளர்ச்சிக்கு இரண்டு அமைப்புக்கள் உருவாக்கம் updated 10-10-2010

இம்மாத செய்தி துளிகள் எமது பாடசாலையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் புலமை பரிசில்களை பெற்றுள்ளனர், எமது கிராமத்துக்கு ஒரு புதிய வீதி என பல செய்திகளோடு உங்கள் முன் விரிகிறது.updated 03-10-2010

இம்மாத செய்தி துளிகள் எமது கிராம வீரர்களை கவுரவித்த நிகழ்வு மற்றும் உயர் பாதுகாப்பு வலய குடியமர்த்தல்களுடன் உங்கள் முன் விரிகிறது.updated 19-09-2010

விக்கினேஸ்வரா மன்றம் லண்டன் நடாத்திய விளையாட்டு விழா 2010 தொகுப்பு. updated 25/07/2010

இம்மாத செய்தி துளிகள் சொக்கர்வளவு சோதி விநாயகன் தேர்த்திருவிழா படங்கள் மற்றும் லண்டன் செய்திகள்.updated 15/07/2010

யாழ். புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் குப்பிளான் விக்னேஸ்வரா அணி சம்பியன் updated 17/06/2010

செய்தி துளிகள் சொக்கர்வளவு , கற்கரை பிள்ளையார் கோவில் வருடாந்த உற்சவ விபரம் மற்றும் பல. updated 09/06/2010

எமது கிராமத்தின் இம்மாத செய்தி துளிகள். updated 23/05/2010