1930 ஆண்டு தொடக்கம் 1938 ஆம் ஆண்டு வரை நான் கண்ட குப்பிழான்....................எழுத்துருவாக்கம் க.கிருஷ்ணன்...........................

குப்பிழான் உறவுகள் அனைவரும் முன்னைய குப்பிழான் எப்படி இருந்தது பற்றி ஆவலுடன் இருப்பீர்கள். எனக்கு தெரிந்தவற்றையும் கேள்விப்பட்டவற்றையும் நான் எழுதுகிறேன். தனிப்பட்ட எவரையும் இழித்தோ உயர்த்தியோ எழுதவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

வீதி, தெருக்கள்

ஒன்று பலாலி - யாழ்ப்பாண வீதியில், அற்பையில் இருந்து மல்லாகம் போவதும் மற்றது மதவடியில் இருந்து குரும்பசிட்டி போவதும், தெற்கே மதவடியில் இருந்து பைங்கிலிட்டி வரைக்கும் மதவடியிலிருந்து கிழக்கு, வடக்கு, மேற்கு போவது கற்களால் போட்ட வீதிகள். தெற்கு நோக்கி போவது மண் ஒழுங்கை. தார் போட்ட வீதிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன் துறை, யாழ்ப்பாணம் இருந்து பலாலி போவதும், யாழ்ப்பாணம் இருந்து புத்தூர் வழியாக அச்சுவேலி போவதும் ஆகும்.

கற்தெருக்கள் சிறுகற்களைப் பரவி, பிரமாண்டமான இரும்பு சுருளையால் இரு வடக்கத்தை மாடுகளால் இழுத்து நொறுக்கப்பட்வை. இரண்டு, மூன்று வருடத்துக்கு ஒரு முறை திருத்த வேண்டும். தார் வீதி அறவே இல்லை. இதன்மேல் நடப்பவர்களும், மாட்டு வண்டி, சூத்திரம் (bicycle), நாளுக்கு ஒண்டு இரண்டு மோட்டார் வாகனங்கள் ஓடுவதுண்டு. நமது கிராமத்தில் இரண்டே இரண்டு மோட்டார் வண்டிகளும் ஒரு பேருந்தும் இயங்கின. பஸ் ஓட்டியவர் வீரவாகு வைத்திலிங்கம். மோட்டார் வாகனங்கள் பள்ளிமாலில் உள்ள குளாயர் சுப்பிரமணியம் (ஆசிரியர்) மாமனார் மற்றது அருளம்பலம் தற்போது கனடாவில் வசிக்கிறார். வைத்திலிங்கத்தின் தம்பி சின்னையா என்பவர் மதவடியில் ஏறக்குறைய 10 சூத்திர வண்டிகளை (bicycle) வாடகைக்கு விட்டவர்.

ஆலயங்கள்

குப்பிழான் கிராமத்தில் அமைந்த முக்கிய ஆலயங்கள் கற்கரை கற்பகவிநாயகர், சொக்கர்வளவு சோதி விநாயகர், காளி கோவில், ஆலமரத்து வீரபத்திரர் கோவில், வைரவர் கோவில். வீரபத்திரர் கோவிலுக்கு சிறிய கட்டிடம் மற்றவைக்கு வெளியில் சூலங்கள். சொக்கர்வளவு பிள்ளையார் கோவிலுக்கு காலை, மாலை பூஜைகள் உண்டு திருவிழாக்கள் இல்லை. கற்கரை கற்பகவிநாயகருக்கு பெரிய கட்டிடம், கொடிமரம், வெளி வீதி, உள்வீதி என்று இரு வீதிகள் உண்டு. இக்கோவிலின் உற்சவ நாட்களில் உள் வீதியும், வெளி வீதியும் சுவாமி சுற்றுவதுண்டு.காலை,மதிய,மாலை பூசைகள் தினமும் நடைபெறும்.

கொடியேற்ற உற்சவத்தில் 8ம் நாள் வேட்டை திருவிழா நடைபெறும். குதிரை வாகனத்தில் சுவாமி எடுக்கப்பட்டு பத்தகல் வைரவர் கோவிலிலும், ஆலடி வீரபத்திரர் கோவிலிலும் வாழை மரம் வெட்டி, வெட்டின இடத்தில் குங்குமத் தண்ணீரை ஊற்றி, (இரத்தத்துக்கு பதிலாக) வேட்டையாடி குருந்தடியில் மேள சமா வைத்து, சாமி கோயிலுக்கு திரும்புவார். இரவுத் திருவிழாக்களின் போது சமயம் பற்றி பிரசங்கங்களும், நடனங்களும், வான வேடிக்கைகளும் நடப்பதுண்டு.

