குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய பிரதான மண்டப திறப்பு விழா பற்றிய சிறப்புக் கட்டுரை. updated 16-04-201222 ஆண்டுகளுக்கு முன்பு முற்றாக அழிக்கப்பட்ட எமது பாடசாலை பிரதான மண்டபம் மீண்டும் எமது மக்களின் பாரிய பங்களிப்போடு புதுப் பொலிவுடன் எழுந்து நிற்கின்றது. இதுவே பல ஆண்டுகளுக்கு பிறகு பல லட்சங்கள் செலவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டம் ஆகும். இனி வரும் காலங்களில் மேலும் பல திட்டங்கள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டாலும் இதுவே முதன் முதலில் முடிக்கப்பட்ட வேலைத்திட்டமாகும். எமது மக்கள் கல்விக்கு கொடுக்கும் முக்கியம் இதனூடு வெளிப்படுத்தப்படுகின்றது.15-04-2013 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு திறப்பு விழா நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக திரு இ.இளங்கோவன் (கெளரவ செயலாளர் வடமாகாண ஆளுனர் செயலகம்) அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். ஆரம்ப நிகழ்வாக கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது. நான்கு நாயன்மார்களின் திருவுருவ படங்கள் மற்றும் அவர்களால் அருளிச் செய்யப்பட்ட தேவார திருமுறைகள் போன்றன சமயப் பெரியார்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலம் செல்லும் வழியில் பொதுமக்கள் கும்பம் வைத்து வரவேற்று தமது அன்பை பகிர்ந்து கொண்டார்கள். ஊர்வலம் சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலயத்தை சென்றடைந்து அங்கும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது. அங்கு வைக்கப்பட்ட பிள்ளையார், இலக்சுமி, சரஸ்வதி திருவுருவப்படங்கள் பாடசாலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கும் வழிபாடுகள் இடம்பெற்றது. இந்த நிகழ்வுகள் குப்பிழான் தனி சைவ கிராமம் என்பதை பறைசாற்றி நிற்கின்றது. சிறிலங்கா தேசியக்கொடி, பாடசாலை கொடி, நந்திக் கொடி என்பன ஏற்றப்பட்டு அதன் பின்னர் திரு பா.உபேந்திரன் அவர்களால் பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டது. இந்த பெயர் பலகையில் இடம்பெற்ற விடயங்கள் பின்வருமாறு 15-04-2013 அன்று குப்பிழான் மக்களால் அமைக்கப்பட்டு பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்படுகின்றது. இதற்கு அனுசரணை வழங்கியவர்கள் குப்பிழான் விக்கினேஸ்வரா உதவும் கரங்கள் சுவிஸ், குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா, திரு கந்தையா கிருஸ்ணர். பிரதம விருந்தினர் அவர்களால் நடா வெட்டி பாடசாலை பிரதான மண்டபம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த மண்டபத்திற்கு கிருஸ்ணர் மண்டபம் என்ற பெயர் இடப்பட்டது.


சிறப்பு விருந்தினர்களாக திரு க.சந்திரராசா(கல்விப் பணிப்பாளர் வலிகம் வலயம்), திருமதி ரதி நகுலேஸ்வரன் (பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வலி தெற்கு) அவர்களும் கெளரவ விருந்தினராக திரு.சி.கந்தசாமி (பிரதிக் கல்விப் பணிப்பாளர் வலிகாமம், உடுவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆரம்ப நிகழ்வுகள் திரு ந.