கந்தசட்டி காலச் சிந்தனை


உதித்தனன் முருகன்!
( சித்தாந்தரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம்)


முருகன் தமிழ் நிலத்து இறைவன் என்று போற்றப்படுகிறான். அவனின் திருத்தலங்களான ஆறு படைவீடுகளும் வேறு பல கோயில்களும் தமிழ் மண்ணில் உள்ளன. அவன் புகழ் பாடும் நூல்கள் தமிழிலே பலவுண்டு. அவன் பிறப்புப் பற்றியும் அருட்செயல்கல் பற்றியும் பல கதைகளும் உள்ளன.

சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் பிறந்த இளைய மகனே முருகன் என்பது பொதுவான கருத்து. ஆனால் சைவ சமயத்தின்படி இறைவன் பிறவி எடுப்பதில்லை. அப்படிப் பிறந்தவன் இறைவனாக மாட்டான். சைவத்தின் பெருங்கடவுளான சிவபெருhனைச் சிலப்பதிகாரம் ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ என்று போற்றுகிறது.

முருகக் கடவுளுக்கு பிறப்புமில்லை, இறப்புமில்லை என்று அருணகிரநாதரின் கந்தரனுபூதி கூறுகிறது. ‘பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்பது இது குறித்த விளக்கம். முருகப் பெருமான் குறித்த ஒரு முக்கிய நூல் கந்தபுராணம். அதில் முருகன் பிறந்தான் என்ற சொல்லாமல் ‘உதித்தான்’ என்று சொல்லப்படுகிறது.

‘அருவமும் உருவு மாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி ஆகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்ய.’

அதிகாலையில் கீழ்த்திசை வெளுக்க, கதிரவன் உதிக்கிறான். மண்டியிருந்த இருள் விலக, உலகம் ஒளி பெற்று உய்தியடைகிறது. இதுபோன்றே, எம் உள்ளத்தில் மறைந்திருந்த திருமுருகன், உலகத்தவராகிய நாம் உய்வதற்காக வந்து உதிக்கிறான்.

முருகன் வேறு சிவன் வேறல்ல. சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. தற்புருடம், அகோரம், சத்தியோசாதம், வாமதேவம், ஈசானம் என்பவையே அவை. இவற்றோடு அதோ முகம் என்று இன்னொரு முகமும் உண்டு. இது வரலாற்றில் இரு முறை தோன்றியது என்று கூறப்படுவதுமுண்டு. ஒன்று திருப்பாற்கடலைக் கடைந்த பொழுது; மற்றையது தக்கன் யாகத்தை அழித்த பொழுது. சிவனின் ஐந்து முகங்களுடன் அதோ முகமும் சேர்ந்து திருவவதாரம் செய்தவன் முருகப்பெருமான் என்று ஞானிகள் சொல்வார்கள். உதாரணத்துக்கு இரு பாடல்கள்:

‘ஐந்து முகத்தோடு அதோமுகமும் தந்து திருமுகங்கள் ஆறாகி …’
-(கந்தர் கலிவெண்பா)
‘கந்தநம ஐந்துமுகர் தந்த முருகேச நம …’ –(கந்தபுராணம்)

அனைத்தையும் கடந்த நிலையில் இறைவனுக்கு உருவமில்லை; அருவமாக இருக்கிறான். உயிர்களுக்கு அருளும் நிலையில்; உருவம் எடுக்கிறான். அருவத்துக்கும் உருவத்துக்கும் இடைப்பட்ட ஓரு நிலையுண்டு. இது அருவுருவம் எனப்படும். ‘அருவமும் உருவுமாகி’ என்பதால் இடையிலுள்ள அருவுருவமும் உணரப்படும். இந்த மூன்று வடிவங்களும் இறைவன் கொள்ளும் திருமேனிகளாகும். இங்கே அருவம் எப்படி வடிவமாகும் என்ற கேள்வி எழலாம். காற்றுக்கு வடிவம் இல்லை. ஆயினும் அதனை நாம் உணர்கிறோம். கண்ணுக்குப் புலனாகாத நுண்ணிய வடிவில் அது உள்ளது.

கந்தபுராணம் கந்தனைப் பற்றிய நூலாயினும் சிவன் தொடர்பான செய்திகளே அதிகமாக உள்ளன. அதில் சைவசித்தாந்த உண்மைகள் பேசப்படுகின்றன. தொடக்கமும் முடிவும் இல்லாத என்றுமுள்ள பரம்பொருள் சிவபெருமான். அனைத்தும் தோன்றமுன் தொன்றிய அநாதிப் பொருள் அவன்.
சொற்களால் விளக்க முடியாத அவன் பழைமையை ‘சொற்பதம் கடந்த தொல்லோன்’ என்றும் ‘பழையோன் காண்க’ என்றும் திருவாசகம் (திருவண்டப்பகுதி) விளக்குகிறது’. ‘அநாதியாய்’ என்று கந்தபுராணம் கூறுகிறது.

பரம்பாருள் ஒன்றுதான். தன்னளவில் ஒன்றாக நின்றாலும். உலகை நோக்கி, அதனைச் செயற்படுத்தும் நிலையில் பலவாக நிற்கிறது. ‘பலவாய் ஒன்றாய்’ என்ற தொடர் இதனைக் குறிப்பதாக உள்ளது. ‘ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க’ என்ற சிவபுராண அடியும் இதனையே குறிக்கிறது.

பிரமம் என்பதற்கு மேலான ஒன்று என்பது பொருள். பரன், பரம்பொருள், என்பனவும் இதனைக் குறிக்கும் ஒரு பொருட் சொற்கள். இந்த மேலான ஒன்று சிவன், சிவம், தற்பரன் போன்ற பெயர்களாலும் சைவத்தில் போற்றப்படுகிறது. திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் ஒளிப் பிழம்பைத் திருமேனியாகக் கொண்டு அவன் காட்சியளிக்கிறான். ‘பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாக’அவன் வந்து தோன்றுகிறான்.

சோதி, ஒளி என்ற தமிழ்ச் சொற்கள் ஞானத்தைக் குறிப்பனவாகவும் உள்ளன. இருள் அஞ்ஞானத்தைக் குறிப்பது. இறைவன் ஞானம் அல்லது அறிவு வடிவானவன். ‘அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து’ என்பது திருவருட்பயன். திருவாசகம் ‘சோதியே சுடரே’ என்று இறைவனைப் போற்றுகிறது. முருகக் கடவுள் சோதி உருவாக வந்து உதித்தான் என்று கந்தபுராணம் சொல்கிறது. அவனின் திருவுருவை, ‘கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன்வந்து உதித்தனன் உலகம் உய்ய’, என்று கூறி கச்சியப்ப சிவாசாரியார் தனது கந்தபுராணத்திலே காட்டுகிறார்.

நன்றுடையானும் தீயதில்லானுமாகிய முருகன் உதித்து தீமை செய்யும் அசுர்களை அழித்தது உலகத்தவரை உய்விக்க என்பது உணரத்தக்கது. இது தொடர்பான கந்தசட்டி வழிபாட்டை மேற்கொண்டு நாமும் உய்தியடைவோமாக,

கந்த நம! ஐந்துமுகர் தந்த முருகேச நம!
………………………………