மார்கழி திருவெம்பாவை பூசை 10 நாட்களுக்கு தினமும் சிறப்பாக நடைபெறும். கடைசி 10ம் நாள் சாமி ஊஞ்சலில் இருத்தி திருப்பொன்னுஞ்சல் பாட்டுக்கள் பாடப்படும். ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் நாகசின்னக்காரர் நாக சின்னத்தில் வாசிப்பார். ஊஞ்சல் பாட்டு முடிந்ததும் சாமியை உள் வீதி, வெளிவீதி சுத்தி வந்து வசந்த மண்டபத்தில் இருத்தி எல்லோருக்கும் பிரசாதம் கொடுக்கப்படும். திருவெம்பாவை நாட்களில் கோயில் பண்டாரமும், மற்றும் சிலரும் சேர்ந்து அதிகாலை 4 மணி தொடக்கம் ஜந்தரை மணிவரை சங்கு ஊதி, சூடா மணி அடித்து பஜனை பாடல்களை பாடி கால் நடையில் கிராமத்தை சுற்றி வருவார்கள். இக்கோவிலின் பிரதம குரு திரு.செல்லையா குருக்கள்.

மக்களின் வருமானம் பொருளாதாரம்

பொதுவாக கூறப்படின் வறுமைக்கோட்டின் நிலையில் என்று தான் சொல்ல வேண்டும். தனவந்தர்கள் என்று கூறும் போது லட்ஷாதி பிரபு, கோடிஸ்வரர் என்று சொல்ல முடியாது. பத்து, பதினைந்து ஆயிரம் ரூபா இருந்திருக்கலாம், திடமாக சொல்ல முடியாது. ஆனால் ஏராளமான நில புலங்கள் இருந்தது மட்டும் தெரியும். உதாரணமாக உடையார் குடும்பத்தை சேர்ந்த வைத்திலிங்கம் தம்பிராசா (proctor). நச்சர் சுப்பையா, எறம்புக்கடவை குட்டியர், சின்னத்தம்பி யாவர்கள். இவர்கள் ஒரே குடும்பத்தை சோந்தவர்கள். இவர்களில் தம்பிராசா தான் மாமன் சுப்பையாவின் உதவியுடன் நமது பாடசாலை விக்கினேஸ்வரா சாலையை 1926 அண்டு வாக்கில் கட்டிக் கொடுத்தவர். இவர்கள் எல்லோரும் கல் வீட்டில் வசித்தவர்கள். மற்ற கிராம மக்கள் மண் வீட்டில், தென்னோலை , பனையோலைகளால் வேயப்பட்ட வீடுகளில் வசித்தார்கள். பணக்காரர்கள் அவ்வளவு மற்றவர்களுடன் சேர்ந்து கிராம வைபவங்களில் கலந்த கொண்டதாக தெரியவில்லை.

பெரும்பாலோர் தொழில் விவசாயம், இவர்களின் முக்கிய விவசாயம் புகையிலை, மிளகாய், சாமி,திணை, குரக்கன் பலவகை சாப்பாட்டுக்கு வேண்டிய காய்,கறிப் பயிர்கள், வாழை, மரவள்ளி என்பனவாகும். இவைகளை சுன்னாகம் சந்தையில் விற்பதும் வீட்டுக்கு பாவிப்பதும் உண்டு. கொக்குவில், கோண்டாவில்,யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுக்கு வீடு, வீடாய் தலையில் சுமந்து கொண்டு போய் பெண்கள் விற்பதுண்டு. திரும்பும் போது சுண்ணாகம் சந்தையில் மீன்,சரக்கு வகைகளை வாங்கி வருவார்கள். வண்டி மாடு வைத்து உழைக்கும் ஆண்கள் வன்னி,மன்னார் இடங்களுக்கு சென்று நெல்லு மூடைகளை கொண்டு வந்து சில்லறையாய் விற்பதுமுண்டு, சில பெண்கள் வீட்டில் அப்பம்,தோசை,புட்டுச் செய்து, தங்களது 10,15 வயது மகளிடம் கொடுத்து வீடு வீடாக விற்பதுமுண்டு. வீட்டில் வந்து வாங்குபவர்களுமுண்டு . தையல் தெரிந்த பெண்கள் சட்டை, பாவாடை தைத்து உழைப்பார்கள். கல்வி கற்றவர்கள் மிக குறைவு.

