சமய கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாப்பதுடன் அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் முயற்சியாகவும் மகாசிவராத்திரி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம், குப்பிளான் சொக்கவளவு சோதிவிநாயகர் அறநெறிப் பாடசாலைப் பொறுப்பாசிரியர் பொன்.சந்திரவேல். updated 17-02-2015


சமய,கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாப்பதுடன் அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் முயற்சியாகவும் இந்த மகாசிவராத்திரி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம்.அத்துடன் எமது பிரதேசத்திலுள்ள கலைகளை அழிந்து போகாத முறையில் பாதுகாத்து எமது எதிர்காலத் தலைமுறைக்கு அவற்றைக் கையளிக்க வேண்டும். இதற்கு நாங்கள் அறநெறிப் பாடசாலையை ஓர் களமாகப் பயன்படுத்துவோம்.

இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார் குப்பிளான் சொக்கவளவு சோதிவிநாயகர் அறநெறிப் பாடசாலைப் பொறுப்பாசிரியரும், ஆலய பரிபாலன சபைச் செயலாளருமான பொன்.சந்திரவேல்.

யாழ்.குப்பிளான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய பரிபாலன சபையும் அறநெறிப் பாடசாலையும் இணைந்து உள்நாட்டு வெளிநாட்டு அன்பர்களின் நிதி அணுசரணையில் நடாத்தும் மகாசிவராத்திரி சமய கலை நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(17.02.2015) இரவு 07.30 மணி முதல் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.குறித்த நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடத்தைப் போன்று நாம் இந்த வருடமும் மகாசிவராத்திரி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடவுள்ளோம். நாம் இந்தக் கலை நிகழ்வுகளை நடாத்துவதன் நோக்கம் குப்பிளான், ஏழாலை பிரதேசங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கலையம்சங்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு மேடையை அமைத்துக் கொடுக்கும் வாய்ப்பாகவும் இந்த நிகழ்வை நாம் ஒழுங்குபடுத்தியுள்ளோம்.
இந்த நிகழவிற்கு உள்நாடடு, வெளிநாட்டு அன்பர்கள் நிதியுதவி வழங்கியுள்ளனர். அவர்களுடைய அணுசரணையில் இந்தப் பிரதேசப் பிள்ளைகளின் பல்வேறுபட்ட கலை ஆற்றல்கலை இந்த மேடையினூடாக வெளிக் கொணர முடியுமென நாம் நம்புகிறோம். உண்மையிலேயே ஒவ்வொரு பிள்ளைகளுக்குள்ளும் பல்வேறு ஆற்றல்கள் மறைந்திருக்கின்றன. ஆடல்,பாடல்,வில்லிசை எனப் பல்வேறு துறைசார்ந்த பிள்ளைகளிருக்கின்றனர். அவர்களுடைய ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து அவர்களின் சிந்தனைகள்,பல்வேறு சிறப்பியல்புகள்,அழகியல் உணர்வுகளை எமது மக்களுக்கு எடுத்தியம்பி அதனூடாகச் சமய கலாசார விழுமியங்களை கட்டிக் காப்பதே எமது நோக்கம் என்றார்.

நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகவும்,வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஸ் சிறப்பு விருந்தினராகவும், குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் த.தவராஜா, குப்பிளான் வடக்குக் கிராம அலுவலர் ந.நவசாந்தன், யாழ்ப்பாண மாவட்ட செயலக இந்துசமய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.உதயபாலன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த விழாவில் பண்ணிசை,நடனம்,இசையரங்கு,பக்திப் பாடல்கள்,பஜனை,நாடகம்,வில்லிசை போன்ற கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.


செய்தித் தொகுப்பு மற்றும் படப்பிடிப்பு:-செ.ரவிசாந்.