எமது மண்ணின் மூத்த குடிமகன் கந்தையா கிருஸ்ணனின் வாழ்க்கை வரலாறு.


ஈழ திருநாட்டின் வடபுலத்தில் அமைந்திருக்கும் தனிச் சைவ கிராமம் குப்பிழான். விவசாய பூமியான குப்பிழானில் சின்னத்தம்பி என்பவர் புத்திரன் கந்தையா அவர்கள் தெய்வானை என்பவரை காதல் வயப்பட்டு தனது மனைவியாக்கி இல்லறத்தில் இணைந்தார். இந்த இளம் தம்பதிகள் குப்பிழான் வடக்கு குருந்தடி மூலையில் மண்சுவரினாலும் பனை ஓலையினாலும் வேயப்பட்ட சிறிய மனையில் இல்லறத்தை நல்லறமாக நடாத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களின் இல்லறத்தின் நற்பயனாக தெய்வானை ஒரு கருவை தனது வயிற்றிலே சுமந்தார். முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலமாகிய 1917 ஆண்டு மாரி மழை பொழியும் ஜப்பசி மாதம் 17ம் நன்னாளில் தெய்வானைக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. நல்ல மருத்துவ வசதிகள் இல்லாத அந்த காலத்தில் கற்கரை கற்பக விநாயகரின் நல்லருளினால் ஆரோக்கியமாக குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பெற்றோர்களால் இடப்பட்ட நாமம் தான் கிட்டிணர். அதன் பின்னர் அவர்களுக்கு 4 ஆண் பிள்ளைகளும், 4 பெண் பிள்ளைகளும் பிறந்தார்கள். ஒரு ஆண் பிள்ளை 6 மாதத்துக்குள்ளேயே இறந்துவிட்டது.


அன்றைய காலகட்டத்தில் கல்வி கற்றவர்கள் என்று குறிப்பிட்ட பேரை தான் சொல்லலாம். கந்தையா தெய்வானை தம்பதிகள் கல்வியறிவற்றவர்களாகவும், கையெழுத்துக் கூட போடத் தெரியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் அவர்களின் தொழில் விவசாயமாக இருந்தது. 8 பிள்ளைகளுடன் விவசாயத்தை நம்பித்தான் வாழ்க்கையை நடாத்தினார்கள்.


சிரேஷ்ட புத்திரனான கிட்டிணன் முன்பள்ளியையும், முதலாம் வகுப்பையும் குரும்பசிட்டியில் உள்ள மகாதேவா (பரமாந்திப் பள்ளிக்கூடம்) வித்தியாசாலையில் பயின்றார். குப்பிழான் வித்தியாசாலை திறந்ததும் இரண்டாம் மூன்றாம் வகுப்பை இப்பள்ளியிலேயே கற்றார். தமிழில் மூன்றாம் வகுப்பு வரை முடித்தவுடன் ஆங்கிலம் கற்பதற்காக புன்னாலைக்கட்டுவன் கிறிஸ்தவ கல்லூரியில் இணைந்தார். தாய், தந்தையர் கல்வித்தகமை குறைந்தவராகையால் அவரின் கல்வியும் கேள்விக் குறியாக மாறியது. ஒவ்வொரு வகுப்பை தாண்டுவதற்கு 2 வருடங்கள் ஆகியது 4ம் வகுப்பு முடிந்ததும் மல்லாகம் ஆங்கில பாடசாலையில் சேர்க்கப்பட்டார்.


