நாவலர் பணியில் நவாலியூர்ப் புலவர் - சித்தாந்தரத்தினம்  கலாநிதி க. கணேசலிங்கம்

 

தன்னலமற்ற பணிகளால் தமிழையும் சைவத்தையும் அழியாமல் காத்தவர் தவத்திரு ஆறுமுக நாவலர் அவர்கள். அன்னியர் ஆட்சியில் மிசனரிமாரின் மதமாற்ற முயற்சிகளைத் தடுக்கவும் தமிழைக் காத்து வளர்க்கவும் அவர் மேற்கொண்ட பணிகள் பல.

நாவலரை உச்சிமேற் கொண்டு போற்றி, அவர் வழியில் பல பணி செய்தவர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர். அவரின் தேனினும் இனிய தீந்தமிழ்ப் பாடல்கள் சிறுவரையும் முதியோரையும் கவர்ந்தன. சைவத்தமிழ் உணர்வை ஊட்டி மொழிக்கும் சமயத்துக்கும் ஆக்கம் அளித்தன.

ஈழத் தமிழ் மக்கள் இன மொழி மான உணர்வின்றி, அன்னிய மோகத்தில் தமது சமயம், மொழி, பண்பாடு ஆகியவற்றை மறக்கத் தொடங்கிய காலத்தில் பிறந்தவர் ஆறுமுக நாவலர். அவரின் அரிய பணிகள் தமிழ்ப்பணி, கல்விப்பணி, சமுதாயப்பணி, எழுத்துப்பணி, பதிப்புப்பணி என்று பலவாறு விரிந்தன. அவரின் ஆற்றல் மிக்க பேச்சும் எழுத்தும் பிறமத கண்டனங்களும் மக்களைக் கவர்ந்து, மறுமலர்ச்சியைக் கூட்டின. இவற்றால் ஈர்க்கப்பட்ட பலர் அவர் வழியில் பலன் கருதாப் பணி செய்யத் தொடங்கினர்.

நாவலரைத் தொடர்ந்து ஒரு ஞானபரம்பரை உருவாகி இன்றுவரை பணி செய்து வருகிறது. காசிவாசி செந்திநாதையர், வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை, சி. வை. தாமோதரம்பிள்ளை, குமாரசாமிப் புலவர், கதிரைவேற்பிள்ளை, சங்கர பண்டிதர் என்று பல அறிஞர்கள் தோன்றி சைவத்தமிழ்க் காவலர்களாக விளங்கினர். இவர்கள் வரிசையில் வந்தவர் சோமசுந்தரப் புலவர் அவர்கள்.

செந்தமிழ் மொழி சிதையாமல் பேணப்பட வேண்டும் என்பது நாவலரின் பேரவா. புலவரும் தமிழைப் பேணவேண்டும் என்பதைத் தன் கவிகைளில் வலியுறுத்துகிறார்.

‘ செந்தமிழ் மக்களே வாரீர் - எங்கள்
                                தெய்வத் தமிழ்மொழிச் சீரினைத் தேரீர்
                அந்தமில் எம்மொழி மாதா – படும்
                                அல்லலைத் தீர்க்க அறிவுவ ராதா?’

கவிதைகளில் இருந்த தமிழை வசன நடைக்குக் கொண்டு வந்து பாமரரும் அறியச் செய்தவர் ஆறுமுக நாவலர். தமிழில் எழுதும் பொழுது இயன்றவரை தமிழ்ச் சொற்களையும் இயலாத பொழுது பழக்கத்திலுள்ள அயற்சொற்களையும் பாவிக்க வேண்டும் என்பது நாவலரின் அறிவுரை. இதற்கமையச் சோமசுந்தரப் புலவரின் எழுத்தும் இருந்தது. பிறமொழிச் சொற்கள் கலவாத உரைநடையை அவர் மேற்கொண்டார்.

