தொடரும் மதமாற்ற முயற்சிகள் - சித்தாந்தரத்தினம் கலாநிதி க. கணேசலிங்கம். updated 30-11-2012
சைவம் உள்ளிட்ட இந்திய மதத்தினரை கிறித்தவத்துக்கு மாற்றும் முயற்சிகள் நீண்ட காலமாக நடைபெறுகினறன. இதனால் சைவ சமயத்தினரதும் பிற இந்திய மதத்தினரதும் விகிதாசாரத் தொகை படிப்படியாகக் குறைகிறது. கிறித்தவரின் தொகை கூடுகிறது.

அண்மைக் காலங்களில் மதமாற்றத்துக்கு புதிய உத்திகள் கையாளப் படுகின்றன. சில ஆண்டுகளின் முன் இந்தியாவுக்கு வருகை தந்த போப்பாண்டவர், இந்த நூற்றாண்டில் இந்தியத் துணைக்கண்டத்தில் கிறீத்துவ மதமே நிலைக்க வேண்டும் என்ற கருத்தில் பேசினார். மதமாற்ற முயற்சிகளைத் தீவரமடையத் தூண்டுவதாக இது இருந்தது.

பொதுவான பிரசாரம்
ஏழ்மையும் அறியாமையும் நிலவும் இடங்களில் பிரச்சாரம் செய்து கிறித்தவ சமயத்தை எளிமையாகப் பரப்ப முடிகிறது. அறிவுமிக்க சமுதாயத்தினரை கிறித்தவம் ஒரு பொழுதும் கவர்ந்ததில்லை.

இந்திய மதக் கொள்கைகள், தெய்வத் திருவுருவங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றைச் சிறுமைப்படுத்திப் பேசுவது அண்மைக் காலம்வரை பொதுவான பிரச்சார முறையாக இருந்தது. மக்களின் ஏழ்மையைப் போக்கியும், சாதி வேறுபாடுகளை அகற்றியும் வளமான வாழ்வைத் தருவதாகவும் கூறிப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அறிவு வளர்ச்சியடைந்த இன்றைய உலகில் இதுபோன்ற பிரச்சாரங்கள் இனியும் பயன் படாதென்பதை கிறித்தவத் தலைமைப்பீடம் உணர்ந்தது. கிறீத்தவ சமுதாயத்திலும் ஏழ்மையும் சாதிப் பாகுபாடுகளும் நிலவுகின்றன. தம்மைக் கிறீத்தவ தலித்துக்கள் (குறைந்த சாதியினர்) என்று கூறி, தமது ஏழ்மை நிiயைக் காடடி அரசாங்க உதவி பெறவும் பலர் முனைவதை இந்திய மாநிலங்களில் காண முடிகிறது. இதனால் கிறீத்தவ மதப் பிரசாரத்துக்கும் மதமாற்ற முயற்சிகளுக்கும் புதிய வழிகளும் அணுகு முறைகளும் தேவையென மதமாற்றம் செய்வோர் உணர்ந்தனர்.

அணுகு முறையில் மாற்றம்
கிறீத்தவர்கள், குறிப்பாகக் கத்தோலிக்கர், பிறமதக் கருத்துக்களை அறிவதும், அவற்றின் வழியில் செல்வதும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற நிலை அண்மைக் காலம்வரை இருந்தது. அவர்களின் தலைமைப் பீடத்தின் கொள்கை இது. அறிவியல் வளர்ச்சியடைந்த இன்றைய உலகில் இது நடைமுறைக்கு ஒவ்வாததென்பதையும், இந்த நிலை தொடரின் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுகிறீத்தவம் நலிவடைந்து விடும் என்பதையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால் அண்மைக் காலத்தில் அவர்களின் சமய நெறியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
கிறீத்தவர் பிறமதக் கருத்துக்களை அறிவதும், அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு ஒழுகுவதும் உகந்தன என்பதும் உணர்த்தப்பட்டன. தமது சமயம் சார்ந்த திருவுருவங்களை அந்தந்தப் பகுதிகளுக்குப் பழக்கமான வடிவங்களோடும் முகபாவங்களோடும் அமைத்தல் வேண்டுமென்ற கருத்துத் தெரிவிக்கப் பட்டது. இதனால் கிறீத்தவ சமயத் தெய்வங்களும், வழிபாட்டு முறைகளும் இன்று சைவர்கள் உள்ளிட்ட இந்திய மதத்தினரைக் கவரத் தக்கனவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. வழிபாட்டு முறைகளோடு, அவற்றைக் குறித்த சொல்லாட்சிகள் கூட, புதிதாக உருவாக்கப் பட்டுள்ளன. வேதாகமம், பலிபீடம், விபூதித் திருவிழா போன்ற சொற்கள் இவற்றை உணர்த்துவன.

