என் இனிய நண்பனுக்கு என் இறுதி அஞ்சலி.

திரு கந்தையா செல்வகுமார்.


செல்வகுமார் என்று சொன்னால் சின்ன பிள்ளைக்கு கூட தெரியும் அவர் யாரென்று. அவரின் கம்பீரமான தோற்றமும், எந்த பொது விடயங்களிலும் முன்னுக்கு நிக்கும் சுபாபமும் முக்கிய காரணம் என்று சொல்வதில் மிகையாகாது. வயது வேறுபாடின்றி எல்லோருடனும் அன்பாக பழகும் அவரின் சுபாவம் எல்லோருக்கும் பிடிக்கும். தவறை தவறென்று நேருக்கு நேர் சொல்லும் அவரது துணிச்சல் குற்றம் செய்தவரை கலங்க வைத்தது. சரியோ தவறோ மனதில் நினைத்ததை என்றுமே சொல்ல தயங்கியதில்லை. அதனால் சிலருக்கு அவரை பிடிக்காவிட்டாலும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யமாட்டார். எனக்கும் செல்வகுமாருக்கும் 8 வயது வித்தியாசம் நான் சிறு வயதில் இருக்கும் போது செல்வகுமாரை பற்றிய கற்பனையில் அவரை பெரிய சண்டியனாகவும், அவரை கண்டால் பயப்படும்படியான நிலையே எனக்கு இருந்தது. ஏனெனில் அவர் எல்லா ஊர் பிரச்சினைகளிலும் முன்னுக்கு நிற்பதால் அப்படி ஒரு தோற்றப்பாட்டை ஊரில் உருவாக்கியிருந்தார்கள். ஆனாலும் நான் சிறுவயதில் இருக்கும் போது ஒரு நாள் கூட உரத்து பேசியதில்லை ஆனாலும் சின்ன பயம் என்னுள் இருந்தது. நான் O/L முடித்து வாலிபனாக குப்பிழான் சந்தி மதகில் உட்கார்ந்து இருக்கும் போது தான் செல்வகுமாரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. நான் கற்பனை செய்த செல்வகுமாருக்கும் உண்மையான செல்வகுமாருக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருந்ததை அன்று தான் அறிந்து கொண்டேன். உண்மையில் தோற்றத்தில் பெரிய சண்டியனாக காட்டிக்கொண்டாலும் மிக பயந்த சுபாவமும், மனச்சாட்சிக்கு கட்டுப்படுகின்ற சுபாவமும், பிழை என்றால் பிழை என்று ஒத்துக் கொள்ளும் நல்ல குணமும் இருந்ததை அறிந்து கொண்டேன். மற்றவர்கள் சொல்வது சரி என்றால் ஏற்றுக்கொள்ளும் மனப்பாண்மை எனக்கு அவர் மீது ஒரு பாசத்தையும், அபிமானத்தையும் ஏற்படுத்தியது. நாளடைவில் நாங்கள் நல்ல நண்பர்கள் ஆனோம். செல்வகுமாரை வா, போ என்று தான் அழைப்பேன். இனி என்றுமே கிடைக்க பெறாத அன்றைய இனிமையான நாட்கள் என் மனதில் விம்பமாக தெரிகின்றது அவைகளை எண்ணும் போது என் நெஞ்சு கனக்கிறது. அந்த நாள் திரும்ப வராதா என்று மனதில் ஒரு அங்கலாய்ப்பு. நண்பன் சின்னண்ணையின் தலைமையில் குப்பிழான் சந்தி, பஸ் தரிப்பிடம், அரச மரத்தடி போன்றவற்றில் வட்ட மேசை மகாநாடு, சதுர மேசை மகாநாடு என்று எங்களுக்குள் பல விடயங்களை பேசிக்கொள்வோம் பல சந்தர்ப்பங்களில் அவரை நக்கல் அடிப்பார்கள் ஆனால் செல்வகுமாரோ கீழே குனிந்து ஒரு பார்வை பார்த்து என்னவாதல் கதையுங்கோடா என்று சொல்லி கேட்டுக்கொண்டு இருப்பார். ஆனால் சீனனோடு மட்டும் முரண்டு பிடித்து சண்டைக்கு நிற்பார். இவர்கள் இருவரின் சண்டையை பார்க்க எங்களுக்கு குசியாக இருக்கும். நல்லதோ, கெட்டதோ செல்வகுமார் பங்கு பற்றாத நிகழ்வு ஒன்றும் இல்லை என்று சொல்லுமளவுக்கு செயல்பட்டுள்ளார். தனக்கு ஏன் வம்பு என்று சொல்லி ஒதுங்கும் சுயநலம் அவரிடம் எப்போதும் இருந்ததில்லை. 