குப்பிழான் என குளிருது நெஞ்சம்.

 

 

நீண்டு உயர்ந்த தொடர் மாடிக்கட்டிடத்தின் கண்ணாடி யன்னல் ஊடே வெளியே பார்க்கிறேன். கொட்டிய பனி உறைந்து வெள்ளிப்பாறைகள் போல் எங்கும் காட்சி தருகின்றன. பச்சை இலைகள் உதிர்ந்து சொந்தங்களைத் துறந்து சோகமயமாய் நிற்கும் மனிதர்கள் போல் சோபை இழந்து பட்ட மரங்கள் போல காட்சி தருகின்றன. வீசும் குளிர் காற்றில் உடல் உறைந்து நடுக்கம் எடுக்கிறது. பஞ்சணை மெத்தையில் படுத்துமென்ன? கார் பங்களா இருந்துமென்ன? இனவாதச் சூழல் காற்றுச் சுற்றியடிக்க உயிரைச் சுமந்து மேற்கு நாடுகள் தேடி ஓடி வந்தோம். படித்துப் பட்டம் பெற்றும் பணத்தைத் தேடியும் இயந்திர வாழ்வில் நடுங்கும் குளிரில் நாள் முழுவதும் பாடுபடும் நம்மவர் இதயம் கொதிக்கிறது. உள்ளத்தில் சுடுகிறது. பாய் விரித்துப் படுத்து வாய் திறந்து தூங்கிய நம் மண்ணின் நினைவு வருகிறது. நெஞ்சம் குளிர்கிறது. ஊரைச் சுற்றி நம் தாய் மண் குப்பிழானைச் சுற்றி வருகிறது உள்ளம்.

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே ஸ்ரீலங்காவின் மணி மகுடமான யாழ்ப்பாணத்தின் வட புலத்திலே சைவ உலகம் போற்றும் சைவ சித்தாந்த சிகாமணி காசிவாசி செந்திநாதையர் பிறந்து தடம் பதித்த தவப்பூமி. பாசிப் பயறும் ஊதிச் சுவைக்கும் புகையிலையும் வெண்டிச் செடியும் வண்டிப் பூசணியும் கருணைக் கிழங்கு முதல் உருளைக் கிழங்கும் வெங்காயமும் வளமாய் வளரும் செம்மண்ணைக் கொண்ட சிறப்பான மண்.

ஆகாயத்தை அணைத்து நிற்கும் அரச மரங்களும் விண்ணை முட்டும் பனை தென்னை மரங்களும் பற்றிப் படர்ந்து பறவைகளின் இருப்பிடமாய் நிழல் பரப்பும் ஆலமரங்களும் மருதும் வில்வமும் கொன்றையும் வன்னியும் வனப்புடன் வளர்ந்து பசுமையாய் விளங்க நந்தாத கிளைகள் ஓச்சி செந்தளிர்கள்; ஈன்று கனிதரும் மரங்களாம் மாவும் பலாவும் நிறைந்து விளங்கும் மண். இடர் வரினும் இடம் விட்டு அகலோம் எனக்கட்டியங் கூறி கனி தருவோமெனக் கனிவுடன் வளரும் வாழை மரங்களும் வளமாய் வளரும் மண் நம் குப்பிழான்.

குப்பிழாய் எனும் பூண்டு குவிந்து வளர்ந்தமையால் குப்பிழான் என்னும் பெயர் கொண்ட எம்மூரைச் சுற்றிச் சில நிமிடங்கள். . . . ஊரின் தெற்குப் பக்கமும் கிழக்குப் பக்கமும் பசுமையாய் பயிர் நிறைந்து பொன் கொழிக்கும் பூமி. ஏரில் எருது பூட்டி உழுது மண்ணைப்பண்படுத்தி பயிரை நாட்டியங்கு துலாமிதித்து பட்டையால் நீர் இறைக்கும் காட்சி கண்முன் தெரிகிறது. துலா மிதிக்கும் போது பாடும் ஒலி இன்றும் காதில் ஒலிக்கிறது. எட்டு வயது எனக்கு தோட்டத்தில் புடோலம் பந்தருக்குக்கீழ் இருந்து பிஞ்சுக்காய்கள் சுருண்டு போகாது கல்லைக் கட்டிவிட்டு கண்ணயர்ந்த போது புல்லுத்தின்ன வந்த ஆட்டுக்குட்டி என் காலை மிதித்த போது திடுக்குற்று எழுந்த ஞாபகம் நினைவில் வருகிறது.

சங்கரப்பா வீட்டில் சாமை அடி என்றால் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம். மாடு வளைத்துச்சூடு மிதித்து வைக்கோல் போரில் குத்துக்கரணம் சொல்லி அடிப்போம். ஊர் வேலி எல்லாம் புகையிலைத்தோரணம. சதங்கை ஒலியுடன் கடகட லொடலொட என்று ஒழுங்கை தெருவெல்லாம் பாரம் சுமந்து ஓடும் மாட்டு வண்டிகள் பங்குனி மாதம் மெல்லிய பனி எங்கும் புகை மண்டலம் புகையிலை உலர்த்தும் போது புகையூட்டும் புகையே அது. சுருட்டுக்கொட்டில்களில் தொழிலாளர் சுறுசுறுப்பாய் இயங்குவர். இல்லை வேலை என்பார் எவரும் இல்லை எம் ஊரில்.