தத்துவம் இல்லாத் தன்மை
இந்திய சமயங்கள் போலன்றி தமக்கெனத் தனியான தத்துவங்கள் இல்லாதவை கிறீத்துவமதப் பிரிவுகள். காலத்துக்குக் காலம் மேலை நாடுகளில் தோன்றிய தத்துவங்களை உள்வாங்கி வளர்ந்தவை அவை. அறிவியல் வளர்ந்த இன்றைய நிலையில் புதிய தத்துவக் கருத்துக்கள் உருவாக, முன்னைய கருத்துகள் சில வலுவிழந்து கழிகின்றன.
நல்ல வழியில் வாழ்ந்தால் நிரந்தர சொர்க்கம் கிடைக்கும், தீய வழியில் வாழ்ந்தால் நிரந்தர நரகம் கிடைக்கும் என்பது கிறீத்தவக் கொள்கை. நிரந்தர நரகம் அடைந்தவன் அதிலிருந்து மீண்டு திருந்தவே முடியாதென்ற நிலை இது. மனிதன் இன்று அனுபவிக்கும் துன்பம் துயருக்குக் காரணம் ஆதியில் தோன்றிய முதல் மனிதர்களான ஆதாம் ஏவாள் ஆகியோர் செய்த குற்றம் என்பதும் கீறித்தவக் கருத்து. இதன்படி எப்பவும் யாரோ செய்த பிழையால் நாம் இன்று துயர் அடைகிறோம் என்று கொள்ளவேண்டி உள்ளது. இத்தகைய பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல கருத்துக்களைக் கொண்டது.


கிறீத்தவ மதம்.
விஞ்ஞான உண்மைகளுக்கும், அறிவுசார் கருத்துக்களுக்கும் எதிராகக் கிறீத்தவம் முன்னர் செயற்பட்டதுண்டு. ஒரு விஞ்ஞானியின் கருத்து கிறீத்தவக் கொள்கைக்கு மாறாக இருப்பின் அந்த விஞ்ஞானி தண்டிக்கப்படும் நிலையிருந்தது. சூரியனைச் சுற்றி பூமியும் பிற கோள்களும் சுழல்கின்றன என்ற உண்மையை பதினாறாம் நூற்றாண்டு விஞ்ஞானி சேர் நிக்கொலஸ் கொப்பனிக்கஸ் தனது ஆய்வின் மூலம் கண்டு பிடித்தார். ஆனால் பூமியைச் சுற்றியே சூரியனும் பிறவும் சுழல்கின்றன என்பது அன்றைய கிறீத்தவக் கொள்கையாக இருந்தது. இதனால் கிறீத்தவ மதபீடத்தின் தண்டனைக்கஞ்சி அவர் தனது ஆய்வு முடிவை அன்று வெளியிட முடியவில்லை. இத்தகைய நிலை அறிவியல் சார்ந்த தத்துவத்தைக் கொண்ட சைவத்தில் என்றும் இருந்ததில்லை.

இந்திய தத்துவ அறிவு, குறிப்பாக அறிவியல் சார்ந்த சைவசித்தாந்த தத்துவ அறிவு, மத மாற்றத்துக்குத் துணைபுரியும் என்பதை முன்னரே கிறீத்துமத போதகர் சிலர் உணர்ந்துள்ளனர். நூறாண்டுகளுக்குமுன் ஜேர்மன் பாதிரியார் ஒருவர் ஜேர்மன் மொழியிலே சைவசித்தாந்தம் குறித்த நூலொன்று ((‘Saiva Siddhanta’ by H.W. Schomeris) எழுதியிருந்தார். அதன் முன்னுரையில், இந்தியாவிலுள்ள மதமாற்றம் செய்யும் மிஷனரிமார், குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ளவர்கள், சைவசித்தாந்தத்தை ஓரளவாவது அறிந்திருப்பது அவசியம், எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிவஞானசித்தியார் ஒரு சிறந்த சைவசித்தாந்த நூல். அதனை உரை நடையில் சிறப்பாக எழுதி 'சிவஞான சித்தியார் சுபட்ச வசனம்' என்ற பெயரில் ஈழத்தைச் சேர்ந்த க. சா. முருகேசுப்போதகர் என்பவர் பல ஆண்டுகளின்முன் நூலாக வெளியிட்டார். அதன் முன்னுரையில் அவர் எழுதிய பின்வரும் கருத்து அவர்களின் நோக்கத்தைப் புலப்படுத்துவதாக உள்ளது.

