குப்பிழான் என்ற பெயர் எப்படி உருவானது.


யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்குப் பக்கமாகச் சுமார் எட்டு மைல்களுக்கு அப்பால் குடாநாட்டின் பிரதான வீதிகளான பலாலி வீதியில் புன்னாலைக்கட்டுவன் (வடக்கு) சந்தியினையும், காங்கேசன்துறை வீதியில் மல்லாகம் சந்தியினையும் இணைக்கும் வீதியில் (மத்திய ரேகை போன்று கிராமத்தை ஊடறுத்துச் செல்லும் வீதி) கடும் சிவப்பு நிறமான செம்மண் வளம் கொழிக்கும் சிறு கிராமமே குப்பிழான் என்னும் சிற்றூர் ஆகும். மானிப்பாய் தொகுதியில் சுமார் இரண்டு சதுர மைல்களை பரப்பளவாகக் கொண்ட இக்கிராமத்திற்கு குப்பிழான் என்ற பெயர் எப்படி உருவாகியது என்பதற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் உறுதியாக கிடைக்காவிட்டாலும் 1964 ம் ஆண்டு ஏழாலைக்கிராமத்தின் ஒரு பகுதியாக இருந்து பிரிந்து தனிக்கிராமமாக உருவாக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட கிராமோதய மலர் சஞ்சிகையில் குப்பிழாய் என்னும் ஒரு புல் பூண்டு இந்த மண்ணில் அதிகமாகக் காணப்பட்டதன் காரணமாகவே குப்பிழான் என்னும் பெயர் உருவாகியது என குறிப்பிடப்பட்டிருந்தது.

கிராமத்தின் புவியியல் நிலைமையினை ஆய்வு செய்து பார்த்தால் வடக்கே குரும்பசிட்டி தெற்கே மைலங்காடு மேற்கே ஏழாலை கிழக்கே புன்னாலைக்கட்டுவன் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. இப்புவியியல் நிலத்தின் அரைவாசி நிலம் பயிர்ச்செய்கை நிலமாகவே முன்னைய காலங்களில் இருந்து வந்தது. கிராமத்தின் மையமாக உள்ள குப்பிழான் சந்தியிலிருந்து தெற்குப்பக்கமாக உள்ள நிலப்பரப்பில் அதாவது தெற்கு எல்லைக்கிராமமான மைலங்காடுவரை உள்ள புவிப்பரப்பில் எண்பது வீதமானவை பயிர்ச்செய்கை நிலங்களாகும்.

குறிப்பாக மாலை நேரங்களில் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமிகள் என ஒற்றுமையாகத் தங்கள் தங்கள் சொந்த விளைநிலங்களில் இருந்து உற்சாகமாக வேலை செய்வதனைப் பார்த்தால் அதுவே கிராம மக்களின் விடாமுயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

 

 

மக்கள் குடியிருக்கும் கிராமத்தின் ஏனைய பகுதிகளில் கிடுகுவேலிகள் மதில்கள் ஆகியவற்றினால் சுற்றி அடைக்கப்பட்ட இல்ல வளவுகளும் அக்குடியிருப்புகளில் உள்ள தனித்தனி நீர்ச்சுரங்கங்களான கிணறுகள் அக்கிணற்றிலிருந்து கிடைககும் சுவைமிகுந்த குடிதண்ணீர் அவ்வளவினுள் செழிப்பாக வளர்ந்து சோலை போன்று மூடியிருக்கும் பலா மா தென்னை தோடைகள் எலுமிச்சை மரங்கள் இவைகள் யாவும் இயற்கை அமைப்புகள் ஆகும்.

விவசாயத்திற்குத் துணையான துலா மிதிப்பு

விவசாயத்தினைத் தங்கள் பரம்பரை தொழிலாகக்கொண்ட இக்கிராமத்தின் மூதாதையர்கள் முன்னைய காலங்களில் துலா மிதிப்பு மூலம் தங்கள் கைகளினால் நீர்பாய்ச்சியே பயிர் செய்கையினைக் குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் மேற்கொண்டு வந்தார்கள் எனக் கூறுவதுண்டு. எருது மாட்டு வண்டில்களை உபயோகித்து சூத்திர முறையில் நீர் பாய்ச்சும் முறையும் சில இடங்களில் அறுபதாம் ஆண்டுகள் வரை நடைமுறையில் இருந்து வந்தது. அதன்பின்னர் நீர் இறைக்கும மோட்டார் இயந்திரங்களை வைத்து மண்ணெண்ணையின் உதவியுடன் விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்சப்பட்டு வந்தன.