அன்று விக்னேஸ்வரா வித்தியாசாலையில் நான் இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது மதிய உணவாகச்சோறு தருவார்கள். சோறு வாங்கக் கொண்டு போன கோப்பையைத் தொலைத்து விட்டு அழுத ஞாபகம் சிரிப்பு வருகிறது. விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் படித்த மாணவர்கள் எத்தனை? மருத்துவர்களாக பொறியியலாளர்களாக சட்டத்தரணிகளாக அரசாங்க திணைக்கள அதிகாரிகளாக ஆசிரியர்களாக இன்னும் எத்தனை எத்தனை ? ஏற்றிவைத்த ஏணி எங்கள் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் உள்ளம் பூரிக்கிறது.

சின்ன வயதில் அம்மாவின் கையைப்பிடித்துக்கொண்டு போய் கூத்துக்கொட்டகையில் கூடியிருந்து கூத்துப்பார்த்த ஞாபகம் அண்ணாவியார் பீதாம்பரனும் வேலையாவும் பொன்னையாவும் நாட்டுக்கூத்து நடிப்பதில் மிகவும் சிறந்த நடிகர்கள். ஓருமுறை ஒருகூத்து நடக்கும்போது ஒரு கட்டத்தில் அண்ணாவி பீதாம்பரனார் தன் இடுப்பிலே ஆட்டைக்கட்டிக்கொண்டு மேடையில் ஏறிவந்த போது சனக்கூட்டத்தைக் கண்டு ஆடு மிரண்டு ஓட்டம் பிடிக்க அவர் விழுந்த சம்பவம் இன்றும் சிரிப்பு வருகிறது. குப்பிளான் தாய் தந்த இசை வல்லாளர் செல்வத்துரையின் இசைக்கச்சேரி கேட்கக் குழுமி இருக்கும் கூட்டத்தின் ஞாபகம் வருகிறது.

கோடைக்காலம் ஆடி ஆவணி மாதம் வந்தால் ஒரே குதூகலம். வெளியூர் வாசிகள் சங்கத்தார் நடாத்தும் பேச்சுப்போட்டிகள் விளையாட்டுப்போட்டிகள் பைங்கிலிட்டி விளையாட்டு மைதானம். விக்னேஸ்வரா சன சமூக நிலையத்துக்கு அருகாமையில் இருக்கும் மைதானம் கேணியடி ஞான வைரவர் ஆலயத்துக்கு வடக்குப்பக்கத்தில் இருக்கும் மைதானங்களில் மாறி மாறி விளையாட்டுக்கள் சுவாரசியமாக இருக்கும் விக்னேஸ்வரா சனசமூகநிலையத்தில் நடந்த பேச்சுப்போட்டிகள் விழாக்கள் மறக்கமுடியுமா? லெனின் சனசமூகநிலையத்தில் நடந்த விவாத மேடை கூட சுறுசுறுப்பாக இருந்ததை மறக்கலாமா? வாணி சனசமூக நிலையத்தில் நடந்த கலைவிழா இன்றுபோல் தெரிகிறது.

எட்டு மூலைப்பட்டங்கட்டி மாமா கம்பித்தோட்டத்தில் நின்று பட்டம் விடும்போது அண்ணா வாலைப்பிடித்து ஏற்றிவிட்டது. மேலே பறந்த பட்டம் காற்றின் வேகத்தில் அறுந்து பறந்து போய் வீரமனைப்பனையில் தொங்க மாமா பட்டத்தை மேலே பார்த்துக்கொண்டு ஓட வெங்காயம் மிதிபட்டுச்சாறாக தோட்டக்காரர் பிடித்து அடித்தார். பின்னால் ஓடிய நாம் மிளகாய்ச்செடிக்குள் பதுங்கியிருந்து பார்த்தபோது ஐயா! இனிமேல் வரமாட்டேன் என்று அழுது கொண்டு ஓட்டம் பிடித்த காட்சி நினைவுக்குவரச் சிரிப்பு வருகிறது.

கற்கரைக் கற்பக விநாயகர் கோவில் கொடி ஏறினால் சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் கேணியடி ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவம் கன்னிமார் அம்மன் ஆலய அலங்கார உற்சவம் காளி கோவில் அலங்கார உற்சவம் தொடங்கி விட்டால் ஊரெங்கும் சைவ மணங்கமளும் பக்திமயம் ஆன்மீகப்பேச்சுக்கள் அப்படியே மக்களை ஈர்த்துவிடும். விநாயகர் தேரை ஊர்மக்கள் கூடி வடம்பிடித்து இழுக்கும் போது அரோகரா என்னும் ஒலி வானைப்பிளக்கும். இப்போதும் ஒலிக்கிறது. தாய்மண்ணின் வாசனையே தனிரகம். மறப்போமா நம் மண்ணை. குப்பிழான் தாயே! உன்னை நினைக்கையிலே உள்ளம் குளிருதம்மா. அன்னை பூமியே ஆராதிக்கிறேன் உனை.

 

எழுத்தாக்கம் - திருமதி தங்கமுத்து தம்பித்துரை