குணரத்தினம் (அதிபர் குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்) அவர்களின் தலைமையிலும், விழா நிகழ்வுகள் சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் (தலைவர் பாடசாலை அபிவிருத்தி சபை) அவர்களின் தலைமையிலும் இடம்பெற்றது. அவர் தனதுரையில் பாடசாலை சொத்து தெய்வ சொத்து இதனை கண்ணை இமை காப்பது போல பேணி பாதுகாக்க வேண்டும், இந்த பாடசாலை சொத்தை அபகரிப்பவர்கள் அல்லது இழப்புக்களை ஏற்படுத்துபவர்கள், அதனை தவறான வழியில் பயன்படுத்துபவர்கள் இறைவனின் தண்டனைக்கு உள்ளாவார்கள், இந்த மண்டபத்தை திறந்து வைக்கும் போது நான் எனது பெண் பிள்ளைக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது என்று குறிப்பிட்டார். ஆசியுரைகளை சிறிலசிறி சோமசுந்தர பராமாச்சாரியார்( நல்லை ஆதினம்) அவர்கள் பராமாச்சாரியார் யாக்கிரத சைதன்ய சுவாமிகள்(சின்மாய) அவர்கள் வழங்கினார்கள். அன்மீக குருமார் தமது உரையில் குப்பிழான் கிராமம் காசிவாசி செந்திநாதையர் பிறந்து வளர்ந்த பூமி, சைவத்தையும் தமிழையும் போற்றி வாழுகின்ற கிராமம். ஏனைய கிராமங்களில் காண முடியாத சிறப்பை குப்பிழான் கிராமத்தில் கண்டிருக்கின்றோம். குப்பிழான் கிராமத்தில் நடைபெறும் சகல நிகழ்வுகளும் சமய பின்னணியை கொண்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் இன்றைய நிகழ்வும் சமய நயன்மார்களை கெளரவித்து, நாயன்மார்களை ஊர்வலமாக கொண்டு வந்த நிகழ்வு இதற்கு நல்ல உதாரணம், குப்பிழான் மக்கள் தொடர்ந்து சைவத்தையும் தமிழையும் காக்க முன்வர வேண்டும் என்றார்கள். திரு ந.சிவலிங்கம் (உப தலைவர் பாடசாலை அபிவிருத்தி சபை)அவர்களால் வரவேற்புரை வழங்கப்பட்டது. கலாநிதி ஆறுதிருமுருகன் (தலைவர் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம், சிவபூமி) அவர்களால் வாழ்த்துரை வழங்கப்பட்டது. அவர் தனதுரையில் இந்த பாடசாலை கட்டிடம் குப்பிழான் மண்ணின் மைந்தர்களால் 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு அன்பளிப்பாக இந்த பாடசாலைக்கு வழங்கப்படுகின்றது இந்த கட்டிடத்தை குப்பிழான் மாணவர்கள், இளைஞர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இதற்கு உதவி செய்தவர்களை எந்த காலத்திலும் மறக்காதிருக்க வேண்டும், எந்த நோக்கத்திற்காக அவர்கள் கட்டிக் கொடுத்தார்களோ அதனை நீங்கள் முழுமையாக பயன்படுத்தியும், அதனை சிறப்பான முறையில் பேணியும், கட்டிடத்தை கட்டி வழங்கியவர்கள் மகிழ்ச்சி படும்படியாக பராமரிக்க வேண்டும் என்றார். அதன் பின்னர் சிறப்பு பேச்சுக்கள் இடம்பெற்றது.பாடசாலை அபிவிருத்தியில் வெளிநாட்டவர் பங்களிப்பு என்ற தலைப்பில் திரு பா.உபேந்திரன்(பழைய மாணவர், செயலாளர் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம்) அவர்களும், குப்பிழான் கிராமத்தின் சைவ சமய பாரம்பரியம் என்ற தலைப்பில் இ.பேரின்பநாயகம் ( முன்னாள் நீதி அமைச்சின் ஆலோசகர்) அவர்களும், எமது பாடசாலை மீழ் உருவாக்கம் என்ற தலைப்பில் திரு தி சசிதரன் (செயலாளர் பாடசாலை அபிவிருத்தி சபை) அவர்களும் உரையாற்றினார்கள். முன்பள்ளி மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். இறுதியாக திரு ரவீந்திரநாதன் (பொருளாளர் பாடசாலை அபிவிருத்தி சபை) அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு விழா முற்றுப்பெற்றது. இந்த நிகழ்வில் பங்கு பற்றிய சகலருக்கும் மதிய போசனம் திரு வைரவநாதன் அவர்களின் ஒருங்கிணைப்பில் வழங்கப்பட்டது.இந்த பாடசாலை மண்டபத்தை அமைக்கும் பணி 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதும் பல்வேறு பிரச்சினைகள், தடைகள், ஒத்துழையாமை, நிதிப் பிரச்சினை போன்றவைகளால் 6 வருடங்கள் இதனை கட்டி முடிப்பதற்கு தேவைப்பட்டது. கட்டிடம் கட்டி முடிந்தால் மட்டும் பாடசாலையில் சிறந்த கல்வி கிடைத்துவிடாது. பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு இன்னும் பல காரணிகள் தடையாக இருக்கின்றன. அவைகளையும் அடுத்த கட்டமாக களைவதற்கு நாம் எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் நாம் பட்ட கஸ்டங்கள், செலவிடப்பட்ட நிதி, மன உழைச்சல்கள், எமது தளராத முயற்சிகள் போன்றவற்றிற்கு உண்மையான பலன் கிடைக்கும்.

