எமது குப்பிழான் கிராமத்தவர்களின் பெரும் பங்களிப்போடு ஆஸ்திரேலியா தலைநகர் கன்பராவில் நடத்தப்பட்ட திருவாசக விழாவின் தொகுப்பு.
updated 19-01-2011


மாணிக்கவாசக சுவாமிகள் வரலாறும் அவர் அருளிச்செய்த திருவாசகமும் மார்கழி மாதத்தில் சைவமக்களால் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. திருவெம்பாவை உற்சவம், திருவாசக முற்றோதல், திருவாசகவிழா, திருவாதவூரடிகள் புராணபடனம் ஆகியவை சைவ உலகில் இடம் பெறுகின்றன.

ஆஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவில் உள்ள தமிழ் மூத்தோர் சங்க மண்டபத்தில் 8-2-2010 அன்று திருவாசக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இவ்விழா பஞ்சபுராணம் ஓதப்பெற்று, தீபராதனையுடன் தொடங்கியது. கன்பரா தமிழ்ச்சங்கத் தலைவர் இரத்தினவடிவேலும் மூத்தோர் சங்கத் தலைவர் தாமோதரலிங்கமும் வாழ்த்துரை வழங்கியபின் சபையினர் சேர்ந்து சிவபுராணம் ஓதினர். அடுத்து, கானாமிர்த இசைப்பள்ளி மாணவர்களின் திருவாசகப் பாடல்களும், மாணிக்கவாசக சுவாமிகளும் திருவாசகமும் குறித்த மாணவர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றன. இவையும், இதன்பின் இசை அறிஞர் நால்வர் பாடிய திருவாசகப் பாடல்களும் உள்ளத்தை உருக்குவனவாகவும் செவிக்கு உணவாகவும் அமைந்தன.


தலைமையுரை ஆற்றிய சித்தாந்தரத்தினம் கலாநிதி க. கணேசலிங்கம் அவர்கள் திருவாசகத்தின் சிறப்பினையும் பெருமையினையும் பலவாறு விளக்கினார். படிப்பவர் உள்ளத்தை உருக்கி பக்தியை விதைக்கும் பான்மை, கீழான நிலையிலுள்ளவரையும் ஆன்மீக நெறியில் மேல்நோக்கி எடுத்துச் செல்லும் தன்மை, ஆகமத்துக்கு முன்னிடம் கொடுத்து இறைவனை எம் அருகில் காட்டும் மாண்பு, இன மொழி மானம் பேணும் முறைமையும் தேவையும், மெஞ்ஞான விஞ்ஞானக் கருத்துக்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தார். பெருமைமிக்க எமது சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் நாமும், குறிப்பாக எமது எதிர்காலச் சந்ததியினரும், அறிந்து பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் இவ்விழாவைத் தான் ஒழுங்கு செய்ததாகவும் கூறினார்.


அடுத்து, திரு திருவருள்வள்ளல் அவர்கள் ‘Inspiration from Thiruvasakam’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசினார். திருவாசகம் உலகம் தழுவிய அன்புநெறியைக் காட்டுவதையும், ஜி. யு. போப் போன்ற உலக அறிஞர் அதனைப் படித்து மெய்மறந்து உருகியதையும் விளக்கி, அதன் பெருமையையும் சிறப்பையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, 'புண் சுமந்த பொன்மேனி' என்ற தலைப்பில் திருமதி திருநாவுக்கரசு அவர்கள் உரையாற்றினார்கள். மாணிக்கவாசக சுவாமிகள் மண்சுமந்த கதையைக் கூறி, தொடர்புடைய திருவாசகப் பாடல்களை மனமுருகப் பாடி, நல்ல கருத்துக்களைச் சொன்னார்கள். நன்றியுரை நவின்ற கலாநிதி ஜெயசிங்கம் அவர்கள் பயனுள்ள இந்த விழா ஆண்டுதோறும் நடைபெற வேண்டுமெனக் கூறினார்.

விழா முடிவில் எதிர்பாராத நிகழ்ச்சியாக, கன்பரா தமிழ்ச்சங்கத் தலைவர் இரத்தினவேல் அவர்கள், ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக நடைபெறும் இவ்விழாவை ஒழுங்கு செய்த கலாநிதி கணேசலிங்கத்துக்கும் அவருக்கு உறுதுணையாக நின்ற திருமதி யோகேஸ்வரிக்கும் மலர்ச்செண்டு வழங்கி அவர்களின் பெரும்பணியைப் பாராட்டினார். இதன் பின்னர், வந்திருந்த அன்பர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

-'அருள்'