கிராம பற்றாளன், சமூக ஆர்வலர், செம்மண் சுடர் அமரர் பொன்னம்பலம் நடனசிகாமணி அவர்களின் சமூக வாழ்வு பற்றிய கண்ணோட்டம்.


எங்கள் மணி எம் மண்ணுக்காக ஒலித்து ஓய்ந்தது. இது அவருக்காக செலுத்தப்பட்ட அஞ்சலி. இந்த அஞ்சலி ஒன்றே போதும் அவர் எமது கிராமத்துக்காக செய்த சேவை பற்றிய மதிப்பீட்டுக்கு. ஆனாலும் அடுத்த தலைமுறையினருக்கு அவர் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளினால் ஏற்பட்ட இடப்பெயர்வு. அதாவது 1990 ஆம் ஆண்டு 2ம் ஈழப்போர் ஆரம்பமான போது எமது கிராம மக்கள் பெரும் இடப்பெயர்வை சந்தித்தார்கள். பெரும்பாலனவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தஞ்சம் அடைந்தார்கள். அந்தவகையில் அமரர் நடனசிகாமணி அவர்களும் எமது கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்து கொழும்பில் நீண்ட காலம் வாழ்வதற்கு தள்ளப்பட்டார். அவர் வாழ்ந்த வீடு முற்றாக தரைமாக்கப்பட்டதாலும் இறுதி காலங்களில் அவர் கடும் நோய்வாய்பட்டு இருந்தமையாலும் ஊர் திரும்ப முடியவில்லை. அவரின் இறுதி யாத்திரையும் கொழும்பில் தான் இடம்பெற்றது.


1938 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 08ம் திகதி பொன்னம்பலம் தில்லைமுத்து தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். ஆரம்ப கல்வியை குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்திலும் மேற்படிப்பை யாழ் கந்தரோயா மகாவித்தியாலயத்திலும் பயின்றார். அவரின் எழுத்து திறமை வீரகேசரி நாளேட்டின் சுன்னாகம் பகுதியின் நிருபராக இருக்க கூடிய வாய்ப்பு கிட்டியது. அதை விட அவர் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். தமிழரசு கட்சியின் மேடை பேச்சாளராக இருந்து அரசியல் ரீதியான செல்வாக்கு பெற்றார். பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் குப்பிழான் கிளை தலைவராக நீண்ட காலம் செயலாற்றினார், கிராம முன்னேற்ற சங்கம், இணக்க சபை , வாசிக சாலை என்று எமது கிராமத்தில் இருக்கின்ற அத்தனை அமைப்பிலும் அவரின் பங்களிப்பு இருந்தது.


நீண்ட கால அவரின் மானிட வாழ்வில் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் செய்த சேவை அளப்பரியது. அவர் செய்த சேவைகளை வெறும் எழுத்துக்களால் எழுதி விட முடியாது. அவராகவே விரும்பி செய்த மக்கள் சேவை அந்த சேவையில் பணத்தை சேர்க்கவோ சொத்துக்களை வாங்கவோ அவர் முயற்சிக்கவில்லை. சிறியவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை அவரின் நண்பர்களாகவே இருந்தனர்.


80 களுக்கு முற்பட்ட காலகட்டத்தில் எமது ஊர் இளைஞர்கள் பொலிசிடம் அகப்படும் போதெல்லாம் அவருக்கே உரிய செல்வாக்கு சாதுரியம் பேச்சுவன்மை போன்றவற்றை பயன்படுத்தி எமது இளைஞர்களை பொலிஸ் நிலையங்களில் இருந்து மீட்டு வந்தார். இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த சமயம் எமது ஊர் இளைஞர்கள் சிலர் இந்திய இராணுவத்தினரிடம் அகப்பட்டு பல வித சித்திரைவதைகளை அனுபவித்தார்கள் அவர்கள் இனி உயிருடன் திரும்ப வரமாட்டார்கள் என்று எண்ணிய பொழுது நடனசிகாமணி அவர்கள் தானாகவே முயற்ச்சி எடுத்து அவர்களை மீட்டு வந்தது அவரின் மனிதாபிமான செயல்பாட்டையும் ஊர் பற்றையும் வெளிக்காட்டியது.


பொது விடயங்களில் பல விதமான பிரச்சனைகளையும், விமர்சனங்களையும் எதிர் நோக்க வேண்டிவரும் அவர் அவற்றை எல்லாம் கண்டு எப்போதும் அஞ்சியதில்லை. தனக்கு எது சரியோ அதை செய்தார். பல நோக்கு கூட்டுறவு சங்க தேர்தலில் தன்னை கடுமையாக விமர்சித்தவர்களையும், எதிர்த்து போட்டியிட்டவர்களையும் அவர் என்றுமே பழி வாங்க நினைத்ததில்லை. அவர்களுக்கு ஆபத்து என்று வரும் போது தானே முன் சென்று அவர்களை காப்பாற்றியும் இருக்கின்றார். அப்படியான அதிசய குணம் படைத்த அற்புத மனிதர் அவர்.


