புதிய எண்ணங்களுடன் நம் பண்பாட்டின் அடையாளங்கள் மாறாமல் மாறுதலை நோக்கி முன்னேறுவோம்: தைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் மூத்த ஆன்மீகவாதி மாதாஜி. updated 14-01-2015

தமிழ்ப் புத்தாண்டு உதயமாகின்ற தைப் பொங்கல் திருநாளில் நாங்கள் ஒவ்வொருவரும் சற்றுச் சிந்திப்போம்.புதிய எண்ணங்களுடன் நம் பண்பாட்டின் அடையாளங்கள் மாறாமல் மாறுதலை நோக்கி முன்னேறுவோம் .இதுவரை நாம் பட்ட துன்பங்களை மறந்து  எம்மிடமுள்ள தீய எண்ணங்களை விலக்கி நல்லெண்ணங்களை மனதில் விதைப்போம் .குறுக்கு வழியை நாடாது மெய் வருத்தக் கூலி தரும் என்பதை மனதிற் கொண்டு உழைத்து வாழ்வில் முன்னேறுவோம் .இன்று தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்ற உலக இந்துக்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த  தைப் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக என குப்பிளானின்  மூத்த ஆன்மீக வாதி புலவர் மணி விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார் தனது தைப் பொங்கல் வாழத்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

"தை பிறந்தால் வழி பிறக்கும்"  என்பது முன்னோர் கருத்து .தைப் பொங்கல் திருநாள் தமிழரின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் புனித நாள்.தைமாதம் பிறந்த பின்னரே சைவப் பெருமக்கள் பலவித நன்மை காரியங்களை ஆரம்பிப்பார்கள்.தை பிறந்தால் திருமணமாகாது இருக்கும் கன்னியர்களின்  வாழ்வு கரை சேரும் என்ற நம்பிக்கை இன்று வரை எமது சமூகத்தில் நிலவி வருகிறது .தைத் திருநாளை உழவர் திருநாள் என்றும் சொல்வர். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்  என வள்ளுவப் பெருந்தகை கூறியதிலிருந்து உழவுத் தொழிலின் முக்கியம் புலப்படுகின்றது.உழவுக்கு உறுதுணையாக சூரிய பகவான் காணப்படுகின்றார்.அதுமட்டுமன்றி உலகத்தின் இயக்கத்திற்கும்,உயிர்களின் இருப்புக்கும் மூல காரணமாகச் சூரியபகவானே விளங்குகின்றார்.அந்த வகையில் உதய சூரியனுக்கு நன்றி செலுத்தும் முக்கிய  திருநாளாக உலகளாவிய ரீதியில்  இந்துக்களால் தைப் பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது.

தேவர்களுக்கு வைகறைப் பொழுது மார்கழி மாதமாகும் .இக் காலம் பனி,மழை மிகுந்த காலம் .மனிதருக்குப் பிணி கொடுக்கும் காலம்.இதனாலே தான் மார்கழி மாதம் முழுவதும் பெரு நன்மை உண்டாகும் பொருட்டு அதிகாலையில் எழுந்து நீராடி ஆலயம் சென்று வழிபடுவர்.அதிகாலையில் முற்றம் கூட்டி அரிசி மாவினால் கோலமிடுவர் .

மார்கழி மாதம் நிறைவு பெற்றுத் தைமாதத்தை எதிர்பார்த்திருக்கும் மக்கள் வாழ்வு மேன்மையுற வேண்டும்.ஈழத் தமிழர்கள் இதுநாள் வரை பட்ட துன்பங்கள் மறைய தைத் திருநாள் வழி விட வேண்டும்.தைப் பொங்கல் பண்டிகை ஒற்றுமையை உணர்த்தும் பண்டிகையாகவும் அமைந்துள்ளது.தைப் பொங்கல் திருநாளன்று அதிகாலை வேளையில் நித்திரை விட்டெழுந்து நீராடி முற்றத்திலே கோலமிட்டு மாவிலை தோரணங்களால் வீட்டை அலங்கரித்து குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கலோ பொங்கல் எனக் கூறிப் பொங்கல் பானையில் அரிசி  இட்டு அதன் பின் பால்,சக்கரை ,பயறு,தேன் முதலியன இட்டுப் பொங்கி மகிழும் காட்சி அழகானது.பொங்கிய பொங்கலைச் சூரியனுக்குப் படைத்த பின்னர் தாமும் உண்டு உறவினர்கள் ,நண்பர்கள் ,அயலவர்கள் ஆகியோருடன் பகிர்ந்துண்டு மகிழும் மரபு  இன்று வரை கிராமப் புறங்களில் நின்று நிலவுகிறது  எனவும் தெரிவித்தார்.

செய்தித் தொகுப்பு :-செ -ரவிசாந்.

மாற்றங்கள் சுமந்து மறுமலர்ச்சி மலர வருக தைத் திருநாளே.

வந்தது தைப் பொங்கல் 

வகை வகையாய்க் கோலம் போட்டு 
கோலாகலமாய் உன்னை வரவேற்றிட 
ஆசை தான்....

புத்தாடை புனைந்து 
பட்டாசு கொளுத்தி 
சொந்தங்கள் கூடி நின்று
வாழ்த்துக்கள் பரிமாறி மகிழவும் ஆசை தான் 

அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை 
காணாமற் போனோர் சரணடைந்த உறவுகளின் 
கதி என்னவென்று கலங்கித் தவிக்கும்
உறவுகளுக்கும் உரிய பதிலில்லை 

ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களுக்கு 
முழுமையாக விடுதலை இல்லை 
அதனால் பொங்கிட சொந்த ஊருமில்லை 
சொந்த வீடும் இல்லை 

போர்க் குற்றங்களுக்கு சர்வதேசத்திடம் 
முறையிட்டும் முறையான நீதியில்லை 
தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வுமில்லை 
பெற்றுத் தருவதற்கு அரசாங்கமும் தயாரில்லை 

இத்தனை துன்பங்களும் எம்மைச்
 சூழ்ந்து வருத்துகையில் 
அரிய  தைப் பொங்கல் பொங்க 
எமக்கு வழி எங்கே ?

காயப்பட்ட மனங்களுக்கு ஒத்தடமாய் 
வருக தைத் திருநாளே 
மாற்றங்கள் சுமந்து மறுமலர்ச்சி மலர 
வருக வருக.....!இன்பம் தருக தருகவே....!

கவியாக்கம் :-குறிஞ்சிக் கவி செ -ரவிசாந்,
வீரமனை ,குப்பிளான் .