எமது கிராமம் தனிக் கிராமாமவதற்கும் அதன் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றிய எமது கிராம தொண்டன் அமரர் தம்பையா ஜயாத்துரை அவர்களின் வாழ்க்கை வரலாறு.

ஒரு சகாப்தம் முடிந்து விட்டது மரத்திலிருந்து பழுத்த பழம் இயல்பாகவே விழுவதை போல, பூவொன்று தன் காலம் முடிந்து உதிர்வதை போல தன் நீண்ட கால உலக வாழ்வில் நின்றும் விடுபட்டு இறைபதம் அடைந்து விட்டார்.

1904 ஆண்டு யூன் மாதம் 1ம் திகதி இப்பூலகில் பிறந்த எனது தந்தையாரான திரு தம்பையா ஐயாத்துரை 1998 யூலை மாதம் 12ம் திகதி தேய்பிறை திருதியை நாளில் உலக வாழ்வை நீத்தார். இடைப்பட்ட ஏறத்தாள ஒரு நூற்றாண்டு வாழ்வில் எத்தனை எத்தனை அனுபவங்களை சந்தித்து இருப்பார். எத்தனை எத்தனை மகிழ்ச்சிகளில் பூரித்திருப்பார்.

ஒரு சாதாரண வறிய குடும்பத்தின் புத்திரரே இவர். இவரின் முன்னோர்கள் வணிகர்களாக இருந்த போதும் இவரின் தந்தையார் விவசாயியாகவே இருந்தார். அன்றாட வாழ்வையே கொண்டு நடாத்த திண்டாடும் குடும்ப நிலை. இந்த நிலையிலும் மல்லாகம் இந்துக் கல்லூரியில் எட்டாம் வகுப்போ, ஒன்பதாம் வகுப்போ படிச்சார். ஆங்கிலத்தையும் ஓரளவு அறிந்தார்.

இன்றைய இளைஞர்கள் மேற்கு நாடுகளுக்கு போவது போல அன்றைய இளைஞர்கள் சிங்கப்பூர் மலேசியா முதலிய கிழக்கு நாடுகளுக்கு படையெடுத்த காலமது. இளைஞனான எனது தந்தையும் தனது இருபத்திரண்டாம் வயதில் மலேயா சென்றார். அங்கே தொடக்க நாட்களில் பல்வேறு கஸ்டங்களை அனுபவித்தார். பின்னர் ஜந்து வருடங்கள் மலேயா புகையிரத பகுதியில் கடமையாற்றினார். பின்னர் 1932 ஆம் ஆண்டளவில் சிங்கப்பூர் துறைமுக பகுதியில் தன் சொந்த வியாபார நிறுவனத்தை கட்டியெழுப்பினார்.

2ம் உலக மகா யுத்த கால பகுதியை தாய்நாடான இலங்கையிலேயே கழிக்க வேண்டிய நிலைக்கு உள்ளானார். 1939ல் சொந்த குடும்ப அலுவல்கள் காரணமாக இலங்கை வந்தவர் யுத்தத்தின் காரணமாக சிங்கப்பூர் திரும்ப முடியவில்லை. இங்கும் வியாபார முயற்சிகளில் ஈடுபட்டார். இந்தியாவிலிருந்து புடவைகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தார். இக்காலத்திலேயே இவருக்கு திருமணம் நடந்தது. சீனித்தம்பி இரத்தினம்மாவை கரம்பிடித்தார். ஒரு புத்திரனை பெற்றெடுத்தார். யுத்தம் முடிந்து சமாதான சூழ்நிலையில் தனியாக சிங்கப்பூர் புறப்பட்டார். மீண்டும் தனது வியாபார நிறுவனத்தை கட்டியெழுப்பினார்.

வியாபாரம் தழைத்தோங்கியது தனது குடும்பத்தினரை அங்கு வருவிக்க முயற்சி செய்தார். அம்முயற்சி கைகூடாத ஒரு விரக்தி நிலையில் தனது வியாபார நிறுவனத்தை விற்று விட்டு 1948 ஆம் ஆண்டு இலங்கை திரும்பினார்.

இங்கு பல வியாபார முயற்சிகளில் ஈடுபட்டார். குறிப்பாக ஆரம்பத்தில் நெல் வியாபாரமும் பின்னர் புகையிலை வியாபாரத்தையும் மேற்கொண்டார். அத்துடன் விவசாயத்திலும் ஈடுபட்டார். மலையாள புகையிலை வியாபாரத்தில் பலத்த நட்டத்தை எதிர் கொண்டார். சாவச்சேரி, யாழ்ப்பாணம், சுண்ணாகம் ஆகிய இடங்களில் வியாபார நிறுவனங்களை நிறுவி முன்னேற முயன்றார். எனினும் அவர் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை. சகட சகட யோக சாதக பலன்களை கொண்ட இவரின் வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தன. வாழ்வின் இடைக்காலத்தில் மிகுந்த கஸ்ட நிலையிலேயே இருந்தார்.

இவரது குடும்ப வாழ்க்கையில் நான்கு புத்திரர்களுக்கும் நான்கு புத்திரிகளுக்கும் தந்தையானார். இவர்களில் ஒரு புத்திரி சிறுவயதிலேயே தவறிவிட மற்றவர்கள் சீவிய வந்தர்களாகவே இருக்கின்றனர்.

இவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்வுக்கு அப்பால் இவருடைய பொது வாழ்வு அஸாதியானது மகத்தானது பொது வாழ்வில் நேர்மையுடனும் பரோபகார சிந்தனையுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் உழைக்கும் அந்த 'பொறி' இவர் வாழ்வில் எப்போது ஏற்பட்டதென்று தெரியவில்லை. மலேயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் எத்தனையோ ஏழைகளுக்கு உதவினார். எத்தனையோ பொதுக் காரியங்களில் ஈடுபட்டார். ஒரு பாடசாலையின் முகாமையாளராக இருந்து எத்தனையோ சிறுவர்களின் அறிவுக் கண்ணை திறந்தார்.

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். சிங்கப்பூரில் இருந்த காலத்தில் தனது உற்றார் உறவினர்களையும் மற்றோரையும் ஊரிலிருந்து அங்கு வரவழைத்து அவர்கள் வாழ்வில் நல்நிலை பெற உதவினார்.

சிங்கப்பூர் காலத்தில் எழுத்தாளனாக இருந்திருக்கிறார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஈழகேசரிப் பத்திரிகையில் 'சிங்கப்பூர் ஜயாத்துரை' என்ற பெயரில் 'மலாய் நாட்டு நாடக மேடைகள்' 'மதுபானம் மதி மோசம்' என்ற கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

1948க்குப் பிறகு தனது சொந்தக் கிராமத்தில் நிலையாக வாழத்தொடங்கிய பின்னர் கிராம முன்னேற்றத்தில் மிகவும் அக்கறை காட்டினார். குப்பிழான் ஒரு தனிக் கிராமம் என்ற சிந்தனை முதன் முதலில் அவர் மனதில் தான் எற்பட்டதென்றால் அது மிகையான தல்ல. முன்னர் ஏழாலை வடக்கு, புன்னாலைக்கட்டுவன் வடக்கு என்ற பிரிவுகளில் அடங்கியிருந்த தனித்துவமான பண்புகளைக் கொண்ட ஒரு பகுதியே பின்னர் குப்பிழான் என மலர்ந்தது. இந்த மலர்ச்சிக்காக எத்தனையோ பேர் உழைத்தனர். அவர்களுள் அமரர் ஜயாத்துரை அவர்களும் குறிப்பிடத்தக்கவராவார்.

இப்பொழுது எழுபது ஆண்டுகளை தாண்டியிருக்கும் குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் இவரும் ஒருவர். நீண்ட காலமாக இயங்கிய குப்பிழான் கிராம முன்னேற்ற சங்கத்தின் உந்து சக்தியாக விழங்கியோரில் குறிப்பிடத்தக்கவர். மல்லாகம் கிராம சபை அங்கத்தவராக இருந்தும் எமது கிராமத்திற்கு சேவையாற்றியுள்ளார். கிராம முன்னேற்றச் சங்கத்தின் அங்கமாக விளங்கிய 'கிராமத்து பஞ்சாயம்' ஏராளமான உள்ளுர் வளக்குகளை சுமூகமாக தீர்த்து புகழ்பெற்றது. மல்லாகம் நீதி மன்றத்தின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டது. இதில் எல்லாம் எனது தந்தையார் முக்கிய பங்காளியாக விளங்கினார்.

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய வளர்ச்சியிலும் இவருக்கு பங்குண்டு. விநாயகரின் தீவிர பக்தனான இவர் ஆரம்ப காலங்களில் ஆலய பூசைகளும் மகோற்சவங்களும் ஒழுங்காக நிகழ்வதற்கான ஏற்பாடுகளில் பங்கு கொண்டார். ஆலயத்தின் வெளி வீதியில் ஈசான மூலையிலுள்ள தீர்த்த கிணறு இவராலேயே வெட்டப்பட்டது என்பது பலரும் அறியாத ஒரு விடயமாகும். ஆனால் ஆலயத்தின் முக்கியமான அழகான ஜம்பொன்னாலான எழுந்தருளி விக்கிரகம் இவராலேயே செய்யப்பட்டது என்பது பலரும் அறிந்ததொன்றாகும்.

இவரின் முன் முயற்சியினால் கிராமத்தில் நடந்த செயல்பாடுகள் பலவாகும். இன்றைய நிலையில் இயக்கமின்றி இருக்கும் நெசவு சாலை அழிந்து போய்விட்ட பிரேத வண்டி, கற்பக விநாயகர் ஆலய சகடை என்பன ஆக்கச் செயல்பாடுகளை பறைசாற்றுவனவாகும்.

இவர் தான் சரியென நம்புவனவற்றில் அசையாத பற்றுறுதி கொண்டவர் எந்தச் சக்தியாலும் அவரது உறதியை குலைக்க முடியாது. அந்த பிடிவாதம் தான் அவரின் பலம் என்று நான் சொல்வேன். எந்த சக்திகளுக்கும் வளைந்து கொடுக்காத ஒரு நேர்மையான மனிதனின் பலம் அது தான். தன்னுடைய இறுதிக் காலங்களில் ஊர் எல்லாம் திசை தெரியாத ஓடிய காலங்களில் அசையாத மன உறுதியுடன் தனது இடத்தை விட்டு அகலாத அவரது நெஞ்சுரம் வியக்கதக்கதாகும். இவ்வாறானவையே இவரின் ஆத்மபலமுமாகும்.

தான் இவரோடு இணைந்த காலங்களிலிருந்து இறுதிவரை இவரின் இயக்கங்களில் எல்லாம் சேர்ந்திருந்த இவரின் இணையின் ஆத்ம சக்தியும் மகத்தானதாகும்.

இவை எல்லாம் தனது தந்தை பற்றிய ஒரு மகனின் வார்த்தைகள் என்பதற்கப்பால் மிக, மிகச் சத்தியமான வார்த்தைகள்.

 

குப்பிழான் சண்முகன்