4,5 குடும்பங்கள் மலேசியா,சிங்கப்பூர் சென்று இடைக்கிடை பணம் அனுப்புபவர்களின் குடும்பங்கள் ஓரளவு வசதியாக இருந்தார்கள்.சிங்கப்பூர்,மலேயா சென்றவர்களின் குடும்பங்களின் தந்தையர் கொஞ்ச கல்வி அறிவு இருந்ததால் அவர்கள் காட்டுபகுதியில் கற்பாறை நிறைந்த நிலங்களை அரசாங்கத்திடம் இருந்து மிகவும் மலிவான விலையில் வாங்கி கற்பாறைகளை டைனமற்றினால் உடைத்து நிலத்தை பதப்படுத்தி பயிர் நிலமாக்குவார்கள். அப்படி வந்தது தான் சுடலைக்கு முன்னால் இருக்கும் கம்பித் தோட்டம்.


பலவகைப்பட்ட மனித சாதி

நம் கிராமத்துள் பலவகைப்பட்ட சாதிகள் வசித்து வந்தார்கள். பிராமணர்கள் கோயில் பூசகர்களாகவும், மற்றச் சமயத்தோடு சம்பந்தப்பட்ட தொழில்கள் திவசம், வீடு குடி புகுதல், பிறப்பு, இறப்பு துடக்கு கழித்தல், யாத்திரை சென்று திரும்பினால் வீட்டில் பூசைகளும், சாதகம் வாசித்தல் இறந்தவர்களின் நாட்கள் குறித்து வைத்து திதி அறிவித்தல், ஆசிரியராக பணி புரிதல். மொத்தத்தில் மற்றவர்களை காட்டிலும் படித்தவர்கள். எளிய சாதியினர் வெள்ளாளருக்கு தொண்டு வேலை செய்பவர்கள். இவர்கள் வசிப்பது சிறு குடிசையில். வேளாளர் கீழ்ச் சாதியினரை மிகவும் அருவெறுப்பான முறையில் நடத்துவார்கள். உதாரணமாக சிலவற்றை சொல்லுகிறேன். இச்சாதியினர் மேல் சாதியினரின் வீட்டுக்குள் நுளைய முடியாது. கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. இந்து சமய கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட முடியாது. மேற்சாதியினரின் முன்னால் தோளில் சால்வை, பகல் 12 மணி நேரங்களில் வெய்யில் அகோரமாய் இருந்தாலும் தலப்பாவோ, தலையில் துண்டோ போட முடியாது, வெள்ளான் வீட்டில் சாப்பிடும் தண்ணீர் குடிக்கும் பாத்திரங்கள் அவர்களால் வெளி கூரைகளில் செருகி வைக்கப்படும்.

உள்ளூர் வெளியூர் கோயில்களில் திருவிழாக் காலங்களில் தண்ணீர் பந்தல் போடுவதுண்டு, இவற்றில் சக்கரை தண்ணீர் பந்தல் போடுவதுண்டு, இவற்றில் சக்கரை தண்ணீர், ஊறுகாய் தண்ணீர் , மோர் தாகம் தீரப்பதற்கு கொடுக்கப்படும். கீழ் சாதியினருக்கு பக்கத்தில் குடிக்கும் பாத்திரம் வைத்து வாழைத்தாள் அல்லது தகரத்தால் செய்யப்பட்ட வழியாக ஊற்றி விட கீழ்ச் சாதியினர் மூக்குப் பேணியில் ஏந்திக் குடிப்பார்கள். பள்ளிக்கூடத்தில் எழிய பிள்ளைகளுக்கு அறவே இடம் கிடையாது. வேளாளர்களுள் திருடர்கள், துரோகிகள்,அடுத்தவன் பெண்ணை திருடுபவர்கள், சட்டபூர்வமான மனைவிக்கு மேல் 2,3 வைப்பாட்டிகளை வைத்திருப்பவர்களும், தனது உழைப்பு வருவாயை தெரியாது பல பிள்ளைகளை பெற்றெடுத்து போடுபவர்களும், இளம் பெண் விதவையில் கண் போடுபவர்களும், பசுத்தோல் போட்ட முதலைகளும், மிக பயபக்தியுடன் நேர்மையாக வாழ்ந்தவர்களும் உண்டு. இரண்டொரு உதாரணங்களையும் எழுதுகின்றேன்.ஒரு ஆண் பிள்ளை தன் சட்டபூர்வமான மனைவிக்கு மேல் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து ஓர் ஆண் குழந்தை பிறந்ததும் அவாவை கைவிட்டு , இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இன்னொரு பெண் குழந்தை பிறந்ததும் அவாவையும் கைவிட்டு, அந்த பெண் இன்னொரு ஆணை கணவனாக வைத்திருந்து, பெண் பெரிய பிள்ளையாகி 16 வயது அடைந்ததும் அந்தப் பிள்ளையை தாய்க்கு கணவராக இருந்தவர் (சிறிய தகப்பனார்) அந்த பிள்ளையை திருமணம் செய்ய விரும்பி மனைவியிடம் தெரிவிக்கவும், மனைவி விளக்குமாறு எடுத்து வீட்டை விட்டு துரத்தினதும், இன்னொரு பசுத்தோல் போர்த்திய முதலைக்குச் சரியான, எனதும் மற்ற இள நண்பர்களோடும் இருந்தவரின் கதை.