1988 ஆண்டு காலப் பகுதியில் எமக்கான ஒரு முக்கிய பணி காத்துக் கிடந்தது. குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையமானது எமது சமூக சிந்தனையுள்ள மூதாதையினரால் எங்களுக்கு தரப்பட்ட ஒரு பரிசு. நான் சிறு வயதில் இருக்கும் போதே பத்திரிகை படிக்கும் ஆர்வம் இருந்தது. அந்த அறிவு பசியை போக்கியது விக்கினேஸ்வரா சனசமூக நிலையமாகும். ஆனாலும் 1986 ஆண்டு காலப்பகுதியில் சனசமூ நிலையத்தை பெரிதாக கட்டுகின்றோம் என்று சொல்லி இருந்ததையே முற்றாக அழித்து விட்டு அரை குறையாக கட்டியதோடு சம்பந்தபட்டவர்கள் விட்டு விட்டு போய் விட்டார்கள். பல காலமாக இயங்காமல் அப்படியே இருந்தது. 1988 ஆம் ஆண்டு புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டு சனசமூக நிலையத்தை இயங்க வைப்பதற்கு முயற்சியை மேற்கொண்டார்கள்.வாசிப்பு கூடத்தையாதல் கட்டி முடிப்பது என்று முடிவு செய்யப்பட்டு எல்லா நிர்வாக உறுப்பினர்களும் சேர்ந்து நிதி சேகரிப்பில் ஈடுபட தொடங்கினோம். ஒவ்வொரு வீடு வீடாக சென்று பங்களிப்பு நிதியை ஒரு கொப்பியில் எழுதினோம் எழுதியதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று மற்றைய நிர்வாகிகள் ஒதுங்கி விட்டார்கள். எழுதுவது இலகு அந்த காசை வாங்கி முடிப்பது சாதாரண விடயமல்ல. பல தரம் வீட்டை தட்ட வேண்டியிருக்கும். வெளிநாடு என்றால் கதவை திறக்க மாட்டார்கள் அல்லது நம்பரை பார்த்திட்டு தொலைபேசியை எடுக்கமாட்டார்கள்.அப்போது நானும் செல்வக்குமாரும் சாதாரண உறுப்பினர்கள் தான். எந்த வித பொறுப்புக்களும் தரப்படவில்லை. ஒரு நாள் செல்வகுமார் என்னிடம் சொன்னார் உவங்கள் காசு சேர்க்கிற மாதிரி தெரியவில்லை வா என்னுடன் நானும் நீயும் எழுதிய காசை வாங்குவோமென்று. காலை 8 மணி தொடக்கம் ஒவ்வொரு வீடாக தட்டுவோம் சிலர் தவணை சொல்வார்கள். சிலர் அலைக்கழிய வைப்பார்கள். நான் ஏதேனும் கோவப்பட்டு கதைக்க வெளிக்கிட்டால் உடனே செல்வகுமார் என்னையும் அமைதிப்படுத்தி பக்குவமாக கதைப்பார். இப்படி கஸ்டப்பட்டு 25,000 ரூபா சேர்த்திட்டோம். அன்றைய 25,000 ரூபா என்பது பெரிய தொகை. அப்போது வெளிநாட்டில் வசித்தவர்களின் தொகையும் குறைவு, அவர்களிடம் பணத்தை பெறுவதும் இயலாத காரியமாக தான் இருந்தது. ஒவ்வொருவரினதும் சொந்த உழைப்பில் கொடுத்த தொகை தான் அது. அந்த பணத்தைக் கொண்டு குறை வேலைகளை முடித்தோம். கதவு யன்னல்களை போடுவதற்கு பெருமளவு நிதி தேவைப்பட்டது எம்மிடம் போதிய நிதி இருக்கவில்லை, என்ன செய்வோம் என்று இருவரும் யோசித்தோம் திடீரென செல்வகுமார் வாடா சிவராசாவோடை கதைப்போம் என்று. சிவராசா என்பவர் தச்சு வேலை செய்யும் ஆச்சாரி. செல்வகுமார் சிவராசாவிடம் சென்று இதற்கு நீங்கள் தான் உதவி பண்ணவேண்டும் என்று அழுகிற மாதிரி கதைத்தார். செல்வகுமாரின் கதையை கேட்டு பரிதாபப்பட்ட சிவராசா சொன்னார். தம்பியவை எனக்கு எந்த கூலியும் வேண்டாம் நீங்கள் மரத்தை