13 வயதாகியதும் தந்தையுடன் தோட்ட வேலைகளுக்கு செல்ல தொடங்கினார். அதனால் அவரின் பள்ளிப்படிப்பு இன்னும் மோசமாகியது அவர்களின் தோட்டம் கம்பித் தோட்டத்திற்கும் சுடலைக்கும் இடையில் அமைந்திருந்தது. கற்களும், முட்களும் நிறைந்த பாதையால் 2 மைல்களுக்கு நடக்க வேண்டும். ஆதிகாலை நான்கரை மணிக்கு நித்திரை விட்டு எழும்ப வேண்டும். காலை ஜந்தரை மணி தொடக்கம் காலை எட்டு மணி வரை துலா மிதித்தல், பட்டை கட்டி தண்ணீர் இறைத்தல், பாத்தி கட்டும் வேலைகளை செய்ய வேண்டும். காலை எட்டு மணிக்கு ஓடும் வாய்க்கால் தண்ணீரில் காகம் போல் குளித்து விட்டு கருக்கு கட்டையால் தலையை சீவி விட்டு தாயார் கொண்டு வந்த பழைய சாதத்தை சாப்பிட்டு விட்டு நிழலை பார்த்த வண்ணம் பள்ளிக்கு ஓட வேண்டும். இதற்கிடையில் கட்டிய துண்டு வேட்டி ஊத்தையானால் போகும் வழியில் சலவை தொழில் செய்யும் நாமுத்தனிடம் கொடுத்து விட்டு துண்டை அரை ஈரத்துடன் கட்டிக் கொண்டு ஓட வேண்டும். பள்ளிக்கு 2 நிமிடம் தாமதமானால் தலைமை ஆசிரியர் 3 பிரம்படி கொடுப்பார். மாலை 4 மணிக்கு பாடசாலை முடிந்ததும் நேராக தோட்டத்திற்கு செல்வார். வேலை முடிந்து வீடு போய் சேர இரவு 8 மணியாகிவிடும்.


அதன் பின்னர் இரவுச் சாப்பாட்டை சாப்பிடவேண்டும். இரவுச் சாப்பாடாக சோறு, குரக்கன் போன்றவைகளாக இருக்கும். அன்றைய காலத்தில் மின்வசதி யாரிடமும் இருக்கவில்லை. அதனால் மண்ணெண்ணை விளக்குகளையே பாவித்தனர். அதே போல் கிட்டிணரும் ஓலைப் பெட்டியில் மண்ணெண்ணை குப்பி விளக்கில் படிப்பார். வேலைக் களைப்பினாலும் நித்திரைக் குறைவினாலும் 15 நிமிடத்தில் நித்திரை தலையை சுற்றும். படுக்கையோ, பாயோ, தலைகணியோ இல்லை இதற்கு மாற்றாக உருட்டிய சாக்கு பை தான்.

அதோடு மற்ற வேலைகளும் செய்ய வேண்டும். அவையாவன மாடு, ஆடு மேய்த்தல், புகைக் கொட்டிலில் புகையிலை தூக்கி புகை போடல், குப்பை,சாணகம் தலையில் சுமந்து தோட்டம் கொண்டு போதல், மண் வெட்டியால் தோட்ட நிலம் வெட்டுதல், புல்லு வெட்டுதல், இதனால் அவர் கல்வியில் பின் தள்ளப்பட்டார். மாத வகுப்பு சோதனைகளில் கடைசி 3 மாணவர்களில் அவரும் ஒருவர். இதனால் பள்ளி மேடையில் ஏற்றப்பட்டு முதல் மூன்று மாணவர்களிடம் குட்டு வாங்குவார். ஏழாம் வகுப்பை மீண்டும் புன்னாலைக்கட்டுவன் கிறிஸ்தவ கல்லூரியில் கற்றார். ஒரே தடவையில் ஏழாம் வகுப்பில் சித்தியடைந்துவிட்டார்.