ஒரு நண்பனின் மூத்த பெண் சகோதரி மிகவும் அழகானவர் இளம் வயதில் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை பிறந்ததும் விதவையானார். இந்த முதலை அவர் நண்பரோடு வீட்டுக்கு போவதும் வருவதுமாக இருந்து அந்தப் பெண்ணோடு தொடர்பு வைத்து ஆண் குழந்தையும் பிறந்தது. இதே வேளையில் ஊரில் உள்ள தனவந்தரின் மனைவி இறந்து விட்டார். அப்போது அவருக்கு 40, 45 வயதுக்குள் இருக்கும். இவரின் தூரத்து உறவினர் சொத்துக்கள் வெளியே போகாது இருக்க தனது 18 வயது மகளை திருமணம் செய்து வைத்தார்.வயது இடைவெளி ஏறக்குறைய 22 ஆகலாம். அதே தருணம் மாப்பிளையும் தேக சுகமில்லாதவர். இவரால் தாம்பத்திய வாழ்வில் மனைவியை திருப்திப்படுத்த முடியவில்லை. அதே சமயம் கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதை அறிந்த முதலை குடிக்குள் புகுந்து கணவனுக்கு உதவி செய்வது போல் நடித்து, கணவரும் இந்த முதலையில் மனம் நெகிழ்ந்து கொஞ்ச நில புலங்களை எழுதிக் கொடுத்துவிட்டார். அதே சமயம் அந்த முதலை அவர் மனைவியோடு கள்ள தொடர்பு கொண்டுள்ளார். சிறிது காலத்தில் கணவர் இறந்து விட்டார். அவர் மனைவியை தனது மனைவியாக ஆக்கி கொண்டார். ஏழையான அந்த முதலை திடீரென பணக்காரர் ஆகிவிட்டார். கிராம மக்களும் அவரை மிகவும் மரியாதையாக நடத்தினார்கள்.

இதேவேளையில் நான் கேள்விப்பட்டதையும் எழுத விரும்புகின்றேன். இந்த தனவந்தரின் தாயார் இறந்து விட்டார். ஒரு சனிக்கிழமையன்று ஒரு சதத்திற்கு சீயாக்கை வாங்கி வேக வைத்து தலை முழுகிய மகனைக் கண்ட தகப்பனார், ஏ தம்பியடா ஒரு சதத்தை செலவழித்து சியாக்கை தலையில் வைத்து முழுகுவதை காட்டிலும் , முன்னிரவு சோற்றில் ஊத்தி வைத்த பழந்தண்ணீரை சீயாக்கைக்கு பதிலாக உபயோகித்தால் ஒரு சதம் மிஞ்சும் தேகமும் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் என்றாராம். என்ன வேடிக்கை ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார் என்ற முது மொழியை உணர்த்துகிறது. இன்னம் பல பல இழிவான செயல்களை செய்பவர்களும் உண்டு. இந்த முதலை தன் பிறவிக்குணத்தை காட்டி, இறுதியில் பிறந்த சூழ் நிலையில் இறந்ததை கேள்விப்பட்டேன். திருடர் ஆடு கோழிகளை திருடுவார்கள். அநேகமான ஆண்களுக்கு பட்ட பெயர்கள் உண்டு. குளாயர், கரும்பர், மொண்டியர், கழலையர், அறுகாஞ்சி, கறுவல், சடையன், கிளாக்கர், மொட்டை, மோட்டை, புட்டி, எரிதணல், பென்சன், வன்னியர், அம்பி, சளியர், நச்சர், மாலையர், நச்சுவாய், அகத்தியர், கண்ணி,முனியர்,பாணர் என நிறைய இருந்தார்கள்.