இந்த கட்டிடத்தை அமைப்பதற்கு சுவிஸ் வாழ் மக்கள் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது. சிலர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இறுதி நேரத்தில் எம்மை ஏமாற்றிய போது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த நேரத்தில் கை கொடுத்தவர்கள் சுவிஸில் வாழும் நல்ல உள்ளம் கொண்ட மேன் மக்கள் தான். நாம் வீடு தேடி சென்ற போது அன்பாக வரவேற்று பல ஆயிரம் சுவிஸ் பிராங்குகளை வாரி வழங்கினார்கள். அதை விட பலர் நாம் கேட்காமலேயே நிதிகளை வாரி வழங்கினார்கள். நாம் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்ற போது அவர்கள் பெரிய வசதி படைத்தவர்களாக தெரியவில்லை. ஆனால் அவர்களின் மனம் விசாலமானதாக இருந்தது. பிரித்தானியாவை பொறுத்தவரை பல வசதி படைத்த மக்கள் வாழந்தாலும் அவர்கள் உதவி செய்ய மறுத்து விட்டனர். சில வீடுகளுக்கு தொலைபேசியில் அறிவித்து விட்டு செல்ல முடியாது ஏனெனில் அவர்கள் கதவு திறக்க மாட்டார்கள். அதனால் அதிரடியாக சென்று கதவை தட்டுவோம் ஆனாலும் சிலர் சாட்டுக்களை சொல்லி தப்பி விடுவார்கள். நாம் யாரிடமும் இவ்வளவு தொகை தான் தர வேண்டும் என்று கேட்கவில்லை. நோர்வேயில் குறிப்பிட்டவர்களிடமும் அணுகியிருந்தோம். பிரித்தானியாவில் பெரும்பாலானவர்களை அணுகியிருந்தோம் ஆனால் சுவிஸில் குறிப்பிட்ட உறவுகளை தான் அணுகியிருந்தோம். அவர்களுக்கும், நிதி உதவிகளை வழங்கிய மற்ற பெருமக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். காலத்தினால் செய்த உதவி ஞாலத்திலும் பெரிதாக போற்றப்படும்.

அதே நேரம் ஊரிலும் சம்பந்தப்பட்டவர்களிடம் போதிய ஒத்துளைப்பை பெறமுடியாமல் கால விரயங்களை சந்திக்க நேரிட்டது. பாடசாலை மண்டபத்தை அமைப்பதற்கு அரசாங்க அனுமதி வேண்டும் அதை பெற்றுத்தரவேண்டியவர் கடைசி வரை பெற்றுத்தரவில்லை, அதனால் ஒரு வருடம் கால விரயமானது. சில நண்பர்களின் உதவியுடன் அந்த அனுமதியை பெற்றோம். தாய் ஒரு குழந்தையை பெறுவதற்கு எப்படி பிரசவ வலியால் துடித்தாளோ அதே வலியை நாம் சந்தித்திருக்கின்றோம். ஆனாலும் குழந்தை பிறந்தவுடன் அவள் அடையும் மகிழ்ச்சியை தான் இந்த கட்டிடம் கட்டி முடித்த போது நாமும் உணர்கின்றோம். சில விடயங்களை வெளிப்படுத்தியதற்கு காரணம் ஊரில் உள்ளவர்கள் நாம் எதற்காக கஸ்டப்பட்டு இந்த மண்டபத்தை கட்டிக்கொடுத்தோமோ அந்த நோக்கத்தை அடைவதற்கு பல மடங்கு முயற்சி செய்ய வேண்டும். இன்னமும் பல கசப்பான சம்பவங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் வெளிப்படுத்துதல் நல்லதல்ல.

முக்கியமான ஒருவரின் ஒத்துளைப்பு கிடைக்கப்பெறாமையினால் இன்னும் மிகச் சிறப்பாக நடைபெற வேண்டிய இந்த நிகழ்வு ஒரு சாதாரண விழாவாக நடைபெற்றது மிகவும் கவலை அளிக்க கூடிய ஒரு விடயமாகும். ஆனாலும் காலம் இதற்கு ஒரு பதில் சொல்லும் என்று நம்புகின்றோம்.