கற்கரை கற்பக விநாயகரின் மீது ஆழ்ந்த பக்தியும் அன்பும் கொண்ட அவர் எப்போதும் அவர் பாதம் பணிந்து தான் தன் கடமை ஆற்றுவார். அவரை சந்திக்க வேண்டும் என்றால் கற்கரை பிள்ளையார் ஆலய சூழலில் அவரை சந்திக்கலாம். பல்துறை சார்ந்த செயல் வீரனான திரு நடனசிகாமணி அவர்கள் சிறந்த விளையாட்டு வீரராகவும் விளங்கினார். வயதான பிறகும் எமது ஊரின் விளையாட்டுத்துறை வளர்வதற்கு பெரும்பங்காற்றினார். ஆண்டு தோறும் கேணியடி மைதானத்தில் மெய்வல்லுனர் போட்டி சிறப்பாக நடக்கும். இளைஞர்களால் நடாத்தப்பட்டாலும் நடனசிகாமணியின் பெரும்பங்களிப்பு அதில் இருந்தது. இளைஞர்களை உற்சாகபடுத்தி அவர்கள் பொது வேலைகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பார்.


எமது கிராமத்துக்கு என்று ஒரு விளையாட்டு மைதானம் இருந்ததில்லை. பரிச்சயபுலம், பங்கிலிட்டி, கேணியடி, குப்பிழான் மத்தி, கற்கரை என்று தனியார் காணிகளே எமது மைதானமாக இருந்தது. இறுதியாக கற்கரை வடக்குப் புறம் எமது விளையாட்டு மைதானமாக இருந்தது. கற்கரை விநாயகர் ஆலய நிர்வாக சபை கலியாண மண்டபம் கட்டுவதற்கு முடிவெடுத்த பொழுது இறுதியாக இருந்த மைதானத்தையும் விட்டு இனி விளையாடுவதற்கு இடம் இல்லை என்ற நிலை ஏற்பட்டபொழுது. கற்கரை ஆலய தெற்கு புற காணியை விளையாட்டு மைதானமாக மாற்ற எமது இளைஞர்கள் முடிவெடுத்தார்கள். பெரும்பாலான காணிகள் தனியாருக்கு சொந்தமானது. அவைகளை வாங்குவதற்கு பணம் இருக்கவும் இல்லை இருந்தாலும் காணி உரிமையாளர்கள் விற்பதற்கு தயாராகவும் இருக்கவில்லை. ஆனால் எமக்கு ஒரு மைதானம் வேண்டும் இதை விட்டால் வேறு மைதானமும் இல்லை என்ற நிலை வந்த போது இளைஞர்கள் ஆபத்தான முடிவை மேற்கொண்டார்கள். அவர்கள் எடுத்த முடிவு மிகவும் ஆபத்தானது. எதோ இடத்தில் தவறு நடந்தாலும் எல்லோரும் கம்பி எண்ண வேண்டி வந்திருக்கும். ஆனாலும் இளைஞர்களின் நண்பனான நடனசிகாமணியின் சாதுரியத்தாலும், அவருக்கிருந்த நற்பெயர் , செல்வாக்கு, துணிவு போன்ற காரணிகளால் வெற்றிகரமாக ஒரு மைதானம் அமைய கைகொடுத்திருந்தார்.


எமது கிராமம் தனிக் கிராமாக உருவாக்க எமது ஊர் பெரியவர்களின் வழிகாட்டுதலுடன் மக்கள்; பல்வேறு அறப்போராட்டங்களை மேற்கொண்டனர். அப்போது இளைஞனாக இருந்த நடனசிகாமணி அவர்கள் மக்களை அணி திரட்டுவதிலும், நிதி ஆதாரங்களை சேகரிப்பதிலும் பெரியோர்களுக்கு உறுதுணையாக இருந்து எமது கிராமம் தனிக் கிராமமாக உருவாக்குவதில் தனது வரலாற்றுக் கடமைமையை செம்மனே செய்து முடித்தார்.


அவரின் சேவையை பாராட்டி குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா அமைப்பு செம்மண் சுடர் என்ற உயரிய விருதை குப்பிழான் பொன் விழா நிகழ்வின் போது வளங்கி கௌரவித்தது குறிப்பிடதக்கது.

கட்டுரையாக்கம்
ந.மோகனதாஸ்


பிற்குறிப்பு
அவரை பற்றி வேறு விபரங்கள் நிழல்படங்கள் இருந்தால் எமக்கு அறியத்தரவும். மேலதிக தகவல்களை இதில் சேர்க்க தயாரகவுள்ளோம்.

kuppilan@hotmail.com