பாடசாலை


குப்பிழான் விக்கினேஸ்வரா பாடசாலை 1926 ஆண்டு வாக்கில் திரு வை தம்பிராசா பெரியாரால் கட்டப்பட்டது. இப்பாடசாலை (hindu board) local manager திரு தம்பிராசாவாலும் general manager hindu board charman தின்னை வேலியில் வாழ்ந்த திரு அரசரத்தினம் என ஞாபகம் என்பவர்களால் அரசாங்கத்தின் ஆதரவோடு நடத்தப்பட்டது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் திரு நமசிவாயம், அசிரியர்கள் திரு பொன்னுக்குமார், முத்துக்குமார் (குரும்பசிட்டியை சேர்ந்தவர்கள் ) கண்ணி முருகேசர், திரு வைத்திலிங்கம் (engineer), சடாசிவம், மாணிக்கவாத்தியரின் மனைவி கனகம்மாவின் தந்தை, திரு ராமு உபாத்தியார், ஏழாலை (salvation army) யைச் சோந்த திருமதி இராசம்மாவாலும், மாமா நச்சர் சுப்பையாவாலும் நடத்தப்பட்டது. இப்பாடசாலை கட்ட முன்பு நம்மவர் குரும்பசிட்டியிலிருந்த மகாதேவா( பரமாந்தி பள்ளிக்கூடம், அதிபரும் சொந்தக்காரருமான திருமானந்தர்) வித்தியாசாலையிலும், அற்பையில் இருந்த கிறிஸ்தவ பாடசாலையிலும் படித்து வந்தார்கள்.

திருமணங்கள்

நமது கிராம பெண் பிள்ளைகள் 14,15 வயதுகளில் பெரிய பிள்ளை ஆகினதும் தாய், தந்தையர்கள் அவர்கள் பள்ளி போவதை நிறுத்தி விடுவார்கள். மிகவும் மடமையான காலச்சாரம். எனக்கு தெரிந்தளவுள் எனது கல்வித் திறமை எவ்வளவோ பல பெண்களோடு ஒப்பிடும் போது குறைந்த நிலை. 1953 ஆம் ஆண்டு நான் ஊர் சென்ற போது சிலரை கண்டு கதைத்த போது அவர்கள் திருமணம் செய்து நாலைந்து குழந்தைகளுடன் வருவாய் குறைந்த கணவருடன் குடும்பம் நடாத்தி, அவர்களின் தேக நிலை, வாழ்க்கை நிலைமை மிகவும் பரிதாபமான நிலையில் கண்டு உண்மையில் என்மனம் உருகியது. இவையெல்லாம் தாய், தந்தையரின் கல்வி அறிவல்லா விளைவு. அப்போது காதல் திருமணம் குறைவு. மாமா மகள், மாமி மகன் ஒருவரை ஒருவர் திருமணம் செய்ய விரும்பினால் எவராலும் தடுக்க முடியாது. அவர்கள் ஆணோ பெண்ணோ திருமணம் செய்ய உரிமை உண்டு. தாய் தந்தை பேசி செய்யும் திருமணங்கள் நடைமுறையில் இருந்தது. விவாகரத்து என்பது அறவே கிடையாது. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற சட்டம் அமுலில் இருந்தது இப்போதும் இருக்கிறது. உதாரணமாக மலேசியா சிங்கப்பூரில் சைவ, கிறிஸ்தவ இலங்கையர்கள் மட்டும் கணவர் இறந்த பின் மனைவிக்கு ஓய்வூதியம் உண்டு. இச்சட்டம் கட்டாயமானது மற்றவர்களுக்கு கிடையாது. திருமணங்கள் தற்போது போல் நடைபெற்றது. மற்றும் மணவறை உடனுக்குடன் செய்யப்பட்டது. சாப்பாடு பந்தி போசனம் இனத்தவர்கள் 4 நாட்களுக்கு போதிய அரிசி, பலவகை மரக்கறிகள் கொண்டு வருவார்கள். பெரிய கிடாரங்களில் சமைத்து பலவித மரக்கறிகளுடன் பாயில் உட்கார்ந்து வாழை இலைகளில் பரிமாற மகிழ்ந்து சாப்பிடுவார்கள். கலியாண மண்டபம் கிடையாது. வீட்டிற்கு முன்னால் பந்தல் போட்டு வெள்ளை கட்டி திருமணம் நடைபெறும். திருமண அழைப்பிதழ் வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம் வைத்து சொந்தமானவர் வீடுகளுக்கு சென்று வாய் சொல்லினால் அழைப்பு விடுவதுண்டு. கால் மாறுதல் நான்கு நாட்கள் வரை சிறப்பாக நடப்பதுண்டு. தலைப்பிள்ளை பிறப்பை பெண்ணின் தாய் தந்தையர் பொறுப்பு எடுப்பார்கள்.திருமணங்கள்