அப்பொது அவருக்கு 19 வயது ஆகிவிட்டது. வறுமை நிலை காரணமாக அதோடு படிப்பை நிறுத்திவிட்டார். தாயின் தாயார், தாயின் தங்கை உட்பட குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 12. தோட்ட வருமானம் போதவில்லை. தந்தையாரின் புகையிலை வியாபாரமும் நஸ்டம் ஏற்பட்டு மிஞ்சியது கடன் தான். வீடு நிலம் எல்லாம் ஈட்டில் வைக்கப்பட்டது. கடன் நெருக்கடியாலும், நேர சாப்பாடு இன்மையாலும் தந்தையார் நோய்வாய்ப்பட்டார். இதனால் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க தொடங்கினார் கிட்டிணன். தகப்பனாருக்கு ஏதேனும் நடந்தால் தான் தான் குடும்ப சுமையை சுமக்க வேண்டும் என்று உணர்ந்தார். அதனால் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தார். அது தான் சிங்கப்பூர் செல்வதென்ற முடிவு. ஆனால் தந்தையிடம் சொல்ல பயம் அதனால் தாயாரிடம் சொல்லி விட்டார் தனது முடிவை. தனக்கு கப்பலால் செல்வதற்கு ரிக்கற் ஏற்பாடு செய்யும்படி வேண்டினார். மறுத்தால் தான் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்றும் இனி தன்னை பார்க்க முடியாதென்றும் உறுதியாக கூறிவிட்டார். இதைக் கேட்ட தாயார் கண்ணீர் சிந்தி அழுதுவிட்டார். மறு நாள் கேள்விப்பட்ட தந்தையார் சத்தம் போட்டு அழுது விட்டார். அன்றைய கால வெளிநாட்டு பயணம் என்பது மிகவும் அபாயகரமானது. வீட்டின் முதல் வாரிசு குடும்ப சுமையை சுமப்பவர் வீட்டை விட்டு செல்வது என்பது அவர்களின் மனநிலையில் மிகவும் துயரமானது தான். எந்த தாய் தந்தையருக்கும் இருக்கும் நியாயமான கவலை தான்.2 கிழமையில் சிங்கப்பூர் சேரும் கப்பல் ரிக்கற் கிடைத்துவிட்டது. அதன் விலை 40 ரூபா. 20-12-1938 கப்பல் ஏறி 29-12-1938 அன்று சிங்கப்பூர் சென்றடைந்தார். அவர் தகுந்த அனுமதி பத்திரம் இன்றியே சிங்கப்பூர் வந்தார் அதனால் குடிவரவு அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் விசாரணைகள் முடிந்து ஏற்கனவே சிங்கப்பூரில் வசித்து வந்த அவரின் உறவினரான க.ஜயாத்துரை அவர்கள் அவரை தன்னுடன் அழைத்துச் சென்றார். அவரது மைத்துணர் கேட்டார் படிக்க விரும்புகிறாயா அல்லது வேலை செய்ய விரும்புகிறாயா என்று அதற்கு அவர் வசதி கிடைத்தால் படிக்க விரும்புகிறேன் என்றார். அங்கு 8ம் வகுப்பில் சேர்ந்தார் ஆசிரியர்கள் சீனர் மற்றும் இந்தியர்கள். அவர்கள் பாரபட்சமின்றி எல்லா மாணவர்களுடனும் அன்புடன் பழகுவார்கள், விளக்கமாய் பாடம் கற்பிப்பார்கள். பின்தங்கிய மாணவர்களுக்கு கூடிய சிரத்தை காட்டுவார்கள். சாப்பாட்டுக்கு குறைவில்லை, படிப்பதற்கு போதிய நேரம் கிடைத்தது, விளையாட்டு கலைகள் பழகுவதற்கு எல்லா வசதியும் கிடைத்தது. அவர்கள் படிப்பில் போதிய கவனம் செலுத்தியமையால் சீனியர், யூனியர் கேம்பிறிட்ஜ் சோதனைகளில் 1939, 1940 இல் சித்தியடைந்தார். அதன் பின்னர் அவருக்கு வேலையும் கிடைத்தது. முதல் சம்பளம் இலங்கை மதிப்பில் 100 ரூபா. உடனேயே அந்த தொகையை தந்தைக்கு அனுப்பினார்.


1942 ஆம் ஆண்டு யப்பான் சிங்கப்பூர் நாட்டை பிடித்துவிட்டது. 1945 வரை இலங்கையுடன் இருந்த சகல தொடர்புகளும் அறுக்கப்பட்டு விட்டது. யப்பான் காலத்தில் யப்பானிய பாசை கற்று மொழி பெயர்ப்பாளாராக கடமை புரிந்தார். 1945 ஆண்டு யப்பான் சரணாகதியாகி மீண்டும் வெளிநாடுகளுடன் தொடர்பு கிடைத்தது. தொடர்பு கிடைத்ததும் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்தக் கொண்டு இருந்தது. அது தான் அவரின் குடும்பத்தின் கடிதம். நீண்ட காலத்திற்கு பிறகு குடும்பத்தின் கடிதம் கிடைத்து ஆனந்தமாக திறந்து பார்த்த போது தகப்பனார் சிவகதி அடைந்து விட்டார் என்ற செய்தி அவரின் தலையில் இடியாய் விழுந்தது.