விவசாயம் தவிர சிறு கைத்தொழில் எனும்போது சுருட்டுத்தொழில் முக்கியத்துவம் பெறுகிறது. விவசாய நிலங்களில் சுமார் மூன்று மாதங்களுக்குப் புகையிலை பயிர்ச்செய்கை முக்கியத்துவம் பெறுவதனால் சுருட்டுக்கைத்தொழில் வளர்ச்சி பெறச் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. சில தனியார் சுருட்டுக் கைத்தொழில் கம்பனிகளினூடாக ஒரு பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கின்றது. இத் தனியார் சுருட்டுக் கம்பனிகளில் இருந்து ஏற்றுமதியாகும் புகையிலைச் சுருட்டுகள் தென் இலங்கையில் பிரபலமாக உள்ளது. கிராமத்தின் சில இடங்களில் இது குடிசைத் தொழிலாகவும் இயங்கி வந்தது.

தொடர்ச்சியாகச் சில இடங்களிலுள்ள பனை மரக்காணிகளில் சீவல் தொழிலாளர்கள் ஒரு சிலர் அதனைத் தங்கள் சீவனோபாயத் தொழிலாகச் செய்து கொண்டு வருகின்றனர். பரம்பரை பரம்பரையாக இத்தொழிலைச் செய்துவரும் குறிப்பிட்ட இத்தொழிலாளர்களுக்கு இத்தகைய தொழில் நல்ல வருமானத்தைத்தரும் தொழிலாகவே முன்னர் இருந்து வந்தது . பின்னர் ஈழப்போராட்ட காலங்களிலும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் பல்வேறு தேவைகளுக்காக இப்பனைமரங்கள் அழிக்கப்பட்டு வரும் போது இத்தொழிலாளர்கள் வேறு தொழில்களை நாடவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இந்துக்கள் மட்டுமே உள்ள ஊர்

எழுபதாம் ஆண்டு காலங்களில் கிராமத்தில் நான்கு தனியார் அரிசி ஆலைகள் இயங்கிவந்தன. நெற்களை வேகவைத்து அரிசியாக மாற்றும் இம்மோட்டார் இயந்திர ஆலைகள் மூலம் சிறுவேலை வாய்ப்புகளும் ஏற்பட்டது. பின்னர் கால ஓட்டங்களின் செயற்பாடுகள் காரணமாக இவைகள் எழுபதாம் ஆண்டின் இறுதிக் காலங்களில் தற்காலிகமாகச் செயலிழந்து இருந்தது

ஈழப்போர் தொடங்க முன்பு இருந்த மக்கள் தொகை சிறு ஆயிரங்களாக மட்டும் இருந்த இச்சிற்றூரில் இந்து சமயத்தில் ஊறியவர்களைத் தவிர ஏனைய எந்த மதங்களும் இங்கு இல்லை. 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அயற்கிராமங்களில் ஏனைய மதங்களின் ஊடுருவல்கள் இருந்தபோதிலும் இங்கு அது வெற்றியளிக்கவில்லை.

12 வகையான இந்துக் கோயில்கள்.

ஏராளமான இந்து ஆலயங்னள் இங்கு உள்ளன. அவையாவன

1. கற்கரை கற்பக விநாயகர் ஆலயம்
2. சொக்கர் வளவு சோதி விநாயகர் ஆலயம்
3. கன்னிமார் அம்பாள் ஆலயம்
4. கேணியடி ஞானவைரவர் ஆலயம்
5. காளிகோவில்
6. வீரபத்திர கோவில்
7. பூங்கொடி ஞானவைரவர் கோவில்(குரும்பசிட்டி வீதியில் உள்ளது)
8. முத்தர் வளவு பிள்ளையார் கோவில்
9. தைலங்கடவை ஞானவைரவர் ஆலயம்
10. சமாதி அம்மன் ஆலயம்

18ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் சரவணை சாமியார் என்னும் ஒரு துறவி ஆரம்பித்து பூசித்துப், பின்னர் இங்கு சமாதி அடைந்த காரணத்தினால் சமாதி அம்மன் ஆலயம் எனப்படுவதுண்டு.

11. கந்தர் வளவு ஞானவைரவர் ஆலயம்
12. எறும்புக்கடவை அம்மன் ஆலயம்

தினமும் அதிகாலை நேரத்தில் சூரியன் உதிக்கமுன்பு சேவல் கூவி மக்களைத் துயில் எழுப்பும் நேரத்தில் இவ் ஆலயங்களின் மணியோசை பரவலாக எல்லாத் திசைகளிலிருந்தும் ஒலிக்கும். அந்த நிகழ்வு கற்பனையில் கொண்டு வரும்போதே மெய் சிலிர்க்கும். அநேகமாக திருவெம்பாவைக் காலங்களில் இவ்வகை ஒலிகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

ஆலயங்கள் தவிர பொது நிறுவனங்களில் கிராம அபிவிருத்திச்சங்கம் என்னும் அமைப்பு சில தசாப்தங்களுக்கு முன்னர் இக்கிராமம் அமைந்திருக்கும் உடுவில் உதவி அரசாங்கப் பிரிவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுப் பல்வேறு வகையான சேவைகளை ஆற்றி வந்தது. இதில் ஜந்து பேர் கொண்ட கிராமிய பஞ்சாயத்து சபை என்ற ஒரு சபையினை உருவாக்கி கிராமத்து மக்களில் பலர் எல்லை காணி வழக்குகள் உட்பட பல வழக்குகள் பிரச்சினைகளை பொலிஸ் நிலையம் நீதிமன்றம் என்று அநெகமாகச் செல்லவிடாது சமாதானமாகத் தீர்க்கப்பட்டு வரும் மரபு முறை செயல்பட்டு வந்தது.