சிறுவர் முதல் பெரியோர்வரை படித்து, சுவைத்து, பயனடையக் கூடிய பல தீந்தமிழ்ப் பாடல்களை சோமசுந்தரப் புலவர்; எழுதினார். ஆயினும் அவரின் பாடல்கள் என்றவுடன், சிறுவருக்காக அவர் எழுதிய செந்தமிப் பாடல்களே முதலில் நினைவுக்கு வரும். கத்தரி வெருளி, ‘ஆடிப்பிறப்பு என்ற பாடல்கள் அனைவரையும் கவர்ந்தவை. அவை பின்வரும் சந்தக் கவிதைகளுடன் தொடங்குகின்றன்

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
                                காவல் புரிகின்ற சேவகா! – நன்கு-
                                காவல் புரிகின்ற சேவகா!
மெத்தக் கவனமாய் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்? – உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்?’

               

‘ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

                                ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!
                கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம்

                                கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

மனத்தைக் கவரும் இத்தகைய பாடல்கள் சிறுவர் மனத்தில் ஆழப்பதிந்து தமிழுணர்வை ஊட்டின. தமிழில் அவர்களை ஈடுபடச் செய்தன.

கருணை வடிவான கடவுளைக் கொண்ட சைவத் திருக்கோயில்கள் சிலவற்றில் உயிர்ப்பலி நடைபெற்று வந்தது. இதனை நிறுத்துவதற்குப் பெருமுயற்சி எடுத்தவர் நாவலர் பெருமான். நல்லூர் கந்தசாமி கோயிலில் தேர் இழுக்கமுன் ஆடு வெட்டும் வழக்கம் இருந்தது. ஆட்டைப் பலிகொடாது விட்டால் தேர் சரியாக ஓடாதென்று சிலர் வாதிட்டனர். இதனை வன்மையாக எதிர்த்து உயிர்ப்பலியை நிறுத்திய நாவலர் பின்வருமாறு கிண்டலாக எழுதினார்.

எத்தனையோ ஆயிரம் பேர் ஏறிய பிரமாண்ட புகைக்கப்பல்கள், பலிகொடாதொழியவுஞ் சமுத்திரத்திலே நெடுந்தூரம் ஓடி இடையூறு ஒரு சிறிதும் அடையாது திரும்புகின்றனவாம். ….. இவ்வியாழ்ப்பாணத்தில் இவ்வொரு சிறுதேரோ பலிகொடாதொழியின் ஓடி நிலைக்கு வாராதாம்.’

நாவலரின் முயற்சியால் உயிர்பலி பல கோயில்களில் நிறுத்தப்பட்டாலும் பின்னரும் தொடர்ந்தது. இதனைத் தடுத்து நிறுத்த சோசுந்தரப் புலவரும் அயராதுழைத்தார். கோயிலிலே ஆடுகள்; கோழிகளைக் கொண்டுபோய் வெட்டும் ஈனச்செயலைச் சாடினார். வெட்டப்பட்டுத் துடிதுடித்துக் கதறி இறக்கும் ஆடொன்றின் பெருந்துயரை தனது பாடல்களின் மூலம் விளக்குகிறார். படிப்பவரின் உள்ளத்தை உருக்கி இரக்க உணர்வைக் கூட்டும் இப்பாடல்கள் பெற்ற பிள்ளை வெட்டப்படுவதை அறி;ந்த  தாய் ஆடு கதறுவது போல் அமைந்துள்ளது. உதாரணத்துக்கு ஒன்று வருமாறு:

காலிலொரு பாவி கழுதிலொரு மாபாவி
கோலியிழுக்கக் கொடும்பாவி வெட்டினனே.’

இளமைக் காலத்திலேயே புலவர் கைமாறு கருதாத கல்வித் தொண்டை மேற்கொண்டார். தமிழ் இலக்கியமும் சைவசித்தாந்தமும் இலவசமாகப் படிப்பித்தார். கலித்தொகை, திருக்குறள், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், கந்தபுராணம், திருக்கோவையார் முதலிய நூல்கள் அவரது வகுப்புக்களில் இடம் பெற்றன. படிக்கும் மாணவருக்கு உணவு வசதியும் செய்து கொடுக்கப் பட்டது. இவையும் நாவலர் வழியில் அவர்செய்த பணிகளாகும்..