நமது கிராம பெண் பிள்ளைகள் 14,15 வயதுகளில் பெரிய பிள்ளை ஆகினதும் தாய்,தந்தையர்கள் அவர்கள் பள்ளி போவதை நிறுத்தி விடுவார்கள். மிகவும் மடமையான காலச்சாரம். எனக்கு தெரிந்தளவுள் எனது கல்வித் திறமை எவ்வளவோ பல பெண்களோடு ஒப்பிடும் போது குறைந்த நிலை. 1953 ஆம் ஆண்டு நான் ஊர் சென்ற போது சிலரை கண்டு கதைத்த போது அவர்கள் திருமணம் செய்து நாலைந்து குழந்தைகளுடன் வருவாய் குறைந்த கணவருடன் குடும்பம் நடாத்தி, அவர்களின் தேக நிலை, வாழ்க்கை நிலைமை மிகவும் பரிதாபமான நிலையில் கண்டு உண்மையில் என்மனம் உருகியது. இவையெல்லாம் தாய், தந்தையரின் கல்வி அறிவல்லா விளைவு. அப்போது காதல் திரமணம் குறைவு. மாமா மகள், மாமி மகன் ஒருவரை ஒருவர் திருமணம் செய்ய விரும்பினால் எவராலும் தடுக்க முடியாது. அவர்கள் ஆணோ பெண்ணோ திருமணம் செய்ய உரிமை உண்டு. தாய் தந்தை பேசி செய்யும் திருமணங்கள் நடைமுறையில் இருந்தது. விவாகரத்து என்பது அறவே கிடையாது. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற சட்டம் அமுலில் இருந்தது இப்போதும் இருக்கிறது. உதாரணமாக மலேசியா சிங்கப்பூரில் சைவ, கிறிஸ்தவ இலங்கையர்கள் மட்டும் கணவர் இறந்த பின் மனைவிக்கு ஓய்வூதியம் உண்டு. இச்சட்டம் கட்டாயமானது மற்றவர்களுக்கு கிடையாது. திருமணங்கள் தற்போது போல் நடைபெற்றது. மற்றும் மணவறை உடனுக்குடன் செய்யப்பட்டது. சாப்பாடு பந்தி போசனம் இனத்தவர்கள் 4 நாட்களுக்கு போதிய அரிசி, பலவகை மரக்கறிகள் கொண்டு வருவார்கள். பெரிய கிடாரங்களில் சமைத்து பலவித மரக்கறிகளுடன் பாயில் உட்கார்ந்து வாழை இலைகளில் பரிமாற மகிழ்ந்து சாப்பிடுவார்கள். கலியாண மண்டபம் கிடையாது. வீட்டிற்கு முன்னால் பந்தல் போட்டு வெள்ளை கட்டி திருமணம் நடைபெறும். திருமண அழைப்பிதழ் வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம் வைத்து சொந்தமானவர் வீடுகளுக்கு சென்று வாய் சொல்லினால் அழைப்பு விடுவதுண்டு. கால் மாறுதல் நான்கு நாட்கள் வரை சிறப்பாக நடப்பதுண்டு. தலைப்பிள்ளை பிறப்பை பெண்ணின் தாய் தந்தையர் பொறுப்பு எடுப்பார்கள்.சாவீடு அல்லது செத்தவீடு