சர்வமும் விக்னேசுவராமயம்

 

 

விக்னேசுவரப் பெருமான் திருநாமத்தினைக் கிராம மக்கள் என்றும் எந்த விடயத்திலும் பயன்படுத்துவார்கள் என்பதற்கு அங்குள்ள நீண்ட பல தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பொது நிறுவனங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

(அ) விக்னேசுவரா வித்தியாசாலை (1973ல் விக்னேசுவரா மகா வித்தியாலயம் என தரம் உயர்த்தப்பட்டது)
(ஆ) விக்னேசுவரா சன சமூக நிலையம்
(இ) விக்னேசுவரா விளையாட்டுக்கழகம்

1925 ல் ஆண்ட பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி இலங்கையினை ஆட்சி செய்த காலம் நாட்டின் பொருளாதார வளங்களைச்சுரண்டி தங்கள் நாட்டிற்கு எடுத்துக் செல்வதனையே நோக்கமாக கொண்டிருந்தார்களே தவிர நாட்டிலுள்ள கிராமிய வளர்ச்சிகளைப் பற்றி மண்ணிலிருந்து படித்துச் சட்டத்தரணியாகப் பதவி வகித்த அமரர் வைத்திலிங்கம் தம்பிராசா என்றும் அக்கால கிராமத்துச் செல்வந்தர் ஒருவரின் தனி முயற்சியினால் கிராமத்து மக்களை ஒன்று சேர்த்து 1925ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே விக்னேசுவரா வித்தியாசாலை என்னும் பாடசாலையாகும்.

கிராமத்தின் மத்தியில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுச் சில வருடங்களின் பின்பு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமே விக்னேசுவரா சன சமூக நிலையம் ஆகும். அன்றைய கால கட்டத்தில் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் பிரபல ஆங்கில ஆசிரியராகப் பதவி வகித்த குப்பிழான் கிராமத்தவரான திரு. சுந்தரசர்மா அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுப் பல சமூகப்பணிகளை இந்நிறுவனம் ஆற்றி வந்தது.பின்னாளில் சமூக சேவையில் அவரது சீடர்களாக இருந்து முழு நேரமாகச் சமூகப்பணி புரிந்துவந்த திரு வைத்திலிங்கம் பண்டிதர் திரு தம்பு-தருமலிங்கம் சட்டத்தரணி திரு. க. வைரவநாதன் ஆகியோரின் முயற்சியினால் வளர்க்கப்பட்டு பின்னாளில் கிராமத்து இளம் தலை முறைகளினால் இவைகள் தொடரப்பட்டு வந்தது.

விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த விளையாட்டுக் கழகமான விக்னேசுவரா விளையாட்டுக்கழகம் உதைபந்தாட்டத்தில் யாழ்ப்பாண குடாநாட்டிலேயே தமக்கென ஒரு நன்மதிப்பைப் பெற்றிருந்தது.

குப்பிழான் கிராமத்தில் பிறந்து ஏதோ ஒரு வகையில் இறைபணி மக்கள் பணி செய்து வரலாற்றில் இடம்பெறுகின்ற சிலரை இங்கு குறிப்பிடலாம்.

1. மகான் காசிவாசி செந்திநாதையர்
2. இசைமேதை குப்பிழான் செல்லத்துரை
3. நாடகக் கலைஞர் பீதாம்பரம்
4. சைவபூசணம் கா. நல்லையா

இவைகள் தவிர இன்னும் பல அறிஞர்கள் உள்ளுரிலும் வெளியூரிலும் வாழ்ந்து கொண்டே உள்ளார்கள்.

மேலே குறிப்பிட்ட ஆய்வுகள் யாவும் ஈழப்போராட்டம் தொடங்க முன்பு இருந்த நிலைமைகள் ஆகும்.
ஆனால் ஈழப்போராட்ட காலங்களில் பலாலி இராணுவ முகாமுக்கு அருகெ உள்ள கிராமம் ஆனதால் பெரிதும் பாதிப்புக்களையும் இடப்பெயர்வுகளையும் எம் கிராம மக்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. போராட்ட காலங்களில் கிரமத்தில் எவருமே இல்லாமல் அம்மண் நீர்வளம் சோலைவளங்கள் யாவும் வெறிச்சோடிப்போய் இருந்த நிலைமையையும் பின்னர் மீளவும் மக்கள் குடியேறி பொது நிறுவனங்களை மிகவும் மந்த கதியிலேனும் சீரழிந்த நிலைமையில் அங்கு எஞ்சியிருப்போர் இயங்க வைத்துக் கொண்டுள்ளனர்.

 

 

சிவ.பஞ்சலிங்கம்