'கிறீத்தவரகளாகிய நாம் சைவருக்குட் சுவிசேஷ ஊழியஞ் செய்கின்றமையால் சைவசித்தாந்த சாஷ்திரத்தைப் பற்றி நாம் நம்மாலியன்றளவு அறிதல் நமக்கு அதிக பிரயோசனமாயிருக்கும்'.

புதிய வழிகள்
சில ஆண்டுகளின்முன் தமிழ் நாட்டிலுள்ள கிறீத்தவர் ஒருவர் 'விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம்' என்ற பொருளில் ஒப்பாய்வு செய்து முனைவர் (Doctor) பட்டம் பெற்றார். திருவள்ளுவர் தமிழகம் வந்த புனித தோமையர் (ST. Thomas) என்ற கிறீத்தவ சீடரிடமிருந்து விவிலியக் கருத்துக்களை அறிந்து அதன் அடிப்படையில் திருக்குறள் எழுதினார் என்றும், பின்னால் வந்த சைவசமய குரவர்கள் தமது தேவார திருவாசக நூல்களை இதன் அடிப்படையில் எழுதினார்கள என்றும் தமது ஆய்வு மூலம் 'கண்டு பிடித்து' எழுதியுள்ளார். இந்த நூலுக்கு தமிழகத்திலுள்ள பல்கலைக் கழகம் ஒன்று டாக்டர் பட்டம் கொடுத்தது வேதனை அளிப்பது. திருவள்ளுவரைச் சிறுமைப்படுத்துவது இது. இதனை மறுத்து, தருமபுர ஆதீனம் 1991ல் 'விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்' என்ற நூலை மகாவித்துவான் திரு அருணைவடிவேல் முதலியாரைக் கொண்டெழுதி வெளியிட்டது.

இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான பலவும் கிறீத்தவர்களால் எழுதி வெளியிடப்படுகின்றன. சைவ வைணவ அருளாளரைச் சிறுமைப்படுத்தியும், ஆரியர் திராவிடர் என்ற பிளவை உண்டுபண்ணியும், திராவிடர் சமயம் கிறீத்தவ சமயம் சார்ந்த உயர் கருத்துக்கள் கொண்டதென்றும் பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. சஞ்சிகைகள், பத்திரிகைகள் இந்த நோக்கில் வெளியிடப் படுகின்றன. 'திராவிடர் சமயம்' என்பது இதிலொன்று. சைவசித்தாந்த முதனூலாகிய சிவஞான சூத்திரத்தில் கூறப்படும் குருவின் இலக்கணம் பரம பிதாவான இயேசுவுக்கு மட்டுமே பொருந்துமென்று எழுதி, 'பரமகுரு' என்ற பெயரில் ஒரு நூலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற பொய்யுரைகள், பிரசாரங்கள் இன்று இணைய வலயத்தின் (internet) மூலமும் செய்யப்படுகின்றன. அறிஞர் உலகில் கூட தமது சமயம் தத்தும் என்பவற்றை அறியாதவர்களாகவே பலர் இருக்கின்றனர். இவர்களைக் கவரக் கூடிய முறையில் இந்திய தத்துவங்களின் பின்னணியில் பிரசாரம் செய்யப் படுகிறது.

ஈழத்தில் மதமாற்றம்
ஈழநாடு முன்னர் ஒல்லாந்தர் (Hollanders, Dutch) போர்த்துக்கேசர் ஆகியவர்களால் ஆளப்பட்டது. அவர்கள் ஆட்சியில் சைவத்தமிழர் தமது சமயத்தையும் மொழியையும் பேண முடியாது மதம் மாற வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது. சைவக் கோயில்கள் இடிக்கப்பட்டு கிறீத்தவக் கோயில்கள் எழுந்தன. புலர் மதம் மாறினர். பின்னர் வந்த ஆங்கிலேயர் ஆட்சியில் உணவு, உடை, பணம், உத்தியோகம் என்பன வழங்கியும், சைவ நிந்தனையும் பொய்புனைந்த பிரசாரம் செய்தும் மதமாற்றம் செய்யப்பட்டது. தவத்திரு ஆறுமுகநாவலரும் அவர் வழியில் வந்த பெருமக்களும் செய்த அரும் பணிகளால் மதமாற்றம் ஓரளவு தடுத்து நிறுத்தப்பட்டது. நாவலர் பிறந்திலரேல் ஈழத்தில் சைவம் அழிந்திருக்கும் தமிழகத்தில் சைவம் சிதைந்திருக்கும்.