முதுமையினாலோ அல்லது நோயினாலோ இறப்பதற்கு முன்பு சேடம் இழுப்பது என்று சொல்வார்கள் சேடம் என்பது மூச்சு திணறல். இந்த நேரத்தில் பால் கரண்டியால் வாயில் விடுவார்கள். பால் உள்ளே போகாது கடவாய் வழியாக வெளியே வரும். சற்று நேரத்தில் மூச்சு நின்று விடும். இறந்ததும் சுற்றத்தார் ஒலிக்க கண்ணீர் விட்டு அழுவார்கள். இறந்தவர் பெயர் முடிவுக்கு வந்துவிடும். பிணம் எனும் பெயர் சூட்டி அவயவங்களை சுத்தம் செய்து, அலங்கரித்து, வீபூதி பூசி, பெட்டிட்டு வடக்கே தெற்கே கால்களுமாய் பாயில் படுத்தி, கை கால்களை வெள்ளைத் துணியினால் கட்டி, தலைமாட்டினில் குத்து விளக்கு ஏற்றி, உடைத்த தேங்காய்க்குள் (முடிப் பாகம்) வெற்றிலை பாக்கு வைத்து வெள்ளைத் துணியினால் (முகத்தை தவிர) மூடி விடுவார்கள். இடைக்கிடை பிரேத மணத்தை அகற்ற வாசனைத் திரவியத்தை பிரேதம் மேல் தெளிப்பார்கள். பறை மேளங்களை அழைத்து பறை அடிப்பிப்பார்கள். இச்சத்தத்தை கேட்டு சாவிட்டுக்கு மக்கள் வருவார்கள். இறந்தவர் தீட்சை கேட்டவர் ஆகில் சபக்கிரிஜை செய்வதுண்டு. அல்லாதவர்களுக்கு செய்வதில்லை. தீட்சை கேளாதவர்களுக்கு குடும்பம் விரும்பினால் சைவக் குருக்களை கொண்டு கும்பத்தில் நூலைக் கட்டி பிரேதத்தின் செவியில் நூலை வைத்து தீட்சை வைத்து சபக்கிரிஜை செய்பவர்களுமுண்டு. சாவீட்டில் தேவாரம், புராணம், சிவபுராணம் பாடியது நான் கண்டதில்லை. சபக்கிரிஜை செய்யும் போது மட்டும் மூத்த மகன் தந்தைக்கும், இளைய மகன் தாய்க்கும் திருப்பொற் சுண்ணம் உரலில் உலக்கையால் இடிக்கும் போது சுண்ணத் திருவாசக பாடல்களை இரண்டு மூன்று பேர் புத்தகத்தை பார்த்து பாடுவார்கள். உரலுக்குள் நவதானியங்கள் வைக்கப்படும். அச்சமயம் பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் இருந்தால் பிரேதத்தை சுற்றி பந்தம் பிடிப்பார்கள்.

இளம் பெண் சுற்றத்தவர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து அழுவார்கள். முதிய பெண்கள் மார்படித்து ஒப்பாரிப் பாடல்களைப் பாடிக்கொண்டு பிரேதத்தை இடது புறம் தொடங்கி வலது புறம் வருவார்கள்.அப்போது பிரேத வண்டி கிடையாது. தென்னோலையால் பின்னப்பட்ட பாடை (பலமான தடிகளை கீழ் வைத்து பிரேதம் காவ பலமுள்ள மரக்கட்டைகளால் இரு புறமும் கட்டி எடுத்துப் போவார்கள். போவதற்கு முன் வாய்க்கருசி பெண்களும், சுடலையில் ஆண்களும் போடுவார்கள். சுண்ணம் இடித்தவர் சட்டியில் கொள்ளி நெருப்பு கொண்டு போவார். போகும் வழி வரைக்கும் பறை மேளம் அடித்துக் கொள்வார்கள். கீழ் சாதியினர் இரண்டு மூன்று பேர் சாராயம் குடித்த கூத்தாடியும் செல்வார்கள். பறையர்கள் படுக்கையை விட்டு எழுந்ததும் வேளாளர்கள் இரண்டொருவர் (தங்கள் வருவாய்க்கு ) இறக்க வேண்டுமென இறைவனைத் தொழுவதும் உண்டென கேள்விப்பட்டேன். சுடலையை அடைந்ததும் 3 முறை இடது புறம் இருந்து வலப்பக்கமாய் சுற்றி வந்து தலை வடக்கேயும் கால்களை தெற்கேயும் அடுக்கி வைத்திருந்த மரக்கட்டைகள் மேல் பிரேதத்தை கிடத்தி, பெரிய மரக்கட்டை (நெஞ்சுக்கட்டை) நெஞ்சின் மேல் வைத்து (காரணம் நெருப்பு எரியும் போது நெஞ்சு கருகி மேல் எழும் போது கீழே விழுவதை தடுக்க) ஆண்கள் வாய்கரிசி இட்டும், கொள்ளி வைப்பவர் , தண்ணீர்,மாவிலை தேங்காய் கொண்ட கொள்ளிப்பானையுடன் 3 முறை இடப்புறம் இருந்து வலப்புறமாக சுற்றி வரும் போது, வெட்டியான் கூரிய கத்தியால் பானையில் கொத்த, தண்ணீர் வெளிவர கொள்ளி வைப்பவரின் அண்ணையோ, தம்பியோ சுற்றத்தவர்களோ இடது புற கையால் பிரேதத்தின் மீது தண்ணீரை தெளித்து மூன்று முறை முடிந்ததும், பிரேதத்தின் தலைப் பக்கம் பின் நோக்கி நின்று, கொண்ட வந்த நெருப்புக் கொள்ளியை ஒரு கையால் வைத்து, முன்பக்கமாக இரண்டு மூன்று அடி சென்று பின் புறமாய் பானையை கீழே போட்டு உடைத்து ஒரு கையில் இரும்பு கத்தியுடன் திரும்பி பார்க்காமல் வீடு திரும்புவர்.