குடும்ப பொறுப்பு அவரின் தலையில் விழுந்தது. 3 சகோதரிகள் திருமணம் செய்யும் வயது, தலைக்கு மேல் கடன், சாப்பாட்டுக்கு வழியில்லை, உதவற்ற இரண்டு தம்பிமார்கள், கடைசி தம்பி சின்னராசாவுக்கு 4வயது. காட்டுத்தோட்டம் ஏலத்தில் விற்கப்பட்டது. வீடு, நிலம், ஏலத்திற்கு சென்றது. நல்ல வேளையாக மைத்துணர் ஜயாத்துரை கடனை அழித்து விட்டு தனது பெயரில் வைத்துக்கொண்டார். அதன் பின்னர் அவர் தனக்கு வட்டி ஒன்றும் வேண்டாம் பணத்தை மட்டும் தந்தால் காணியை ஒப்படைப்பதாக கடிதம் எழுதினார். அதன் பின்னர் தந்தி மூலம் பணம் அனுப்பபட்டு தாயாரின் பெயரில் சொத்துக்கள் மாற்றப்பட்டது. அதன் பின்னர் தகுந்த சீதனங்கள் கொடுத்து இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டு அவரும் தனது 31வது வயதில் திருமணம் செய்து கொண்டார். இவரின் 4 பிள்ளைகளில் ஒருவர் சடுதியாக தவறிவிட்டார். 15 வருடங்களின் பின்னர் மீண்டும் தாயகம் திரும்பிய கிருஷ்ணர் தனது 3வது சகோதரிக்கும் திருமணம் செய்து வைத்தார். 1960 இல் கடைசி சகோதரி கனகம்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள்.

அஞ்சல் நிலையத்தில் சாதாரண குமஸ்தாவாக பணிபுரிந்த அவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்ற நல்ல நிலைக்கு வந்தார். 30-12-1975 அன்று ஓய்வு பெற்றார்கள். தனது ஓய்வு காலத்தில் அங்குள்ள கோயில்களின் நிர்வாக அங்கத்தவராகவும், கோயில், சாவீடுகளில் பஞ்சபுராணம், பொற்சுண்ணம் பாடுவதில் காலத்தை கழித்துக் கொண்டார். இச்சேவைக்கு இலங்கை தமிழ் சங்கத்தினால் ஒரு பட்டயமும் பெற்றுக்கொண்டார். அவரது கிராம சேவைக்கு குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றத்தினால் இன்னுமொரு பட்டயம் 2013இல் வளங்கப்பட்டது.

கடந்த 8 வருடங்களாக ஓய்வுநிலையில் வீட்டில் இருக்கும் கிருஷ்ணன் அவர்கள் தாம் பிறந்த ஊரின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி வருகின்றார். நீண்ட போரின் ஓய்வின் பின்னர் கிடைத்த மயான அமைதியில் அபிவிருத்தி என்பது தேவைப்படும் இந்த நேரத்தில் உறங்கிக் கொண்டு இருந்தவர்களை தட்டி எழுப்பிய பெருமை கிருஷ்ணரையே சாரும். ஊரின் வளர்ச்சிக்கு நிதி உதவி கேட்டு பழைய பாணியில் உலகின் மூலை முடுக்கெல்லாம் வாழும் எம்மவர்களுக்கு ஊரின் வளர்ச்சிக்கு உதவி புரியுமாறு சளைக்காது பல கடிதங்களை எழுதினார். அவரின் தூண்டுதலால் விக்கினேஸ்வரா மகாவித்தியாலத்தின் பிரதான மண்டபம் புதிய பொலிவுடன் அமைக்கப்பட்டது. அவரும் பிரித்தானியா விக்கினேஸ்வரா மன்றமும், உதவும் கரங்கள் சுவிசும் இணைந்து செயல்பட்டு இந்த பெரிய மண்டபம் மீழ் அமைக்கப்பட்டது. இந்த மண்டபத்திற்கு கிருஸ்ணர் மண்டபம் என்ற பெயரிடப்பட்டது. தற்போது அவருக்கு 97 வயது ஆனால் அவரின் உணர்வுகள் இன்னும் இளமையாக இருக்கின்றது. தான் வாழும் காலத்தில் எமது ஊரின் வளர்ச்சியில் தனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று துடிக்கிறார். அவரின் சேவைகள் தொடரவேண்டும். அவர் வாழும் போதே வாழ்த்த வேண்டும்.

சுபம்