தந்தால் போதும் நான் எல்லாத்தையும் உங்களுக்கு செய்து தாறேன் என்றார். பெயின் அடிக்கிற வேலைகளை சில நண்பர்களின் உதவியுடன் செய்து முடித்தோம். வாசிகசாலை இயங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தது செல்வகுமார் தான். இன்று 25 வருடங்கள் கடந்துவிட்டது செல்குமாரின் உழைப்பால் உருவான அந்த வாசிகசாலை தான் இன்றும் இயங்கிக்கொண்டு இருக்கிறது. வாசிகசாலைக்கு சேர்த்த பணத்தை எந்தவிதத்திலும் வீண்விரயமாக்க கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம். அதனால் வெளியில் ரீ குடிப்பதுமில்லை. காசு சேர்க்க வெயிலில் அலைந்து விட்டு செல்வகுமார் வீட்டை போவோம் அங்கே அவரின் துணைவியார் புன்னகையோடு எங்களை வரவேற்று தேனீர் தருவார். வீட்டு வேலைகளை விட்டுவிட்டு ஊர் தொண்டுக்கு பறப்பட்டு விட்டார் என்று என்றுமே கோவித்ததில்லை. செல்வகுமாரின் ஒவ்வொரு செயலுக்கும் பக்கபலமாக இருந்தது அவரின் துணைவியார் தான். வெளிநாடு வருவதற்காக ஜலண்ட் லொட்ஜில் நாங்கள் ஒன்றாக தங்கி இருந்தோம். செல்வகுமார் ஒவ்வொரு கதைகளை சொல்லி எல்லாரையும் சிரிக்க வைப்பார். அதன் பின்னர் அவருடன் தொடர்புகள் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 2 வருடங்களாக அடிக்கடி பேசிக்கொள்வோம். பேசும் போது ஊர் அபிவிருத்தி சுடலை அபிவிருத்தி பற்றி அடிக்கடி கதைப்பார். மாயனத்தின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று வரைபடங்களை அனுப்பி அன்புத் தொல்லை செய்வார். அவரின் தனிப்பட்ட முயற்சியால் நண்பர்கள் சிலருடன் இணைந்து மயானத்தின் தகனக்கிரியை செய்யும் இடத்தை புதுப்பொலிவுடன் அமைத்துக் கொடுத்தார்.அதே நேரம் தமது குடும்பத்தின் மீதும் அதீத அன்பு கொண்ட அவர் பிள்ளைகளை கண்டிப்புடன் ஒழுக்க சீலர்களாக வளர்த்தார். 2 வாரங்களுக்கு முதல் கதைக்கும் போதும் தனது வேதனையை மறைத்து உற்சாகமாகத்தான் கதைத்தார். கடந்த வாரமும் என்னோடு கதைக்க முயற்சித்தார். வேலைப்பழு காரணமாக பேச முடியாமல் போய் விட்டது. அவர் என்னவேன் சொல்ல நினைத்தாரோ என்று எண்ணி என் நெஞ்சம் பதறுகிறது. அவர் என்னோடு பழகிய காலத்தை பற்றி தெரிந்தவைகளை தான் நான் குறிப்பிட்டேன். ஆனால் அவர் அதை விட எமது ஊருக்கு பல நல்ல விடயங்களை செய்துள்ளார். தான் பிறந்த மண் மீது பற்றும் பாசமும் கொண்ட அந்த உயர்ந்த மனிதன் இன்று நம்மோடு இல்லை ஆனாலும் அவரின் கனவுகள் ஆசைகள் எல்லாம் எங்களின் எதிர்கால பணியாக கண் முன்னே வியாபித்து இருக்கின்றது. மீண்டும் ஒரு மனிதப்பிறவி ஒன்று இருக்குமானால் மீண்டும் அதே மண்ணில், அதே மதகில், அதே அரச மரத்தடியில் நாங்கள் ஒன்றாக கதைகள் பலபேசி கும்மாளம் அடிக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தனை செய்யும் அதே வேளை எனது இனிய நண்பன் செல்வகுமாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். அவரின் இழப்பினால் துயரக்கடலில் மூழ்கி இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

அன்பு நண்பன்
ந.மோகனதாஸ்