எந்த மதத்திலும் கிரியைகள், புராணக் கதைள், தத்துவக் கருத்துக்கள் என்பவற்றைக் காணலாம். கிரியைகளும் புராணக்கதைகளும் இடத்துக்கிடம், காலத்துக்குக் காலம மாறுதலடையலாம். ஆனால் தத்துவக் கருத்துக்கள் பொதுவாக மாறுவதில்லை மாறவும் கூடாது. ஆயினும் கிறீத்துவ சமயம் தனக்கென ஒரு தத்துவமின்றி காலத்துக்குக் காலம் மேற்குலகில் வந்த தத்துவக்  கருத்துக்களை உள்வாங்கி வளர்ந்துள்ளது. இங்ஙனமின்றி தனக்கென ஒரு தத்துவத்தைக் கொண்டு வளர்ந்தது சைவசமயம். அதன் கொள்கை விளக்கமாக அமைந்த தத்துவம் சைவசித்தாந்தம். உலக அறிஞர்களால் தமிழனின் நுண்மதியில் தோன்றிய அறிவியல் தத்துவமெனப் போற்றப்படுவது இது. (‘Saiva Siddhanta is the choicest product of the Dravidian Intellect’ – Dr. G. U. Pope)

பெருமை மிக்க தமது அறிவியல் தத்துவத்தை சைவமக்கள் அறியாமல் இருப்பது கவலையளிப்பது. அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துக்கள் கொண்ட அன்னிய மதத்தவர் சைத்தை இழித்துரைத்தபோதும் அதனைக் கண்டும் காணாமல் சைவர்கள் இருப்பது வேதனைக்குரியது வெட்கக்கேடானது. இந்த நிலை நாவலர் காலத்திலும் இருந்தது புலவரின் காலத்திலும் இருந்தது. இதனை மாற்றி, சைவத்தமிழர்கள் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து வாழ வழிவகுத்தவர் நாவலர் பெருமான். ஆயினும் அவர் சைவசித்தாந்த விளக்கமளிக்கும் விரிவான நூல்களென்று எதனையும் எழுதவில்லை. மதமாற்றத்தைத் தடுப்பதையும் தமிழரின் இன மொழி மானத்தைப் பேணுவதையும் தனது வாழ்நாள் பணியாகக் கொண்ட நாவலருக்கு .இதற்கு நேரம் கிடைக்காமல் போயிருக்கலாம். எனினும் அவரின் சைவ வினாவிடை நூல்களிலும் பெரியபுராணப் பதிப்பில் எழுதிய உபோற்காதம், சூசனம் ஆகியவற்றிலும் சைவசித்தாந்த தத்துவம் விரவியிருப்பதைக் காணலாம்.

நவாலியூர்ப் புலவரும் தனது ‘சிறுவர் செந்தமிழ்போன்ற பாடல்களில் சைவசித்தாந்தக் கருத்துக்களைப் புகுத்தியுள்ளார். அதில் வரும் ‘அஞ்சு முகத்தவர் கொஞ்சி மகிழ்ந்திடும் ஆறுமுகப் பதுமம்என்னும் தொடர் ஒரு உதாரணம்.

சிவனுக்கு ஐந்து முகங்களுண்டு. தற்புருடம், அகோரம், சத்தியோசாதம், வாமதேவம், ஈசானம் என்பவை இவை. இதனாற் சிவன் ஐம்முகச் சிவன் என்றும் அழைக்கப்படுகிறான். இந்த ஐந்து முகங்களுடன் அதோமுகம் என்று இன்னொரு முகமும் உண்டு. சிவனின் இந்த முகங்கள் ஆறும் சேர்ந்து வந்தவன் ஆறுமுகப் பெருமான். இதனால் முருகனை அறுமுகச் சிவன் என்று அழைப்பதுமுண்டு. குமரகுருபரசுவாமிகள் தனது கந்தர் கலிவெண்பாவில், ஐந்து முகத்தோடு அதோ முகமும் தந்து திருமுகங்கள் ஆறாகிவந்தவன் முருகன் எனக் கூறி விளக்குவது சிந்தனைக்குரியது.

புலவர் எழுதிய ஒரு சிறந்த நாடக நூல் உயிரிளங் குமரன். சைவசித்தாந்தம் கூறும் இறை, உயிர், தளை (பதி, பசு, பாசம்) ஆகிய முப்பொருள் உண்மையையும், அவற்றிற்கிடையிலான தொடர்பையும் நாடக பாத்திரங்கள் மூலம் இந்நூல் விளக்குகிறது. சித்தாந்தத்தின் உயர் நூல்களான சிவஞானபோதம், சிவஞானசித்தியார் முதலியவற்றின் ஆழ்ந்த கருத்துக்களை இனிய எளிய பாடல்கள் மூலம் புலவர் உணர்த்துகிறார். உதாரணமாக அவரின் பின்வரும் பாடல் தரப்படுகிறது.