வெட்டியான் மண்எண்ணை ஊத்தி எரித்து விடுவார். இறந்த மூன்றாம் நாள் சுடலை சென்று ( மூன்று றொட்டி, இரண்டு மூன்று வகை பழம், கற்பூரம்,ஊதுபத்தி,வெற்றிலை பாக்கு) பிரேதத்தின் எரிந்த சிறு மூட்டு எலும்புகளை சிறு பாத்திரத்தில் வைத்து, படைத்தல் செய்து, எஞ்சிய எலும்பு, சாம்பலை மண்ணில் புதைத்து மூடி அதற்கு மேல் ஒரு மரக்கிளை நட்டு தண்ணீர் ஊற்றி பூக்கள் தூவி மூட்டு எலும்புகளுடன் வீடு திரும்பி, மூட்டு எலும்பு கொண்ட பாத்திரத்தை வெள்ளைத் துணியால் மூடி விட்டு வெளிப்புறத்தில் மழைத் தண்ணீர் படாமல் தூக்கி வைப்பார்கள். 31 ஆம் நாள் (அந்தியேட்டி) எலும்பு பாத்திரம் மற்றைய தேவையான பொருட்களுடன் கடற்கரை சென்று பொங்கல் செய்து சாவீட்டில் செய்த கிரிஜை திரும்பவும் செய்து பொற் சுண்ணம் பாடி படைத்தும் எலும்பு கொண்ட பாத்திரத்தை திறந்து எலும்பு சாம்பலை கடலில் தூவி எறிந்து, சூரியனை நோக்கி வணங்கி மூன்று முறை கடலில் மூழ்கி வீடு திரும்பி பிராமணரை கொண்டு வீட்டு கிரத்தியங்கள் செய்து, வீடு முழுவதும் வேதம் ஓதிய தண்ணீரை தெளித்தும் தொடக்கு முறித்தும் சாப்பிடுவார்கள். ஒரு வருசம் ஆனதும் செத்தவர் இறந்த திதியில் தலைத் திவசம் கொடுத்து, வருஷம் தோறும் அத் திதியில் கொள்ளி வைத்தவர் தான் இறக்கும் வரை திவசம் கொடுப்பது உண்டு. வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ என்று கவிஞர் கண்ணதாசனின் வரிக்கேற்ப,

ஆர் உறவு எனக் கிங்கு,
யார் அயல் உளார் ஆனந்தமாகும் சோதி
ஓடும் கவந்தியுமே உறவு என்றிட்டு உன் கசிந்து
தேடும் பொருளும் சிவன் கழலே எனத் தெழிந்து
கூடும் உயிரும் கமண்டையிடக் குனித்த அடியேன்
ஆடும் குலாத்தில்லை ஆண்டானை கொண்டன்றே
மாணிக்கவாசகர் பெருமானும்
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்ட போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே என்று அருணகிரி நாதர் பாடியுள்ளார்.