மத மாற்றத்தினால் சைவத்தமிழ் மக்களின் விகிதாசரரம் குறைந்தது. சில பகுதிகள் கிறீத்தவ பகுதிகளாக மாறின. பின்னர் வந்த அரசின் சிங்கள மயமாக்கும் முயற்சியால், இத்தகைய இடங்கள் தமிழரே இல்லாத சிங்களப் பகுதிகளாகும் நிலை உருவானது. நீர்கொழும்பு, சிலாபம் போன்ற இடங்கள் உதாரணங்கள். இன்று, நீண்ட போரினால் பல இழப்புக்களுக்கு ஆளாகி அழியும் தமிழரின் நிலத்தில் பல கிறீத்தவ ஆலயங்கள் கட்டப்படுகின்றன. மதமாற்றம் தீவிரமடைகிறது.
கிறீத்தவர் எவரும் இல்லாத கிராமங்களிலும் இன்று கிறீத்தவக் கோயில்கள் கட்டப்படுகின்றன. சைவர்கள் மட்டுமே வாழும் ஒரு தமிழ்க் கிராமம் குப்பிளான் என்ற ஊர். ஆறுமுக நாலருக்குத் துணையாக நின்று சைவப்பணி செய்த மகான் செந்திநாதையர் பிறந்த இடம் இது. இங்கே ஊர்மக்களின் ஆட்சேபனையையும் பொருட்படுத்தாமல் கிறீத்தவக் கோயில் ஒன்று இன்று கட்டப்பட்டுள்ளது. மக்களின் ஆதரவற்ற, நலிவடைந்த நிலையைப் பயன் படுத்துவதோடு, பலவந்தமாகத் தமது கோயில்களைக் கட்டுவதும் சமயத்தைத் திணிப்பதும் மதமாற்ற முயற்சிளாக உள்ளன. இவற்றோடு அரச அனுசரணையுடன் புத்த கோயில்களும் கட்டப்படும் அவலநிலையும் தோன்றியுள்ளது.

உணர்வும் செயலும்
மதமாற்றத்தினால் எமது சமயம் மட்டுமன்றி, பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவையும் அழிகின்றன. இதனை மகாத்மா காந்தியே முன்னர் குறிப்பிட்டுள்ளார். அவரது Haryan என்ற பத்திரிகையில் 11-05-1935ல் பின்வருமாறு எழுதியுள்ளார்:

‘If I had the power and could legislate, I should certainly stop all proselytizing. It is a cause of much avoidable conflict between classes and unnecessary heart burning among missionaries. …. In Hindu households the advent of a missionary has meant the disruption of the family, coming in the wake of dress, manners, language, food and drink’.


'எனக்கு அதிகாரமும் இருந்து சட்டமாக்கவும் முடியுமானால், மதமாற்றத்தை நான் நிச்சயமாக தடை செய்வேன். பல்வேறு சமூகத்தினரிடை தவிர்க்கக் கூடிய மோதல்களுக்கும் மிஷனரிமாரின் மன உளைச்சலுக்கும் இது காரணமாக உள்ளது. .... இந்துக் குடும்பங்களில் மிஷனரிமாரின் வருகை உடை, பழக்க வழக்கம், மொழி, உணவு, குடிவகை போன்றவற்றால் எழும் குடும்பச் சீர்குலைவுக்குக் காரணமாகவுள்ளது'.

காந்தியைப் போற்றும் இந்தியாவில் இன்னமும் மதமாற்றம் தொடர்கிறது. இந்துக்கள் வாழ்ந்த இடங்கள் கிறீத்தவ இடங்களாக மாறுகின்றன. தெற்கே கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டம் என மாற்ற வேண்டுமென்று கிறீத்தவர்கள் அண்மையில் கோரிக்கை விடுத்தனர்.

தீவரமடையும் மதமாற்ற முயற்சிகள் தொடர்ந்தால், 'சைவம், வைணவம் உள்ளிட்ட இந்திய மதங்கள் முன்பு இருந்தன', என்ற நிலை ஏற்படும். இதனை உணர்ந்து, இந்து மத நிறுவனங்களும் அறிஞர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து விரைவில் செயற்படுவது அவசியம். இல்லையேல், எமது சமயத்தோடு பண்பாடு, பாரம்பரியம், கலை, கலாச்சாரம், மொழி ஆகிய அனைத்தையும் இழக்க நேரிடும்.

----------------------------------------------------------------