                ‘அப்பனென் அன்னையைப் பெற்றான் - பின்னர்
                அன்னையென் அப்பனை அவனியிற் பெற்றாள் 
                ஒப்பில் இருவரும் கூடி - இந்த
                உலகம் அனைத்தையும் பெற்றொழிந் தாரே..

இப்பாடல், நாடக நூலில் வரும் சுப்பிரமணிய முனிவர் என்பவர் கண்ணப்பர் என்பவருக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. இதன் பொருள் ‘எனது தந்தை என் தாயைப் பெற்றாள். தாய் என் தந்தயை இந்தப் பூமியிற் பெற்றாள். இவர்கள் இருவரும் கூடி இந்த உலகம் அனைத்தையும் பெற்றனர்என்பதாகும். இது நேராகக் காணும் கருத்தெனினும் இதன் உள்ளுறையாக தத்துவக் கருத்தொன்றும் உள்ளது. சைவசித்தாந்த நூலான சிவஞானசித்தியாரின் பாடலொன்று இக்கருத்தைக் கொண்டுள்ளது. இதுவே புலவரின் பாடலுக்கு மூலமாக அமைந்ததென நம்பலாம். சித்தியார் பாடல் வருமாறு:  

                ‘சிவம்சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும்
                உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயிர் எல்லாம் ஈன்றும்
                பவன்பிரம சாரி யாகும் பான்மொழி கன்னி யாகும்
                தவம்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியு மன்றே.

இப்பாடலின் பொருளை விளங்குதற்கு சைவசித்தாந்தம் குறித்த சிறு விளக்கம் பயனளிக்கும். சைவத்தில் மாயை என்பது உள்பொருள் அது பொய்த் தோற்றமல்ல. அதிலிருந்தே உடலும், உலகும், உலகப் பொருட்களும் தோன்றுகின்றன. அங்ஙனம் தோன்றமுன், மாயை தத்துவங்களாகத் தோன்றுகின்றன. சைவசித்தாந்தம் முப்பத்தாறு தத்துவங்கள் பற்றிப் பேசுகின்றது. இவற்றில் முதல் ஐந்து தத்துவங்களுடன் சிவன் நேராகத் தொடர்பு கொள்கிறான். அதனால் அவை சிவதத்துவம் எனப்படுகின்றன. நாதம், விந்து, சாதாக்கியம், மகேசுரம், சுத்தவித்தை என்பன அவை.

தன்னிலையில் இறைவன் சிவமாக இருக்கிறான். உயிர்களில் கருணை கொண்ட நிலையில் சிவனில் பிரிவில்லாத, அவனின் ஆற்றலாகிய சக்தி, பிரிந்து வெளிப்படுகிறது. ‘சிவம்சத்தி தன்னை ஈன்றநிலை இது. இச்சத்தி சாதாக்கிய தத்துவம் என்னும் மாயா தத்துவத்துடன் கூட சதாசிவன் தோன்றுகிறார். சத்திதான் சிவத்தை ஈன்றுஎன்று இது குறிக்கப்படுகிறது. இங்கு சொல்லப்படும் சிவம் சதாசிவமாகும். திருக்கோயிலில் காணும் சிவலிங்கம் சதாசிவ மூர்த்தத்தைக் குறிப்பது. சதாசிவனுக்குப்பின் வரும் மூர்த்தங்களால் படைத்தல் உள்ளிட்ட அருட் செயல்கள் நடைபெறுகின்றன. இம்மூர்த்தங்கள் சிவனின் சக்தி வடிவங்களாகும். இவற்றிலொன்றின் மூலம் சிவன் அனைத்தையும் படைக்கிறான். இது ‘உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயிர் எல்லாம் ஈன்றும் என்று குறிக்கப்படுகிறது.

சிவன் சக்தியின் மூலம் உலகு உயிர் ஆகியவற்றைப் படைத்தாலும், சிவமோ சக்தியோ விகாரமடைவதில்லை. இது, பவன் பிரமசாரி யாகும் பான்மொழி கன்னி யாகும் என்று விளக்கப்படுகிறது. உயிரைப் படைத்தல் என்பது உயிர் எடுத்த உடம்பைப் படைத்தலாகும். உயிர் உடம்புடன் கூடுதல் பிறத்தல் உடம்பைவிட்டு நீங்குதல் இறத்தல். இத்தன்மைகள் எல்லாம் முற்பிறவிகளில் தவம் செய்து ஞானிகளாக உயர்ந்தவருக்கு தெரியக் கூடியன, என்று இறுதியடி விளக்குகிறது. சித்தியாரின் இச்செய்யுட் கருத்தை நவாலியூர்ப் புலவர் தனக்கேயுரிய தீந்தமிழ்ப் பாடலில் தருவது சுவைமிகுந்தது.

சில உண்மைகளை கதைகள் மூலம் உணர்த்தினால் அவை எளிதாக மனதில் பதியும். புராணக்கதைகள் பொதுவாக சமய உண்மைகளை உணர்த்த எழுந்தவை. அவற்றில் புதைந்துள்ள உண்மைக் கருத்துக்களை விளக்காமல் அக்கதைகளையே சமய உண்மைகளென்று பலர் பேசுவதுண்டு. இதனை நாவலர் வன்மையாகக் கண்டித்துள்ளார். சிவனும் முருகனும் திருமணம் செய்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது. கடவுள் சக்தியோடு கூடி உலகங்களைப் படைக்கச் சங்கற்பித்தலையே கடவுளுடைய திருமணமென்று புராணம் கூறுவது என்று நாவலர் தன் சுப்பிரபோதத்தில் எழுதியுள்ளார். 

நாவலரின் கருத்துக்கமைய சோமசுந்தரப் புலவர் எழுதிய ஒரு சிறந்த நூல் “கந்தபுராணக் கதைகளும் அவைகளுணர்த்தும் உண்மைநூற் கருத்தும். இந்நூலில் வரும் வள்ளி, இறைநிலை கூடும் பக்குவம் அடைந்த ஆன்மா. சூரன், சிங்கன், தாருகன் முதலிய அசுரர்கள் முறையே ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களின் உருவகங்கள். இவை போன்ற விளக்கங்களையும், சைவம் காட்டும் மலபரிபாகம், இருவினையொப்பு, சத்தினிபாதம் முதலியனவற்றையும் கதைகளின் விளக்கமாக இந்த நூல் தருகிறது.

நாவலர் வழி நின்று பணிசெய்த நவாலியூர்ப்புலவர், அவரை உச்சிமேற் கொண்டு பல இடங்களில் பலவாறு போற்றுவதைக் காணலாம். அருவி நீரின் வீழ்ச்சியிற்கூட நாவலரின் கண்டனப் பிரசங்கத்தைக் கேட்டுப் போற்றுகிறார். நீர் வீழ்ச்சியைப் போல் நாவலரின் சொல் வீச்சு இருந்ததெனச் சொல்லாமல், அவரின் கண்டனப் பிரசங்கம் போல் நீர் வீழ்ச்சியின் ஓசை உள்ளதாகப் பாடுகிறார். புலவரின் கற்பனை வளத்துக்கும் கவிதை அழகுக்கும் நாவலரில் கொண்ட பெருமதிப்பக்கும் சான்று பகர்வன இத்தகைய பாடல்கள்.

                ‘உண்ட செந்தமிழ்ச் சைவ நூலமு தோங்க நல்லைவந் தருளு நாவலன்

                கண்ட னப்பிர சங்க மாமெனக் கதிரை மாமலை அருவி காலுமே.

நாவலர் பிறந்திலரேல் ஈழத்தில் தமிழும் சைவமும் அழிவை நோக்கியிருக்கும். தமிழகத்தில் அவை சிதைந்திருக்கும். தமிழ் நிலம் செய்த தவப்பயனால் வந்தவர் அவர் என்பது  புலவரின் கருத்து. திருவளர் தெய்வத் தமிழ்வள நாடு செய்த தவப்பயனேஎன்று போற்றுகிறார். நாவலரைப் போற்றும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரும் தமிழுலகின் போற்றுதலுக்குரியவ